Published:Updated:

தூத்துக்குடி: `எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை!’ - மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

``எங்களது பிரார்த்தனை, வேள்விகளுக்கு பலன் கிடைத்துள்ளது” எனக் கூறி, தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017-ல் தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாகக் கூறியதுடன், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக பெயர் மாற்றம் செய்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதுடன், உறுப்பினர்கள் சேர்க்கையும் வேகமாக நடைபெற்றது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ரஜினி எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. அதில், ``எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. `கொரோனா காலத்தில் மக்களைச் சந்திப்பது சரியல்ல’ என டாக்டர்கள் அறுவுறுத்தியிருக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் யாகம்
ரஜினி ரசிகர்கள் யாகம்

மக்களைச் சந்திக்காமல், நேரடிப் பிரசாரத்தில் ஈடுபடாமல் கட்சியை ஆரம்பிப்பதில் சிக்கல் உள்ளது’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. `இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், எனது உடல்நிலை பற்றி கூறப்பட்டிருக்கும் தகவல் உண்மை” எனப் பின்னர் ரஜினிகாந்த் விளக்கமளித்தார். மேலும், ``மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பதாகக் கூறினார். இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,``ஜனவரியில் கட்சியைத் தொடங்குகிறேன். டிசம்பர் 31-ம் தேதி, அதற்கான தேதியை அறிவிக்கிறேன். மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்.

ரஜினி ரசிகர்கள் யாகம்
ரஜினி ரசிகர்கள் யாகம்

இப்போ இல்லேன்னா எப்போவும் இல்ல. ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பிலும் தான் அரசியலுக்கு வருவது குறித்துக் கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ரஜினியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவலையடுத்து, கடந்த 24-ம் தேதி, திருச்செந்தூர் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தினர் திருவாவடுதுறை ஆதினம் மண்டபத்தின் ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் ரஜினி உடல் ஆரோக்கியம் பெறவும், ஏற்கெனவே கூறியபடி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு ``சத்ரு சம்ஹார திரிசதி யாகம்” செய்தனர். இந்த யாக பூஜையில் 108 நாமாவளி மந்திரங்கள் சொல்லி யாக, வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில், ரஜினியின் இந்த அறிவிப்பை வரவேற்கும்விதமாக வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு!’ - ரஜினி

இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறுகையில், ``ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாகப் பெயர் மாற்றம் செய்தபோதே ரொம்ப மகிழ்ச்சியடைந்தோம். `சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது அரசியலில் போட்டியிடுவது குறித்துச் சொல்றேன்’னு தலைவர் சொன்னதும் பொறுமை காத்தோம். ஆனா, போன மாசம் தலைவரின் உடல்நிலை குறித்துத் தகவல் வெளியானதும் மிகுந்த மன வருத்தம் அடைந்தோம்.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சூரசம்ஹார மூர்த்தி சந்நிதியில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யவும், எடுத்த காரியத்தில் தடை ஏற்படாமல் வெற்றி கிடைக்கவும், நீண்ட ஆரோக்கியத்தைப் பெறும் வகையில் சத்ருசம்ஹார யாகம் நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது கோயிலுக்குள் யாகம் நடத்த அனுமதி இல்லை என்பதால், திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் இந்த பூஜையை நடத்தினோம். மிகுந்த நம்பிக்கையுடன் செய்த எங்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தலைவர் எப்போதுமே கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருந்ததில்லை. அவர் சொன்னபடி நிச்சம் கட்சியைத் தொடங்குவதுடன் வரும் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவார்” என்றனர் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு