Published:Updated:

``விவேகானந்தர் மீது காட்டப்படும் அக்கறையைத் திருவள்ளுவர் மீது காட்டவில்லை!”- கனிமொழி

கனிமொழி
கனிமொழி

``அ.தி.மு.க ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கும் அக்கறையைத் தமிழர்களுக்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்குக் காட்டவில்லை” எனத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் தொடர்ந்து வலுவாக எதிர்த்து வருகின்றனர்.

கனிமொழி
கனிமொழி

எல்லா எதிர்க்கட்சிகளும் இத்திட்டதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட அரசு, `மக்களின் கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடிய அவசியமில்லை, சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை' என்ற ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

விவசாயிகளையும் விவசாயத்தையும் தமிழகத்தில் முற்றிலுமாக அழித்துவிடக் கூடிய திட்டங்களை மத்திய அரசு ஏன் தொடர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கிறோம். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கக் கூடாது என்பதையே வழக்கமாக்கியுள்ளனர்.

கனிமொழி
கனிமொழி

திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டனக் கூட்டம் நடத்தியும் எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இந்த அ.தி.மு.க ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கும் அக்கறையைத் தமிழர்களுக்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்குக் காட்டவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.

சுப்பிரமணிய சாமியின் கருத்துகளுக்குப் பதில் கூற வேண்டியதில்லை. உள்கட்சிப் பூசலில் அவர்கூறும் கருத்துகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க் கொண்டிருக்கிறது. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

கனிமொழி
கனிமொழி

பல லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யக்கூடிய ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கினால் ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை நாம் சந்திக்கக்கூடும்” என்றார்.

பின் செல்ல