அலசல்
அரசியல்
Published:Updated:

“ஆயுதப்போராட்டம்... அழித்தொழிப்பு தவறு!”

தோழர் தியாகு
பிரீமியம் ஸ்டோரி
News
தோழர் தியாகு

மனம் திறக்கிறார் தோழர் தியாகு

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது, ஆயுத வழியில் போராடிய இயக்கங்களை புறந்தள்ளிவிட முடியாது. இந்தியாவில் ஆயுத வழியில் போராடி, தூக்குத்தண்டனை கைதியாக 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, பிறகு விடுதலையாகி இன்று ஜனநாயகப் போராட்டங்களில் பங்கேற்றுவருபவர் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு. காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்த இவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இந்தியாவில் ஆயுத வழியில் போராடும் கம்யூனிஸ்ட் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?’’

“ஆயுதப்போராட்டம்... அழித்தொழிப்பு தவறு!”

‘‘சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆங்கிலேயர்களிடம் கடைப்பிடித்த சில சமரச நடவடிக்கைகளை, ஒருசில அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும், போரில் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தின.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க போதுமானதாக இல்லை எனக் கருதிய சந்திரசேகர் ஆசாத், 1928-ம் ஆண்டில் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி (Socialist Republican Army) எனும் ஆயுதம் ஏந்திய அமைப்பைத் தொடங்கினார். அதுவே, கம்யூனிஸ்ட்டுகளின் முதல் ஆயுத அமைப்பு. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு எல்லோரும் இந்த அமைப்பின் வழி வந்தவர்களே.’’

‘‘இந்தியாவில் ஆயுதவழிப் போராட்டங்களுக்கான தேவை என்னவாக இருந்தது?’’

‘‘இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் எந்தப் பகுதியிலும் அடக்குமுறையும் அதற்கான கருவிகளும் இருக்கும் வரை, ஆயுதப் போராட்டத்துக்கான தேவை இருக்கும். அநீதியான போர்கள் நடைபெறும் உலகில், நீதிக்கான போர்களும் இருந்துகொண்டே இருக்கும்.’’

‘‘இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆயுதப்போராட்டங்களைப் பற்றிச் சொல்ல இயலுமா?’’

‘‘நிறைய இருக்கின்றன. 1938-ம் ஆண்டில் கேரளாவில் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் புன்னப்புரா - வயலார் ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள். 1946-47ல் மேற்குவங்கம் தேபகாவில் விவசாயிகளுக்கு குத்தகையில் மூன்றில் ஒரு பங்கு வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார்கள். இவற்றைவிட வீரியமாக, 1946-1951ல் தெலங்கானாவில் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக வீரத் தெலங்கானா ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாக, 3,000 கிராமங்கள் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்டு, மக்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

1948-ம் ஆண்டில் இந்திய அரசு அந்தப் போராட்டத்தில் தலையிட்டது. நிஜாமை கைதுசெய்யப்போவதாக அறிவித்தார் நேரு. அதற்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் போராட்டம் தொடர்ந்தது. நிஜாம் சரணடைந்ததும், அவரையே கவர்னராக நியமித்தார் நேரு.  மக்களிடம் கொடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு, நிலச்சுவான்தார்களிடம் அளிக்கப் பட்டன. ஆனாலும், அந்தப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் மிக வீரியமானது. குறிப்பாக, மொழிவழி மாநில உருவாக்கத்துக்கு அந்தப் போராட்டம்தான் கைகொடுத்தது.’’

‘‘மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதப் போராட்டம்தானே முதன்மையான காரணம்?’’

தோழர் தியாகு
தோழர் தியாகு

‘‘அது மட்டுமே காரணமல்ல. ராயலசீமா, ஆந்திரா, தெலங்கானா என மூன்று பகுதிகளைக்கொண்டது ஆந்திரா. நிஜாம் ஆட்சியின்கீழ் தெலங்கானா இருந்தது. ஆந்திராவும் ராயலசீமாவும் பிரிட்டிஷ் அரசுக்குக்கீழ் இருந்தன. அப்போது, ‘தெலங்கானாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பேணப் படவேண்டும். அதற்கு, தெலுங்கு பேசும் மக்கள் எல்லோரும் ஒரே அரசியலமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்’ என தெலங்கானா மக்களின் உரிமைக்காக ஆந்திர மக்கள் போராடினார்கள்.  அதற்காக, `ஆந்திர மகாசபா’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்ட்டுகள் என அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். ‘விசால ஆந்திரத்தில் மக்கள் ராஜ்ஜியம்’ என்பதே அந்தப் போராட்டத்தின் முழக்கமாக இருந்தது. இந்த முழக்கம்தான் தெலங்கானா ஆயுதப்போராட் டத்துக்கு மக்களை ஒன்றுசேர்த்தது. அந்தப் போராட்டமும் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதப் போராட்டமும்தான் மொழிவழி மாநிலப் பிரிவினைக்குக் காரணமாக அமைந்தன.’’

‘‘இந்தியாவில் நக்சல்பாரி மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகள் எப்போது தொடங்கின?’’

‘‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் ஆதரவுப்போக்கைக் கண்டித்து, 1964-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. புரட்சி உண்டாகிவிடும் என நம்பிக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு, அந்த இயக்கத்தின்மீதும் ஒருசில ஆண்டுகளில் நம்பிக்கை தகர்ந்தது. 1967-ம் ஆண்டு மே 25 அன்று இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில்  உள்ள ‘நக்சல்பாரி’ என்ற கிராமத்தில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் காவல் துறையினரால் படுகொலை செய்யப் பட்டனர். அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகள்,  ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். சாரு மஜும்தார் மற்றும் கானு சன்யால் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினர். பிறகு அது ஆயுதப்போராட்ட இயக்கமாக வளர்ந்தது.

மேற்குவங்கத்தில் தொடங்கிய நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கம்  கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் பரவியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்  சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர். பிறகு 1969-ம் ஆண்டு கொல்கத்தாவில் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22-ம் தேதி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) - எம்.எல் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தேர்தலைப் புறக்கணித்து, ஆயுதவழியில் போராடும் அமைப்பாகத் தொடங்கப்பட்டது. இதன் அகில இந்திய செயலாளராக சாரு மஜும்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலக்கிழார்களையும் ஆதிக்கம் செய்யும் பண்ணையார்களையும் அழித்தொழிப்பது இந்த இயக்கத்தின் திட்டம். பிறகு அந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டவர்கள்

`சி.பி.ஐ எம்.எல்’ என்ற பெயரிலும், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக் கொண்ட பல்வேறு பிரிவுகள் `மாவோயிஸ்ட்’ என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றனர்.’’

‘‘தமிழகத்தில் நடந்த கம்யூனிஸ்ட் இயக்க ஆயுதவழிப் போராட்டங்கள் குறித்து?”

தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானேன்.
தோழர் தியாகு
தோழர் தியாகு
தோழர் தியாகு

‘‘சாரு மஜும்தார் தலைமையிலான எம்.எல் இயக்கம்தான் தமிழகத்திலும் பரவியது. அந்த இயக்கத்தில் பலரும் உறுப்பினர் ஆனார்கள். அந்தவகையில் அங்கு இணைந்த முதல் மாணவன் நான். சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும், பண்ணையாளர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் தமிழகத்திலும் சில ஆயுதவழி தாக்குதல்கள் நடந்தன. ஒரு தாக்குதலில் நான் பிடிபட்டு, தூக்குத்தண்டனை கைதி ஆனேன். பிறகு, தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப் பட்டு, 15 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலையானேன். அந்த நேரத்தில் தமிழரசன், புலவர் கலியபெருமாள், லெனின்  உள்ளிட்டோர் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து ஆயுதவழியிலான தாக்குதல்களை நடத்தினர். அதுவும் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. தற்போது, ஆயுதவழியில் செயல்படும் எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.’’

‘‘ஆயுதப்போராட்டங்களால் பெற்ற, இழந்த விஷயங்களாக நீங்கள் கருதுவது?’’

‘‘மொழிவழி மாநிலங்கள் அமைய ஆயுதப்போராட்டங்களும் ஒரு காரணம். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பல நிலச்சீர்திருத்தங்களுக்கும் இந்தப் போராட்டங்களே தூண்டுதலாக அமைந்தன. தொழிலாளர் நலனுக்கான சட்டங்களையும் இவையே சாத்தியப் படுத்தின. ஆனால், ஆயுதப்போராட்டங்கள் தவறு; மிகச்சிறிய அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலியாயினர். ‘அழித்தொழிப்பு தவறு’ எனப் புரிந்துகொள்வதற்கு முன்பே அது நிகழ்ந்துவிட்டது.’’