Published:Updated:

இந்து இயக்கத் தலைவர்களுக்குக் குறி! - அலர்ட் கொடுத்ததா ஐ.பி?

மத்திய உள்துறையின் அலர்ட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்து இயக்கத் தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராம கோபாலன், மோகன் பகவத், அர்ஜுன் சம்பத்
ராம கோபாலன், மோகன் பகவத், அர்ஜுன் சம்பத்

கடந்த ஆறு மாதங்களாக என்.ஐ.ஏ-வின் வேட்டை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் என நாடு முழுவதும் அதிரடியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நான்கு முறைக்கும் மேல் நடந்த சோதனையில், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சுமார் 17 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள இந்து இயக்கத் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

இதுகுறித்து நம்மிடம் பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், ``முன்பெல்லாம் கோயம்புத்தூர் மட்டும்தான் அடிப்படைவாதிகளின் கேந்திரமாக விளங்கியது. இப்போது, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தீவிரவாத கருத்துப் பிரசாரம் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ரகசியக் கூட்டமொன்றில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தலையை கொண்டுவருவோம் என சில அடிப்படைவாதிகள் சத்தியம் செய்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசியவர்களை முழுமையாகக் கண்காணித்து வருகிறோம்.

மதமாற்ற பிரசாரத்தைக் கண்டித்ததற்காக, திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் கொல்லப்பட்டார். என்.ஐ.ஏ விசாரணையிலுள்ள இந்த வழக்கு பல முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அர்ஜுன் சம்பத், ராம கோபாலன், ஹெச்.ராஜா உட்பட பல இந்துமத முக்கியஸ்தர்களின் உயிருக்குத் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதைத் தொடர்ந்து, இந்த அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடங்கி, தமிழகத்தின் அர்ஜுன் சம்பத், ராமகோபாலன் வரையில் இந்துமத முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாங்களும் எங்கள் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம்” என்றார்.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சில இளைஞர்கள் சிரியாவிலுள்ள ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர். இவர்கள்தாம் அந்த இயக்கத்தின் `வெப்சைட்’, தகவல் பறிமாற்றங்களைக் கவனிக்கிறார்கள். சமீபகாலமாக ஐ.எஸ் இயக்கம் வெளியிடும் ஆடியோ, வீடியோ செய்தித் தொகுப்புகளில் தமிழ், மலையாள மொழியாக்கமும் இடம் பெறுகிறது. தமிழகத்திலும் கேரளாவிலும் இந்த இயக்கத்தைச் சார்ந்த அனுதாபிகள் பெருகியிருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இவ்விரு மாநிலங்களிலும் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் மத்திய உளவுத்துறை தீவிரமாகக் கண்காணிக்கிறதாம்.

Vikatan

தீவிரவாத எச்சரிக்கை குறித்து, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம். ``எனக்கு அச்சுறுத்தல் இருப்பது புதிதல்ல. 1985-ல் இந்தியாவிலேயே முதல்முறையாக எனக்கு எதிராக `பத்வா’ விடுக்கப்பட்டது. என்னுடைய குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டல்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. மதநல்லிணக்கம் என்கிற பெயரில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவி அக்கட்சியைத் தவறாக வழிநடத்துகிறார்கள். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அந்நபர்களுடனான சகவாசத்தால் பலியாவது தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

கடந்த இரண்டு நாள்களாக எங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது உண்மை. தமிழகத்தில் என்.ஐ.ஏ-வின் தீவிர வேட்டைகளால் அரண்டு போயுள்ள தீவிரவாதிகள், இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் உயிர் மீது குறி வைத்துள்ளனர். வீரகணேசன் கொலையில் தொடங்கி, திராவிட பரூக், ஜிம் ராமலிங்கம் கொலை வரையில் எத்தனையோ பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். என் உயிர் எப்போது போக வேண்டுமென்பது கடவுளுக்குத் தெரியும். கடவுள் தீர்மானிக்காத வரையில், எவ்வளவு பெரிய ஆயுதம் கொண்டுவந்தாலும் எனக்கு எதுவும் ஆகாது” என்றார்.