Published:Updated:

`அப்போது ம.நீ.ம வேட்பாளர்கள்; இப்போது பா.ஜ.க! - பொன்னாரைச் சந்தித்த மூவர்

ஏற்கெனவே மய்யத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் பி.ஜே.பியில் இணைந்தார்.

கமல்
கமல்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் மூன்று வேட்பாளர்கள் பி.ஜே.பியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நாளை பரமக்குடியில் தன் தந்தையாருக்குச் சிலைத் திறப்பு விழாவைச் சிறப்பாக நடத்த கமல்ஹாசன் ஆயத்தமாகி வருகிறார். அதைத் தொடர்ந்து அவருடைய 60 ஆண்டு கலையுலகப் பயணத்தைக் கொண்டாடவும் திரையுலகத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். தொடர் நிகழ்ச்சிகளால் கமல் உற்சாகமாக இருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை பி.ஜே.பியினர் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் தங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் பிரித்து விடுவதால் நோட்டோவுடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது என்பதை விவாதித்த பி.ஜே.பி மாநிலத் தலைமை, மற்ற கட்சிகளிலிருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்க திட்டமிட்டுச் செயல்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

ம.நீ.ம வேட்பாளர்கள்
ம.நீ.ம வேட்பாளர்கள்

ஏற்கெனவே மய்யத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் பி.ஜே.பியில் இணைந்தார்.

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் தொகுதி ரவி ஆகியோர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பி.ஜே.பியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பிரதமர் மோடியின் கொள்கைகள் பிடித்துள்ளதால் பி.ஜே.பியில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கமல்
கமல்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்ய முக்கிய நிர்வாகிகள் இன்னும் சிலர் பி.ஜே.பிக்கு வரவுள்ளதாகவும் இதற்கான அசைன்மென்ட் ஆர்.கே.சுரேஷிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.