Published:Updated:

`தியேட்டர்களில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்' - கடம்பூர் ராஜு தகவல்!

இ.கார்த்திகேயன்

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Minister Kadambur Raju
Minister Kadambur Raju

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வரது வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவங்களை ஆய்வு செய்துள்ளார், என்ன ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்குள்ள மருத்துவமனை நிர்வாகிகளை முதல்வர் சந்தித்தார்.

Minister Kadambur Raju
Minister Kadambur Raju

அங்கு உள்ளதைப்போல மருத்துவமனை ஏர் ஆம்புலன்ஸ் வசதியை விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதியைக் கொண்டு வர வேண்டுமென்று முயற்சி எடுத்துள்ளார். இது எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. இதில் என்ன மர்மம் இருக்குது என்று தெரியவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுவரை பலமுறை வெளிநாடு சென்றிருக்கிறார். அதைப்பற்றி என்றாவது ஊடகங்களில் வந்திருக்கிறதா? அவர் எதற்காக வெளிநாடு சென்றார் என்று அவர்தான் வெள்ளை அறிக்கை விட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்குதான். அவரைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கும் உரிமை இருக்கிறது. அரசியல் நாகரிகம் கருதி அதை நாங்கள் கேட்கவில்லை.

சிடி சினிமா, தங்கம் தியேட்டர், மீனாட்சி பாரடைஸ்... தூங்காநகர் மதுரையின் அழிந்த அடையாளங்கள்! #MaduraiTheatres

அ.ம.மு.கவில் புதியதாக மாவட்டச் செயலாளர்களை தினகரன் நியமிக்கவில்லை. அக்கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தாய்க்கழகமான அ.தி.மு.கவில் இணைந்து விட்டனர். ஆகையால், அந்தக் காலி இடங்களை நிரப்பும் பணியை அவர் செய்துள்ளார். அந்த இயக்கத்தை இருப்பது போன்று காட்ட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் அது. அ.ம.மு.க-வை நாங்கள் ஓர் இயக்கமாகவே, அ.தி.மு.க-வுக்குப் போட்டியாகவோ நினைக்கவில்லை. திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Minister Kadambur Raju
Minister Kadambur Raju

அதேபோல, அப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம். திரையரங்குக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாகத் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம். படிப்படியாகத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அமலுக்கு வந்தால், இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்றார்.

தியேட்டர் வசூல்...  ஆன்லைன் வசூல்... சவால் விடும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ்! #VikatanInfographics