Election bannerElection banner
Published:Updated:

`கமலா ஹாரிஸ் வெற்றிபெற சம்ஹார பூஜை, அன்னதானம்!' - திருவாரூர் கிராம மக்கள் வேண்டுதல்

சம்ஹார பூஜை
சம்ஹார பூஜை

``கமலா ஹாரிஸ் வெற்றி பெறணும்னு நாங்க நடத்தின இந்த பூஜை ரொம்பவே முக்கியமானது. இதுக்கு பேரு சம்ஹார பூஜை. எதிரிகளை வீழ்த்துறதுக்காக, கடவுளை வேண்டி செய்யக்கூடிய பூஜை இது.’’

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள பைங்காநாடு துளசேந்திரம் கிராமத்தில், ஊர்மக்களின் சார்பில் இங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னாதானம் நடைபெற்றது.

கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமம்
கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமம்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா கோபாலன், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதிலிருந்தே, இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பெருமித உணர்விலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கிறார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹார தெருவில் வாழ்ந்திருக்கிறது, கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய கோபாலன், சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவரது மூத்த மகள் சியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஜெ ஹாரிஸை திருமணம் செய்திருக்கிறார். இவர்களது மகள்தான் கமலா ஹாரிஸ்.

அரசியல், பொருளாதாரம், சட்டம் எனப் பல துறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா தலைமை வழக்கறிஞர், சென்ட் உறுப்பினர் எனப் படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் என்ற உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அன்னதானம்
அன்னதானம்

பைங்காநாடு துளசேந்திரபுரத்திலுள்ள இவரது குலதெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு 5,000 ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார் கமலா ஹாரிஸ். தங்களது கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெண், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை மிகவும் பெருமிதமாகக் கருதும் பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள், ஊர் முழுவதும் பல இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்துக் கொண்டாடிவருகிறார்கள்.

இந்தச்நிலையில்தான் கமலா ஹாரிஸ் வெற்றிபெற இங்குள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயிலில் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடி, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ், ``ரொம்பப் பெருமையா இருக்கு. ஏகப்பட்ட விசாரிப்புகள். `அமெரிக்க துணை அதிபர் தேர்தல்ல நிக்கிற கமலா ஹாரிஸ் உங்க ஊராமே’னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. எங்க ஊர் மக்கள் எல்லாருக்குமே இது பெருமையா இருக்கு.

பைங்காநாடு துளசேந்திரபுரமம்கிற எங்களோட ஊர் பேரு, உலகம் முழுக்கப் பிரபலமாகிடுச்சி. கமலா ஹாரிஸ் கண்டிப்பா வெற்றி பெறுவாங்கனு நாங்க உறுதியா நம்புறோம். இவரால் எங்க ஊருக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கே பெருமை. இந்தச் சிறப்பு பூஜையை, நிறைய செலவு பண்ணி பெரிய அளவுல நடத்தியிருக்கோம். இந்தக் கோயில்ல 40 சாமி இருக்கு. எல்லாத்துக்கு பூ மாலை அணிவிச்சி, பூஜை செஞ்சோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல இந்த வழிப்பாடு நடந்திருக்கு. ஊர்மக்கள் சார்பா, அன்னதானமும் நடத்தினோம்’’ என்றார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
AP | Carolyn Kaster

இந்தப் பகுதியைச் சேர்ந்த மலர்வேந்தன் கூறுகையில், ``கமலா ஹாரிஸ் வெற்றிபெறணும்னு நாங்க நடத்தின இந்த பூஜை ரொம்பவே முக்கியமானது. இதுக்குப் பேரு சம்ஹார பூஜை. எதிரிகளை வீழ்த்துறதுக்காக, கடவுளை வேண்டி செய்யக்கூடிய பூஜை. எங்க ஊரைப் பூர்வீகமாகக்கொண்ட ஒருவர், உலகமே திரும்பிப் பார்க்ககூடிய ஒரு முக்கியப் பதவிக்கு போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்காங்கனு நினைக்குறப்ப, எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதனால்தான் நாங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இதையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு