Published:Updated:

``நான் தி.மு.க-வில் இருக்கிறேன்; தி.க-வில் இல்லை"- அத்திவரதர் தரிசன கடிதம் பற்றி டி.கே.எஸ் இளங்கோவன்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. இதில் தி.மு.க எம்.பி-க்கள் ஜெகத்ரட்சகனும், டி.கே.எஸ் இளங்கோவனும் கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள், சமூக வலைதளங்களில் அதிகம் உலாவந்து விமர்சனத்துக்கு உள்ளானது.

டி கே எஸ் இளங்கோவன்
டி கே எஸ் இளங்கோவன்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் தரிசனத்துக்காக வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறார் அத்திவரதர். நேரடியாக வரிசையில் சென்று இலவச தரிசனம், ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம் மட்டுமல்லாது, எம்.பி-க்களின் சிபாரிசுக் கடிதம் மூலமாகவும் தரிசனம் நடைபெறுகிறது. இதனால், மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது.

அத்தி வரதர் தரிசனத்திற்காக
அத்தி வரதர் தரிசனத்திற்காக
விகடன்

இந்த நிலையில், தி.மு.க எம்.பி-க்கள் ஜெகத்ரட்சகனும், டி.கே.எஸ் இளங்கோவனும் கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள் இணையத்தில் அதிகம் உலா வந்து விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக, கடவுள் மறுப்பாளராக முன்னிறுத்தும் டி.கே.எஸ் இளங்கோவன், அதிகளவு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``நான் திராவிடர் கழகத்தில் இல்லை. தி.மு.க-வில் இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை உள்ள ஏராளமானோர் தி.மு.க-வில் இருக்கிறார்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. இதுவரை எந்தக் கோயிலுக்கும் நான் போனதும் இல்லை. என்னை ஒரு நாத்திகன் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவன். எம்.பி என்பதால் என்னிடம் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமெனக் கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தேன்.

அத்தி வரதர் தரிசனம்
அத்தி வரதர் தரிசனம்
விகடன்

சொல்லப்போனால் அவர்கள் எனக்கு உறவினர்கள்கூட அல்ல. உறவினர் எனக் குறிப்பிட்டால் அதிக முக்கியத்துவம் கிடைக்குமென்பதால் கடிதத்தில் அப்படி குறிப்பிட்டேன்.

`நானாக யாரையும் கடவுளைக் கும்பிடுங்கள்' எனச் சொன்னதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாத்திகத்தை மக்களிடம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறேன்.

இளங்கோவன்
இளங்கோவன்

ஆனால், யாரையும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா! மக்களின் பிரதிநிதியாக இருப்பதால் சிலர் தேடிவந்து கேட்கிற உதவிகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது" என்றார்.