Published:Updated:

`உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான எதிரி!' - நேர்கோட்டில் இணையும் மம்தா - சோனியா?

கூட்டணிக்கு முன்னோட்டமாக, பா.ஜ.க அரசின் ஒரு திட்டத்தை எதிர்த்து இரு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.

மம்தா - சோனியா
மம்தா - சோனியா

மக்களவைத் தேர்தலில் (2019) பெற்ற வெற்றியின் மூலம் பா.ஜ.க-வின் வளர்ச்சியை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. தற்போது தென்னிந்தியாவிலும் தங்களுடைய செல்வாக்கை உயர்த்தும் பணிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

பா.ஜ.க தொண்டர்கள்
பா.ஜ.க தொண்டர்கள்

மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க பெற்ற வெற்றியால் எதிர்க் கட்சிகளுக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பல அரசியல் ஆளுமைகள், ` நமது செல்வாக்கை இழந்துவிட்டோம்' என்பதை உணரவைக்கும்விதமாகவும் தேர்தல் முடிவுகள் அமைந்தன.

இந்நிலையில், விரைவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேற்கு வங்கத்தில் தற்போது, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

மோடி அமித் ஷா
மோடி அமித் ஷா

இடதுசாரிகளின் கோட்டையாக இருந்துவந்த மேற்கு வங்க மாநிலத்தில், தற்போது அந்தக் கட்சி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மம்தா பானர்ஜி, மாநிலத்தின் அடையாளமாகத் திகழ்ந்துவந்தார். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மம்தாவுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. 2014-ம் ஆண்டு 34 தொகுதிகளில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ், கடந்த தேர்தலில் 22 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது. அதேநேரம், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 -ல் இருந்து 18 ஆக உயர்ந்துள்ளது.

சதவிகித அடிப்படையில் பார்த்தால், திரிணாமூல் காங்கிரஸ் 43.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பா.ஜ.க 40.3 சதவிகித வாக்குகளை வாங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 5.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய, `தேர்தல் வித்தகர்' பிரஷாந்த் கிஷோரின் உதவியை நாடினார் மம்தா. தற்போது மம்தாவின் வெற்றிக்கான பணிகளில் ஐ பேக் நிறுவனம், ஈடுபட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் திடீர் நட்பு பாராட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `நம் இருவருக்கும் பொதுவான எதிரி பா.ஜ.க' என்னும் நேர்கோட்டில் இருவரும் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது. தவிர, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி இடையே நல்ல உறவு இருக்கிறது. சோனியா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், இந்த கூட்டணி சாத்தியம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் கல்யாண் பானர்ஜியை சந்தித்து, சுமார் அரைமணி நேரம் பேசினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் - திரிணாமுல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், இந்த சந்திப்புக்குப் பின்னர், `மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்து விமர்சிக்க வேண்டாம்' என்ற ரகசிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த உறவை இரு கட்சிகளும் விரும்புவதாகவும் தெரிகிறது.

`சும்மா பேசக்கூடாது; விமானம் அனுப்புறேன், வந்து பாருங்க!’ - ராகுலைச் சாடிய காஷ்மீர் கவர்னர்

ராகுல் காந்தி உடனான சந்திப்பு தொடர்பாகப் பேசிய திரிணாமுல் எம்.பி, கல்யாண் பானர்ஜி, `ராகுலிடம் பேசியது உண்மைதான். அவரிடம், உங்களைப் போலவே பா.ஜ.க தான் எங்களுக்கு எதிரி என்பதைத் தெரிவித்தேன். ஆனால், கூட்டணி குறித்துப் பேச வேண்டும் என்றால், இந்த ஒரு காரணம் மட்டும் போதாது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலர் திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்' என்றார்.

அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள்

இந்த கூட்டணிக்கு முன்னோட்டமாக, பா.ஜ.க அரசின் ஒரு திட்டத்தை எதிர்த்து இரு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து, கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.

ஆனாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க எழுச்சி என்பது மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, `திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் சாதிக்கலாம்' எனக் கணக்கு போடுகிறார்கள். ` அமித் ஷா, மோடி, ஜே.பி.நட்டா வியூகங்களை இந்த கூட்டணி வெல்லுமா?' என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!