Published:Updated:

சட்டப்பேரவை நேரலை: உரிமை கொண்டாடும் பாமக, தேமுதிக..! - யார் முதலில் கோரியது?!

தமிழக சட்டசபை
News
தமிழக சட்டசபை

சட்டசபையில் கேள்வி நேரத்தை நேரலை செய்வதை வரவேற்றிருக்கும் பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் அதற்கு வித்திட்டது தாங்கள்தான் என்று உரிமையும் கொண்டாடுகின்றன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போதெல்லாம், மக்களவை / மாநிலங்களவை நடவடிக்கைகள் முழுமையாக தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டுவருகின்றன. இதற்காக லோக் சபா, ராஜ்ய சபா என்ற இரு அரசுத் தொலைக்காட்சிகள் இயங்கிவருகின்றன. அதே பாணியில் தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே வைக்கப்பட்டுவருகிறது. தற்போது ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 6, 7 இரு தினங்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில், கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்படுகிறது. இதை வரவேற்றிருக்கும் பா.ம.க-வும், தே.மு.தி.க-வும், நேரலைக்கு வித்திட்டதே தாங்கள்தான் என்றும் உரிமைகொண்டாடுகின்றன. இதிலிருக்கும் உண்மைத்தன்மை என்ன... யார் சொல்வது சரி என்பது குறித்து அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை

``தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இப்போதுதான் நேரலை நடந்தேறியிருக்கிருக்கிறது. இதற்கான குரல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2011-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியானது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை மூண்டது. சட்டமன்றத்திலேயே ஓப்பனாக மோதல் வெடித்தது. அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் விஜயகாந்த் நேரடியாகக் கையை உயர்த்தி, நாக்கைத் துறுத்திக் காட்டியபடி சண்டையிட்டதை யாராலும் மறக்க முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விஜயகாந்த்...
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விஜயகாந்த்...

அதன் பிறகு, விஜயகாந்த்தின் செயல்பாடுகள் சட்டமன்ற உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, சில காலம் விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அச்சமயம் பேட்டியளித்த விஜயகாந்த், `என் எதிரிலுள்ள கேமராவில் பதிவானதை மட்டுமே காண்பித்தனர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரில் இருந்த கேமராவில் பதிவானதைக் காண்பிக்கவேயில்லை. திட்டமிட்டு எடிட் செய்து வெளியிட்டனர். சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்’ என்றார். அப்போதுதான், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன் பிறகு இன்னொரு முறை சட்டசபை நேரலை குறித்த விவாதம் எழுந்தபோது, ``அரசு விரும்பினால் எனது கேப்டன் டி.வி-யில் முழுமையாக நேரலை செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று விஜயகாந்த் சொன்னது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஜெயலலிதா மறைந்து, எடப்பாடி முதல்வராக இருந்தபோதும்கூட இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் `சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்று தி.மு.க தெரிவித்தது. எனினும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில தினங்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போதெல்லாம் நேரலை செய்யப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றதால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியவில்லை, கோட்டையில் வழக்கம்போல சட்டசபை கூடும்போது நேரலை செய்யப்படும் என அரசு காரணம் கூறியது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதற்கேற்ப மீண்டும் கோட்டையில் சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதால், சமூக இடைவெளி கருதி மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே சட்டசபையைக் கூட்டியது தி.மு.க அரசு. எனினும், வாக்குறுதி கொடுத்தமைக்காக ஆளுநர் உரை முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அடுத்த இரண்டு நாள்கள் பேரவை கூடியதும் இடம்பெறும் கேள்வி நேரத்தை மட்டும் இணையதளம் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்தது அரசு. யூடியூப், முகநூல் என சமூக வலைதளங்களில் நேரலையாக வெளிவரும் அதேவேளையில் செய்தித் தொலைக்காட்சிகளும் அந்த லிங்க்கைப் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்புச் செய்தன. இதை வரவேற்று ட்வீட் போட்டுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., முதன்முதலில் அதை வலியுறுத்தியது பா.ம.க-தான் என்றும் உரிமை கொண்டாடுகிறார்.

அன்புமணி ட்விட்
அன்புமணி ட்விட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்புமணி தனது ட்வீட்டில், `தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்தத் தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்துகொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க வரவேற்கிறது! சட்டப்பேரவை ஆண்டுக்கு நான்கு முறை, மொத்தம் குறைந்தது 100 நாள்கள் நடைபெற வேண்டும்; அவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பா.ம.க-தான். அந்த வகையில் கேள்வி நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது! பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அச்சம் விலகிய பிறகு பேரவையை ஆண்டுக்குக் குறைந்தது 100 நாள்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் அறிக்கை
விஜயகாந்த் அறிக்கை

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்புமணி ஒருபுறம் உரிமை கொண்டாடுகிறார் என்றால், மறுபுறம் தே.மு.தி.க-வும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஜனவரி 6, மாலை 6 மணியளவில் தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் பெயரில் வெளிவந்துள்ள அறிக்கையில், ``2011-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இதை வலியுறுத்தினேன்.

விஜயகாந்த், அன்புமணி
விஜயகாந்த், அன்புமணி

தே.மு.தி.க சார்பில்தான் முதன்முறையாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. நேரலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம். இந்நிலையில் தற்போது தி.மு.க அரசு நேரலை செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதைத் தொடரச் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புமணி தனது ட்வீட்டில் தேர்தல் அறிக்கையில் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, எந்த வருடம் எனக் குறிப்பிடவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின்போதுதான் பா.ம.க தனித்துப் போட்டியிட்டது, அன்புமணி முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கினார். அதனால், 2016 தேர்தல் அறிக்கையில்தான் பா.ம.க சார்பில் வாக்குறுதி கொடுத்திருக்கக்கூடும். இதன்படி பார்த்தால் அன்புமணி உரிமை கோருதல் தவறானது. தனக்குக் கிடைக்கவேண்டிய பெயரை, பா.ம.க தட்டிச் செல்வதைப் பார்த்துதான் தே.மு.தி.க-வும் போட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இருவரில் யார் முதலில் சொன்னது என்பதைத் தாண்டி இருவரின் அறிக்கையையும் பார்த்தால், இருவரும் தி.மு.க அரசைப் பாராட்டியிருப்பதுதான் கவனிக்கவேண்டியது.

பா.ம.க நிறுவனரும், அன்புமணியின் தந்தையுமான டாக்டர் ராமதாஸ் இதற்கு முன்பு சில விஷயங்களில் தி.மு.க அரசைப் பாராட்டியிருக்கிறார். தற்போதுதான் அன்புமணியின் பாராட்டு வெளிப்பட்டிருக்கிறது. அதேபோல், பல ஆண்டுகள் கழித்து தே.மு.தி.க-வும் தி.மு.க அரசைப் புகழ்ந்திருக்கிறது. இது தமிழக அரசியலில் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியவை அல்ல. நகர்ப்புற தேர்தலில் மீண்டும் லோக்கள் அண்டர்ஸ்டாண்டிங் நடக்கலாம். 2024 தேர்தல் கூட்டணிக்கான முன்னேற்பாடாகவும் இருக்கலாம்” என்பதோடு முடித்தார்.

அருள், பா.ம.க எம்.எல்.ஏ
அருள், பா.ம.க எம்.எல்.ஏ
தனசேகரன்

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ம.க சட்டமன்ற கொறடாவுமான அருளிடம் இது பற்றிக் கேட்டபோது, ``பா.ம.க இதற்கு க்ளெய்ம் செய்வதற்குக் காரணம் உள்ளது. 2016-ல் முதலில் சொல்லவில்லை, 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே எங்களது தேர்தல் அறிக்கையில் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தோம். அப்போது தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தபோதும், தனியாக நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம், அதனால் அதில் குறிப்பிட்டிருந்தோம். 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல் அறிக்கைகளிலும் இதை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட், சட்டசபை நேரலை போன்ற பெரும்பாலும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுபவைகளைத்தான் தி.மு.க அரசு செயல்படுத்திவருகிறது. அதற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தே.மு.தி.க துணைச் செயலாளரும், 2011-ல் எம்.எல்.ஏ-வாக இருந்தவருமான பார்த்தசாரதியிடம் பேசியபோது, ``நாங்கதான் சார் முதலில் கேட்டோம். அப்போது சட்டசபையில் ஒரு பிரச்னை வெடித்தது. எங்களை சஸ்பெண்ட் செய்தனர். `பேரவையில் நடந்தவற்றில் ஒருபக்கத்தை மட்டும் காட்டுகிறீர்கள், இன்னொரு பக்கத்தையும் காட்டுங்கள், அப்போதுதான் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும்’ என்று நாங்கள்தான் நேரடி ஒளிபரப்புக் குறித்து முதலில் குரல் கொடுத்தோம்.

தேமுதிக பார்த்தசாரதி
தேமுதிக பார்த்தசாரதி

அப்போது பா.ம.க., தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்துகொண்டு எப்படித் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்க முடியும்? 2016-ல் பா.ம.க தனித்து நின்றபோது வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்” என்றார்.