Published:Updated:

`உ.பி பாணியில் தெருமுனைச் சந்திப்புகள்..!'- களமிறங்கும் தமிழக பி.ஜே.பி

2019 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட பிரசார யுக்தியைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த தமிழக பி.ஜே.பி. ஆயத்தமாகிறது.

பி.ஜே.பி பிரசாரம்
பி.ஜே.பி பிரசாரம்

உத்தரப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்திய பிரசார யுக்தியை, தமிழகத்திலும் அமல்படுத்தி, வாக்குவங்கியை உயர்த்திக்கொள்ள பி.ஜே.பி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாவட்டம்தோறும் தெருமுனைச் சந்திப்புகளை நடத்தச் சொல்லியுள்ளார்களாம்.

கமலாலயம்
கமலாலயம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநில நிர்வாகிகள், “உ.பி-யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 78 தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி., 62 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதற்கு, ஒரு லட்சம் தெருமுனைச் சந்திப்புகள் மூலமாக, இரண்டு கோடி வாக்காளர்களைத் தொடர்புகொண்டதுதான் முக்கியக் காரணம். இதன்மூலமாக, மோடியின் திட்டங்கள், அதனால் பயன்பெற்றவர்களின் சந்தோஷக் கதைகளை மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது. பயன்பெறாதவர்களின் தகவல்களைத் திரட்ட முடிந்தது. இதே பிரசாரக் கட்டமைப்பைத்தான் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பி.ஜே.பி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தமிழகமெங்கும் 50 ஆயிரம் தெருமுனைச் சந்திப்புகளை விரைவில் நடத்த ஏற்பாடாகிறது. இந்தச் சந்திப்புகளில் பி.ஜே.பி பேச்சாளர்கள் மோடியின் திட்டங்களைப் பற்றிப் பேசுவார்கள். இந்தத் திட்டங்கள் கிடைக்கப்பெறாத மக்களின் விவரங்கள் அங்கேயே பெறப்பட்டு, உரிய அலுவலகங்களுக்குப் பரிசீலனைக்காக அனுப்பப்படும். இதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தத் தனி டீம் உருவாக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி. பிரசாரம்
பி.ஜே.பி. பிரசாரம்

காலம் முழுவதும் அ.தி.மு.க மீது சவாரி செய்வது எங்கள் இலக்கு அல்ல. எங்களுக்கென வாக்குவங்கியை உருவாக்குவதற்காகத்தான், இந்தப் பிரசாரச் சந்திப்புகளை நடத்தவுள்ளோம்” என்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 சதவிகிதமாக இருந்த பி.ஜே.பி-யின் வாக்குவங்கி, 2019 தேர்தலில் 3.66 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதை உயர்த்துவதற்குத் தெருமுனைச் சந்திப்புகள், உறுப்பினர் சேர்க்கை எனப் பறக்கின்றனர். மாநிலத் தலைமையே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், பி.ஜே.பி-யின் இந்தத் திட்டங்கள் எந்தளவுக்கு பயனளிக்கும் என்பது தெரியவில்லை.