Election bannerElection banner
Published:Updated:

சென்னை: நடிகை ஓவியா மீது பா.ஜ.க போலீஸில் புகார்!

நடிகை ஓவியா
நடிகை ஓவியா

`பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பா.ஜ.க-வின் வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவர் அலெக்ஸிஸ் சுதாகர், போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர், சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி சைபர் க்ரைம் பிரிவு எஸ்.பி-யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் அணியில் மாநிலச் செயலாளராக இருக்கிறேன். தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் பால்கனகராஜ் வழிகாட்டுதலின்படி மக்கள் சேவை செய்துவருகிறேன்.

வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர்
வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர்

தமிழகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளையும், ரயில்வே மின்மயமாக்கப் பணிகளையும் தொடங்கிவைத்தார். இந்தநிலையில், மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அரசியல் கட்சிகள், அமைதி, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் `கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர்.

``ஓவியா `களவாணி' மகேசு ஆன பின்னணி... செம ட்விஸ்ட்!'' - இயக்குநர் சற்குணம் #10YearsofKalavani

இது, நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்க சீனா, இலங்கை போன்ற நாடுகள் முயல்கின்றன. அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடிகை ஓவியா உள்ளிட்ட சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கைப் பதிவு செய்த ட்விட்டர் வலைதளப் பக்கத்தை முடக்கம் செய்ய வேண்டும். அதோடு, நடிகை ஓவியாவின் ட்விட்டர் அக்கவுன்ட்டை முடக்க வேண்டும். மேலும் நடிகை ஓவியா மீது 124 ஏ, 153 ஏ, 294 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நடிகை ஓவியா
நடிகை ஓவியா

இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி அதிக அளவில் அக்கறை செலுத்திவருகிறார். அதற்கு எதிராக இலங்கையும் சீனாவும் மற்றும் தலித் விரோத அமைப்புகளும் `கோ பேக் மோடி’ என்ற ஹேக்டேக் பின்னணியிலிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு