Published:Updated:

`மாணவர் அமைப்பு முதல் தேசியச் செயலாளர் வரை..!' - தமிழக பா.ஜ.க தலைவர் முருகனின் பின்னணி

எல்.முருகன்
எல்.முருகன்

2011-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன், அக்கட்சியின் எஸ்சி/எஸ்டி அணியின் தேசியச் செயலாளராகவும் பதவி வகித்தவர்.

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராகக் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அதனால், காலியான தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் அடுத்து அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவருக்கான பரிசீலனையில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் எனக் கட்சியின் சீனியர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகியது. இந்த 6 மாதத்தில் ஒவ்வொரு முறையும் மாநிலத் தலைவர் பதவி குறித்த அறிவிப்பு டெல்லி பா.ஜ.க தலைமையிடம் இருந்து வரும்போதும் தமிழகத்தின் தலைவர் குறித்த அறிவிப்பு மட்டும் மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது.

எல்.முருகன்
எல்.முருகன்

2014-ம் ஆண்டு முதல் பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, கடந்த ஜனவரியில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர், பா.ஜ.க தலைவராக ஜெ.பி.நட்டா பொறுப்பேற்றார். நட்டா பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆறு மாதங்கள் தலைவர் இல்லாமல் செயல்பட்டு வந்த தமிழக பா.ஜ.க-வின் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் முருகன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருக்கிறார்.

வழக்கறிஞராக 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர், தாழ்த்தப்பட்டோருக்கான நிவாரணம் விரைவாகக் கிடைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வந்தவர். மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திப்பதுடன் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொள்வது என அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வந்தவர் முருகன். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகக் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற முருகனின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் வரும் மே மாதத்தில் முடிகிறது. இந்தநிலையில், அவர் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். விரைவில், அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க தலைவராக அவர் பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார்.

தமிழிசையுடன் முருகன்
தமிழிசையுடன் முருகன்

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பையும் முடித்துள்ளார். இளமைக்காலம் முதலே பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யில் உறுப்பினராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் சட்டம் தொடர்பாக முனைவர் ஆய்வை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன், அக்கட்சியின் எஸ்சி/எஸ்டி அணியின் தேசியச் செயலாளராகவும் பதவி வகித்தவர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

முரசொலி நில விவகாரத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என இவர் கூறியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தி.மு.க உயர் நீதிமன்றம் சென்றது. இதையடுத்து ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனவும் இந்த விவகாரத்தில் இருந்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் விலகியிருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்.முருகன்
எல்.முருகன்

பா.ஜ.க தலைவர் நியமனம் தமிழக பா.ஜ.க-வின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். ``பா.ஜ.க முற்படுத்தப்பட்டோர் கட்சி, பிராமணர்களின் கட்சி என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பா.ஜ.க தலைவராவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 2000 - 2003-ம் ஆண்டு டாக்டர் கிருபாநிதி தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்தார். தேசிய அளவில் பா.ஜ.க தலைவராக பங்காரு லக்ஷ்மணன் பதவி வகித்திருக்கிறார்.

`பா.ஜ.க டெல்லி தலைமையின் செல்லப்பிள்ளை!’ - எப்படி தேர்வானார் எல்.முருகன்?
எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

பட்டியலின மக்களுக்கு ஆதரவாகப் பேசி வரும் எந்தக் கட்சியுமே, அவர்களுக்கு இதுவரை பொறுப்புக் கொடுக்கவில்லை. தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பட்டியலினத்தவருக்குப் பெரிய பொறுப்புகள் கொடுக்கவில்லை. இதன்மூலம் பா.ஜ.க தாழ்த்தப்பட்டோருக்கான கட்சி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் தேர்வில் உள் ஒதுக்கீடு கொடுத்துவருகிறது. அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாவிட்டால், அந்த மாவட்ட நிர்வாகிகள் தகுதி இழந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு உள்ஒதுக்கீடு முறையைத் தீவிரமாகப் பின்பற்றும் கட்சி பா.ஜ.க'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு