Published:Updated:

ஒன் மேன் ஷோ அண்ணாமலை... கொதிக்கும் சீனியர்கள்!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க கலைப்பிரிவிலிருந்து பெப்சி சிவா உள்ளிட்ட சில நிர்வாகிகளைப் பிரிவின் தலைவியான காயத்ரி ரகுராம் நீக்கியிருந்தார்.

ஒன் மேன் ஷோ அண்ணாமலை... கொதிக்கும் சீனியர்கள்!

சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க கலைப்பிரிவிலிருந்து பெப்சி சிவா உள்ளிட்ட சில நிர்வாகிகளைப் பிரிவின் தலைவியான காயத்ரி ரகுராம் நீக்கியிருந்தார்.

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

“என்னய்யா... மிரட்டுறீங்களா?” சமீபத்தில் சென்னையில் நடந்த பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மேடையிலேயே உதிர்த்த அக்னி வார்த்தைகள்தான் இவை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வருகையையொட்டி தன் பேச்சைப் பாதியிலேயே சில நிர்வாகிகள் நிறுத்தச் சொன்னதால், இப்படிக் கொதித்திருந்தார் துரைசாமி. ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சியின் சீனியர் ஒருவரே மனம் வெதும்பி, இப்படியான வார்த்தைகளை வீசியெறிந்ததற்குக் கட்சிக்குள் நிலவும் அண்ணாமலையின் ஒன் மேன் ஷோ-வே காரணம் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இது குறித்து விசாரிக்கக் களமிறங்கினோம். ‘போலீஸ் மனநிலை, அண்ணாநகர் ஐடி விங், சுய விளம்பரம், சுய சமூக அரசியல், சீனியர்களை ஓரங்கட்டுவது’ என அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. கிடைத்த தகவல்களெல்லாம் லத்தி சார்ஜ் ரகங்கள்தான்!

போலீஸ் ஸ்டேஷன் ஆன கமலாலயம்!

பா.ஜ.க சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களைக் கொட்டித் தீர்த்தார்கள். “பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுத்ததும் அடுத்த தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், மதுரை பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட சில சீனியர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க-வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் ஆதரவுடன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை. தி.மு.க-வை எதிர்க்க பா.ஜ.க-வில் ஓர் இளம் தலைவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற உற்சாகத்தில், தொடக்கத்தில் நாங்களும் அவருடன் மனமொப்பியே பயணித்தோம். ஆனால், கமலாலயத்தையே தன் போலீஸ் ஸ்டேஷன்போல மாற்றிவிட்டார் அண்ணாமலை.

ஒன் மேன் ஷோ அண்ணாமலை... கொதிக்கும் சீனியர்கள்!

அவர் மீதிருக்கும் முதன்மையான பெரிய புகாரே, ‘கட்சிக்குள் யாரையும் அவர் மதிப்பதில்லை, எல்லோரையும் ஒருமையில் தரக்குறைவாகப் பேசுகிறார்’ என்பதுதான். பிப்ரவரி 28-ம் தேதி கமலாலயத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அண்ணாமலை, ‘உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகிதத்துக்குக் குறைவாக வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், ஒரு வார காலத்துக்குள் தாமாக அவரவர் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். நானாக நடவடிக்கை எடுத்தால் மொத்த நிர்வாக அமைப்பையும் கலைத்துவிடுவேன்’ என்றார். அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகிகள், ‘கட்சியின் கட்டமைப்பு பல மாவட்டங்களில் இல்லாதது உண்மைதான். அதை நீங்கதான் சரி செய்யணும். எங்க மேல பழியைத் தூக்கிப்போடுவது எந்த வகையில் நியாயம். உங்க கரூர் மாவட்டத்துல எல்லாப் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திட்டீங்களா?’ என்று எதிர்க் கேள்வி எழுப்பினர். இதில் டென்ஷனான அண்ணாமலை, ‘ஒரு வாரம் டைம்... ஒரு வாரம் டைம்!’ என்று கறாராகக் குரலுயர்த்திக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

“தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டுடுவேன்!”

அவர் சொன்னபடியே அடுத்த ஒரு வாரத்தில் எட்டு மாவட்ட அமைப்புகளைக் கலைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதை சீனியர் நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக அண்ணாமலையைச் சந்தித்து சில மாவட்டத் தலைவர்கள் பேசியபோது, ‘உன்மேல ஏகப்பட்ட புகார் வந்துருக்கு. நீ எங்கே பணம் வாங்குறேன்னு எனக்குத் தெரியாதுனு நெனைச்சுக்கிட்டு இருக்கியா? தலைகீழா கட்டித் தொங்கவிட்டுடுவேன்’ என்றதோடு அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகளால் வசைபாடினார். ஒரு மாநிலத் தலைவரிடமிருந்து இப்படியான அணுகுமுறையை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. போலீஸ் மனநிலையிலிருந்து அண்ணாமலை இன்னும் கொஞ்சமும் மாறவில்லை என்பது அப்போதுதான் பலருக்கும் புரிந்தது. கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வழக்கமாகப் பணம் வசூலிப்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர், தலைமைப் பொறுப்பில் இருப்பதை எண்ணி வருத்தப்பட்டோம். 20 வருடங்கள் கட்சிக்காக உழைத்த கமலாலய மேனேஜர் நம்பிராஜனையும் அவர் விட்டுவைக்காமல் அவமானப்படுத்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் தனசேகர், 1998 முதல் பா.ஜ.க-வில் இருப்பவர். தன் ஆதரவாளரான அவரை அழைத்த அண்ணாமலை, ‘நான் சொன்ன லிஸ்ட்டுல கவுன்சிலர் வேட்பாளர் போட மாட்டியா... என்னை மீறி அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்கியா...’ எனச் சீறியிருக்கிறார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அண்ணாமலையின் முகாமிலிருந்து எல்.முருகன் முகாமுக்கு ஜாகை மாறியிருக்கிறார் தனசேகர். இதுபோலவே மற்றொரு சீனியர் தலைவரையும், ‘வங்கி விவகாரங்களில் என்னென்ன மோசடி பண்ணுனே, ஆர்.கே.சாலை ஹோட்டல்ல போலி பில் போட்டு எவ்வளவு சம்பாதிச்சே... எல்லாம் எனக்குத் தெரியும். உன்னால கட்சிக்கு ஒரு ரூவா பிரயோஜனம் இல்லை’ எனப் பேசி அவமானப்படுத்தியது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ‘யாருங்க இந்தப் பையன்... நமக்கு அரசியல் சொல்லித் தர்றதுக்கு. நமக்கு அரசியல் கத்துக்கொடுத்தவங்க பேர்கூட இந்தப் பையனுக்குத் தெரியுமா?’ என சீனியர் நிர்வாகிகள் பலரும் தங்களுக்குள் குமுறித் தீர்க்கிறார்கள். சீக்கிரம் இந்தப் பூனைக்கு மணி கட்டணும்” என்றனர்.

ஒன் மேன் ஷோ அண்ணாமலை... கொதிக்கும் சீனியர்கள்!

கட்சிக்குள் யாரையும் நம்பாத மனநிலையில் இருக்கிறார் அண்ணாமலை. அதனால், தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு சீனியர்களை அவர் ஓரங்கட்டுவது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 30-ம் தேதி நடந்த பா.ஜ.க மையக்குழுக் கூட்டத்தில், இது வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது. நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவர் “மாவட்ட நிர்வாகங்களில் தன்னுடைய ஆட்கள்தான் அமர வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். ஆனால், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி போன்ற சீனியர்கள் தங்களது மாவட்டங்களில், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பதவி வழங்க வேண்டுமென நிர்பந்திக்கிறார்கள். இதனால் இவர்களுக்கும் அண்ணாமலைக்குமான உரசல் போக்கு அதிகரித்திருக்கிறது. சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி ஆகிய சீனியர்கள் கலந்துகொண்டும்கூட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், சுமுகமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் அண்ணாமலை, கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் எதையும் சரிசெய்வதில்லை.

“மலர்க்கொடி விசாரணை என்ன ஆனது?”

உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க கலைப்பிரிவிலிருந்து பெப்சி சிவா உள்ளிட்ட சில நிர்வாகிகளைப் பிரிவின் தலைவியான காயத்ரி ரகுராம் நீக்கியிருந்தார். உடனடியாக, அண்ணாமலையின் மூலம் அந்த நீக்க உத்தரவை பெப்சி சிவா தரப்பு ரத்துசெய்துவிட்டது. வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம், ‘கலைப்பிரிவுக்குள் நடக்கும் பிரச்னைகள் பற்றித் தீர விசாரியுங்கள். பிறகு நடவடிக்கை எடுங்கள்’ என அண்ணாமலையிடம் கோரியிருந்தார். இதைத் தன் ட்விட்டர் பக்கத்திலும் காயத்ரி பதிவிட்டார். அவரைத் தொடர்புகொண்ட அண்ணாமலை ‘உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உத்தரவாதம் அளித்தார். இதுவரை அந்த உத்தரவாதத்தை அண்ணாமலை நிறைவேற்றவேயில்லை. அதற்கு பதிலாக, காயத்ரி ரகுராமைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார்.

பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டுப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க பா.ஜ.க மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார் அண்ணாமலை. இதுவரை அந்த விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. ‘என்மீது ஒரு களங்கம் சுமத்த முடியுமா?’ என்று வீராவேசமாகப் பேசும் அண்ணாமலை, அந்த விசாரணை அறிக்கையை ஏன் இன்னும் வெளியிடவில்லை... யாரும் ஒழுங்காகச் செயல்படவில்லை என்று சொல்லும் அண்ணாமலை, கட்சிப் பொறுப்பேற்றதும் அமைத்த ஒரே ஒரு விசாரணை கமிட்டியைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. அதைப் பற்றி வாயும் திறப்பதில்லை. அண்ணாமலையின் இந்த ‘ஒன் மேன் ஷோ’ அரசியல், தமிழ்நாட்டோடு மட்டும் முடிந்துவிடவில்லை. ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் என இரு தரப்போடும் மோதல் போக்கை அவர் ஆரம்பித்திருக்கிறார்.

தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், அமர் பிரசாத் ரெட்டி
தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், அமர் பிரசாத் ரெட்டி

தமிழிசை, எல்.முருகனுடன் மோதும் அண்ணாமலை!

சமீபத்தில் தன்னுடைய கொட்டிவாக்கம் இல்லத்துக்கு வந்த பி.எல்.சந்தோஷிடம், தமிழிசை பற்றி ஏகத்துக்கும் பற்றவைத்திருக்கிறார் அண்ணாமலை. ‘தமிழிசை தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் இருப்பதைவிடத் தமிழகத்தில்தான் அதிகம் இருக்கிறார். எனக்கு எதிராகப் போட்டி அரசியல் செய்கிறார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை அவர் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு வரும்படி அழைப்பதால், அன்றாடக் கட்சிப் பணிகளில் தடங்கல் ஏற்படுகின்றன. குடும்ப விஷயங்களுக்காக அவர் தமிழகம் வருவது தனிப்பட்ட விஷயம். ஆனால், தமிழக பா.ஜ.க நிர்வாகத்தில் அவர் தலையிடுவதாக இருந்தால் தமிழகம் பக்கம் வராதவாறு அவருக்குத் தடைபோட வேண்டும். மத்திய அமைச்சரான எல்.முருகன் தமிழகம் வரும் போதெல்லாம், ‘வரவேற்பு கொடுக்கிறோம்’ என்கிற பெயரில் சில நிர்வாகிகள் கோஷ்டி அரசியலை வளர்க்கிறார்கள். இதற்கு எல்.முருகனும் ஒத்துப்போகிறார். இதையெல்லாம் நீங்கள் கண்டித்துவைக்க வேண்டும்’ என்று பற்றவைத்ததன் மூலம் தமிழகத்தில் தன்னை மீறி எந்தத் தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அண்ணாமலையின் புகாரை எப்படிக் கையாள வேண்டுமென பி.எல்.சந்தோஷுக்கும் பிடிபடவில்லை என்பதால் விவகாரம் அந்தரத்தில் நிற்கிறது” என்றார் அந்தத் துணைத் தலைவர்.

சுய விளம்பரமும் சுய சமூக அரசியலும்!

தமிழக பா.ஜ.க-வில் அண்ணாமலை நடத்தும் ‘போலீஸ்’ அரசியல் டெல்லிக்குத் தெரிவதில்லை என்கிற தைரியத்தில்தான் அவர் தரப்பு இருந்தது. ஆனால், ‘உண்மைநிலை அதுவல்ல’ என்கிறார்கள் அண்ணாமலைக்கும் ஆளுநர் மாளிகைக்கும் நெருக்கமான சில முன்னாள் காவல்துறை அதிகாரிகள். அவர்களிடம் பேசினோம். “தன் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி என்பவரை பா.ஜ.க-வின் ‘இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவின்’ மாநிலத் தலைவராக நியமித்திருக்கிறார் அண்ணாமலை. இப்படியொரு பிரிவு எந்தக் கட்சியிலும் இல்லை. இவர்தான் அண்ணாநகரில் ஒரு ஐடி விங் அலுவலகத்தைத் தனியே நடத்தி, அண்ணாமலைக்காகச் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறார். சராசரியாக நாள் ஒன்றுக்கு ‘யோகியே...’, ‘சிங்கமே...’ என அண்ணாமலையைப் புகழ்ந்து, 100 பதிவுகளை இந்த ஐடி விங் பதிவிடுகிறது. இதுபோக, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு அமைப்புரீதியாக 60 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அண்ணாமலையைப் புகழ்ந்து தினமும் 10 பதிவுகளாவது போட வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது இந்த ஐடி விங். இது கட்சியின் அதிகாரபூர்வ ஐடி விங் செயலாளரான நிர்மல் குமார் வட்டாரத்துக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னிச்சையாகத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள அண்ணாமலை காட்டும் முயற்சியை சீனியர்கள் யாரும் விரும்பவில்லை.

இந்த ஐடி விங் அலுவலகம் செயல்படும் வீடு, ராகுல் தினேஷ் சுரானா என்பவரின் பெயரில் உள்ளது. தினேஷ் சுரானாவை இளைஞரணிச் செயலாளர் பதவியில் நியமித்து, இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி செல்வத்துக்குப் போட்டியாகக் களமிறக்கியிருக்கிறார் அண்ணாமலை. இந்த நபருக்கு நெருக்கமான ஒரு நிறுவனம் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியதோடு மட்டுமல்லாமல், சி.பி.ஐ-யிலும் வழக்கில் சிக்கியிருக்கிறது. ‘அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து உங்களை விடுவிக்கிறோம். எங்களைத் தனியாக கவனித்துக்கொள்ளுங்கள்’ என்றிருக்கிறது அண்ணமலைத் தரப்பு. தவிர, கட்சிக்குள் தன் சமூகம் சார்ந்த அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் அண்ணாமலை. கொங்குப் பகுதியில் தனக்குச் சவாலாக இருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை அரசியல்ரீதியாக முந்துவதற்கு இந்த ஸ்ட்ராட்டஜியை நம்புகிறார் அண்ணாமலை. அதனாலேயே பா.ஜ.க-வின் 60 சதவிகித மாநிலப் பொறுப்புகளைத் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். இதனால்தான், மாநில அளவிலான நிர்வாகிகள் மாற்றத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் சூழல் பற்றி, தனக்கு ஆதரவான அறிக்கையைச் சில உளவுத்துறை அதிகாரிகள் மூலம் டெல்லிக்கு அவர் அனுப்பினாலும், உண்மைநிலை என்னவென்பதைச் சில சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது அமித் ஷா-வுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்கள்.

கட்சிக் கட்டமைப்பில் கவலை இல்லாத அண்ணாமலை!

எல்.முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது, டெல்டா பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜ.க சார்பில் கட்சிக்கொடியை ஏற்றினார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைக்கூட அண்ணாமலை உருப்படியாகச் செய்யவில்லை என கடுகடுக்கிறார்கள் நிர்வாகிகள். நம்மிடம் பேசிய மாவட்டத் தலைவர் ஒருவர், “தமிழ்நாட்டில் மொத்தம் 70,000-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் உள்ளன. ஆனால், பா.ஜ.க-வுக்கு உருப்படியாக 9,500 பூத் கமிட்டிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் சரி பாதியளவு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. இதுவரை இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை அண்ணாமலை” என்றார்.

இந்தப் புகார்கள் குறித்து அண்ணாமலை தரப்பிடம் பேசினோம். “தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமான அரசியலை முன்னெடுத்திருப்பதால், அவர்மீது இது போன்ற பழிகள் போடப்படுகின்றன. கட்சிக்குள் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. தன்னை புரொமோட் செய்துகொள்ளவேண்டிய அவசியமும் அண்ணாமலைக்கு இல்லை” என்றனர் சுருக்கமாக.

“‘அண்ணா வணக்கங்கணா’ எனப் பார்ப்பவர்களையெல்லாம் 90 டிகிரியில் வளைந்து கும்பிடும் அண்ணாமலையின் மற்றொரு பக்கம், சுய விளம்பரமும், நிர்வாகிகளை ஒருமையில் பேசும் போலீஸ் மனோபாவமும் நிறைந்ததாக இருக்கிறது!’’ என்பதே கமலாலயத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி. தன் போக்கை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வில்லையென்றால், சிக்கல் அவருக்குத்தான்!