Published:Updated:

“அமித்ஷா மிகவும் பிஸி!” - காரணம் சொல்கிறார் அண்ணாமலை

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’ என்று தி.மு.க கேட்பதில் நியாயமே கிடையாது

“தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்று டெல்லியில் கொந்தளிக்கிறார் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு. நீட் தேர்வு விலக்கு தொடர்பாகப் பேசுவதற்கு தமிழக எம்.பி-க்களுக்கு நேரம் ஒதுக்காமல் தவிர்க்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

“நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை” என்று கூறி தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். தேசிய அளவிலோ ஆளுநர் அதிகாரம் குறைப்பு... பிரதமரின் பஞ்சாப் பயணம் பாதி வழியிலேயே ரத்து என அனல் பறக்கிறது. இப்படியான சூழலில்தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துப் பேசினோம்...


“சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நான்கு மாதங்கள் கடந்தும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க கேட்கிறதே?’’

“ஆளுநர் சார்பாக நான் பேசக் கூடாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் பா.ஜ.க கட்சியைச் சார்ந்தவர் அல்ல. அதேசமயம், ‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’ என்று தி.மு.க கேட்பதில் நியாயமே கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதற்கான காலக்கெடு எதுவும் ஆளுநருக்கு நிர்ணயிக்கப்படவில்லை. ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சொல்கின்றன... ‘வேண்டும்’ என்று தமிழக பா.ஜ.க-வினர், தேசிய ஆசிரியர்கள் சங்கத்தினர், துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்ட கல்வியாளர்கள் சொல்லிவருகின்றனர். ஆளுநர் என்பவர் அனைவரின் கோரிக்கைகளையும் உள்வாங்கித்தான் முடிவுக்கு வர முடியும்.’’

“அமித்ஷா மிகவும் பிஸி!” - காரணம் சொல்கிறார் அண்ணாமலை

“ஆனால், சட்டமன்றம் இயற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியாகவேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்றுதானே இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது?’’

“தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுக்கவேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டுதான். ஆனால், சட்டமன்றத்தில் இயற்றப்படுகிற தீர்மானங்கள் அனைத்தையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கக் கூடாது. பல்வேறு தீர்மானங்கள் அரசியல் காரணங்களுக்காகவே நிறைவேற்றப்படுகின்றன. அதனால்தான் நீட் தேர்வு குறித்த புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.’’

“சரி, இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி-க்கள் குழுவை மத்திய அமைச்சர் அமித் ஷா, சந்திக்க மறுப்பது நியாயம்தானா?”

“உள்துறை அமைச்சர் மிகவும் பிஸி. நானே கட்சி விஷயமாகப் பேசுவதற்காக இரண்டு, மூன்று வாரங்கள் வரை காத்திருந்திருக்கிறேன். ஒருமுறை என்னோடு, திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க எம்.பி-க்களும் அவரைச் சந்திக்கக் காத்திருந்தபோது, முதலில் எம்.பி-க்களைத்தான் சந்தித்தார் அமித் ஷா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரையும் அவர் ஒருபோதும் உதாசீனப்படுத்த மாட்டார். தேசிய அளவில் பல்வேறு பிரச்னைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், உண்மையிலேயே அமித் ஷா மிகவும் பிஸியாக இருக்கிறார்.”

“ `யாருக்கும் வஞ்சனை செய்யும் எண்ணம் பிரதமரின் டி.என்.ஏ-விலேயே கிடையாது’ என்று நீங்கள் சர்டிஃபிகேட் தருகிறீர்கள். ஆனால், ‘திமிர் பிடித்த பிரதமர்’ என்று மேகாலயா ஆளுநர் குற்றம்சாட்டுகிறாரே?’’

“ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்தது குற்றச்சாட்டு அல்ல... அவதூறு! இது போன்று ஒவ்வோர் ஆளுநரும் பேச ஆரம்பித்தால், நாட்டில் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஆளுநர் பொறுப்பு என்பது அரசியலைத் தாண்டி, பக்குவமாகச் செயல்படவேண்டிய பணி. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் வேளாண் சட்டங்களையே வாபஸ் பெற்றிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி அனைவரது கருத்துகளையும் கேட்பவராகத்தான் இருக்கிறார். ஆளுநரின் இந்தக் கருத்து அவதூறானது.’’

“ஆனாலும், ஆளுநர் சத்யபால் மாலிக்கின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லையே... ஏன்?’’

“பதிலுக்கு பதில் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் ஆளுநரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டால், ஆளுநர் என்கிற பதவிக்கான கண்ணியமே போய்விடும். அதனாலேயே நாங்கள் அமைதியாகக் கடந்து செல்கிறோம். அதேசமயம், நமது குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.’’

“பஞ்சாப்பில், பா.ஜ.க கூட்டத்துக்கு எதிர்பார்த்த அளவில் மக்கள் திரளவில்லை என்பதால்தான் பிரதமர் தனது பயணத்தை ரத்துசெய்துவிட்டார் என்று விமர்சிக்கிறார்களே?’’

“அது உண்மையல்ல.... பிரதமரின் வருகையை முன்னிட்டு பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பிரதமரின் சாலைவழிப் பயணம் மற்றும் பயணத்தடையால் நான்கு மணி நேரம் தாமதமாகியும் மக்கள் கலைந்து செல்லாமல் காத்திருந்தார்கள். பாதுகாப்புக் குளறுபடிகளால் பயணம் ரத்தாகி, பிரதமரே டெல்லி திரும்பிய பிறகுதான் கூட்டமும் கலைந்து சென்றது. ஆனால், இப்படிக் கலைந்து சென்ற பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களைத்தான் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியிட்டு விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.’’

“பஞ்சாப் விவகாரத்தில், விவசாயிகளின் கோபக்குரலை மறைத்துவிட்டு, ‘பாதுகாப்புக் குறைபாடு’ என்று பா.ஜ.க நாடகமாடுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறதே?’’

“பிரதமரின் சாலைப் பயணம் குறித்த விவரங்கள் வாட்ஸ்அப் வழியே பஞ்சாப் முழுவதும் பகிரப்பட்டிருக்கிறது. 112 கி.மீ தூரமுள்ள அந்தப் பாதையில் 80-வது கி.மீட்டரில் பிரதமரின் காரைப் போராட்டக்காரர்கள் வழிமறித்திருக்கிறார்கள். அதனால்தான், ‘பாதுகாப்பில் குறைபாடு’ என்று குற்றம்சாட்டுகிறோம். பிரதமரின் கார் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து 25-வது கி.மீட்டரில் பாகிஸ்தான் எல்லை உள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் இருக்கும் தொடர்புகள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருக்கின்றன. தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்கும், சித்துவும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பஞ்சாப் மாநில நிர்வாகமே சீர்கெட்டிருக்கும் நிலையில், பிரதமரின் பயணமும் பாதியிலேயே தடைப்பட்டுப்போனதுதான் பயத்தைக் கிளப்பியுள்ளது. இதில் பா.ஜ.க எந்த நாடகமும் நடத்தவில்லை.’’

“அமித்ஷா மிகவும் பிஸி!” - காரணம் சொல்கிறார் அண்ணாமலை

“கடந்தகால தேர்தல் பிரசாரத்திலும்கூட, ‘பாகிஸ்தானோடு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்கிறது’ என்று பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்தானே?’’

“குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, அவரைக் கொல்வதற்காக வந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றது போன்ற நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. பிரதமர் மோடியைக் குறிவைத்து பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானிலிருந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. எனவே, பஞ்சாப் விவகாரத்தையும்கூட இந்தப் பார்வையோடு பார்த்தால் மட்டுமே இதன் பின்னணியிலுள்ள பயங்கரங்களைப் புரிந்துகொள்ள முடியும்.’’

“சமீபத்தில், ‘ராஜேந்திர பாலாஜியை பா.ஜ.க ஒளித்துவைக்கவில்லை’ என்று கூறியிருந்தீர்கள். ஆனால், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகியை போலீஸ் கைதுசெய்திருக்கிறதே?’’

“காவல்துறையால் தேடப்பட்டுவரும் ஒருவருக்கு, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, உதவியிருந்தால் நிச்சயம் அவர்மீது நடவடிக்கை எடுப்போம். மற்றபடி தெரிந்தவர், சொந்தக்காரர் என்பது போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக உதவியிருந்தால், அது சம்பந்தப்பட்ட நபருக்கும் காவல்துறைக்குமான பிரச்னை. ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டபோது, அவருக்குத் துணையாக இருந்தவர் என்று கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க செயலாளரைக் கைதுசெய்த போலீஸ், இப்போது அவரை ரிலீஸும் செய்துவிட்டது. எனவே, நிச்சயம் அவரிடம் விளக்கம் கேட்போம்.’’

“குஜராத் புயல் பாதிப்பை உடனடியாகப் பார்வையிட்டு நிதி அறிவிக்கிறார் பிரதமர். ஆனால், தமிழ்நாட்டில் கஜா புயல் தொடங்கி சமீபத்திய வெள்ள பாதிப்பு வரை எதையும் பார்வையிடவே பிரதமர் வரவில்லையே?’’

“அப்படியில்லை... சென்னையின் வெள்ள பாதிப்புக்கு, ஒரு பாதி காரணம் இயற்கைச் சீற்றமென்றால், மறு பாதி காரணம் மனிதத் தவறு. இயற்கை பாதிப்பு எங்கு நடந்தாலும் உடனடியாக மாநில முதல்வரைத் தொடர்புகொண்டு பாதிப்புகள் பற்றி பிரதமர் விசாரிக்கிறார். மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு தனது பங்கான 75 சதவிகிதத்தை ஒதுக்கி ஆறு மாதங்கள் கடந்தும், தமிழக அரசு தனது பங்கான 25 சதவிகித நிதியை ஒதுக்காமல் இருக்கிறது என்பதைக்கூட நான்தான் கடந்த சென்னைப் பெருவெள்ள பாதிப்பின்போது சுட்டிக்காட்டினேன். அதன் பிறகே தமிழக முதல்வர் 300 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்தார்.’’