Published:Updated:

`பொன்னாரா... நயினாரா..?!'- களைகட்டும் தமிழக பா.ஜ.க தலைவர் ரேஸ்

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் கிளம்பியுள்ள சூழலில் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் என இருவரையும் டெல்லி தலைமை அழைத்திருக்கிறது.

நயினார் நாகேந்திரன், பொன்னார்
நயினார் நாகேந்திரன், பொன்னார்

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், நயினார் நாகேந்திரனா.. பொன் ராதாகிருஷ்ணனா என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதால், தமிழக பா.ஜ.க-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. தலைவர் பதவியைப் பெறுவதற்காக சிலர் டெல்லியிலும் லாபி நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், நயினார் நாகேந்திரனையும் பொன்.ராதாகிருஷ்ணனையும் டெல்லி தலைமை அழைத்திருக்கிறது. இதில், அத்வானியின் குட்புக்கில் இருந்தவர் என்பதாலும் பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்றுவிட்டார் என்பதாலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்பு குறைவுதான் என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

அமித் ஷாவுடன் நயினார் நாகேந்திரன்
அமித் ஷாவுடன் நயினார் நாகேந்திரன்

விரைவில் கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், அ.தி.மு.க தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக தமிழக பா.ஜ.க தலைவர் நிரப்பப்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, தலைவர் பதவிக்குத் தினம் தினம் புதிய புதிய பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

டெல்லி தலைமைக்கு நயினார் நாகேந்திரன் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதால், அவரை டிக் அடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர். இதை விரும்பாத சிலர், `அ.தி.மு.க-விலிருந்து பி.ஜே.பி-க்கு வந்தவர் நயினார். பி.ஜே.பி-யின் மாநிலத்தலைவராக வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து வருடங்களாவது கட்சியில் உறுப்பினராக இருக்கவேண்டும். பா.ஜ.க-வுக்கு அவர் வந்து நான்கு வருடங்கள்தான் ஆகின்றன' என மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.

பி.ஜே.பி எஸ்.ஆர் சேகர்
பி.ஜே.பி எஸ்.ஆர் சேகர்

இதுகுறித்து தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். ``இந்த மாதம் 15-ம் தேதிக்குள் மாநிலத்தலைவர் யார் என்று தலைமை அறிவிக்க இருக்கிறது. தலைமை அறிவித்ததும், அவரது தலைமையில் நாங்கள் உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அவர் தலைவரா இவர் தலைவரா என்ற யூகத்துக்கெல்லாம் பதிலளிக்க முடியாது" என்றதோடு முடித்துக்கொண்டார்.