Published:Updated:

“பிரதமர் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை!”

நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணன் திருப்பதி

- நாராயணன் திருப்பதி அதிரடி

கொரோனாவின் கோரத் தாண்டவத்தைத் தடுத்து நிறுத்த வழி தெரியாமல் மாநில அரசுகள் தவித்துவருகின்றன. எப்போதும் இல்லாத வகையில் மத்திய பா.ஜ.க அரசின் செயலற்ற தன்மையும் பாரபட்ச போக்கும் கடும் விமர்சனங்களை எழுப்பிவருகின்றன. இப்படி மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் கேட்டுத் தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்...

“தமிழ்நாட்டுக்குத் தடுப்பூசி வழங்குவதிலும்கூட, மத்திய பா.ஜ.க அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்கிற விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன?”

“இங்குள்ள அரசியல் கட்சிகள்தான் ‘தமிழ்நாட்டில் தடுப்பூசித் தட்டுப்பாடு’ என்று திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தைச் செய்துவருகின்றன. பொதுவாக, ‘கொரோனாப் பரவல் ஒரு மாநிலத்தில் எந்த அளவு இருக்கிறது, விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளை மாநில அரசு எந்த அளவு பயன்படுத்துகிறது அல்லது வீணடிக்கிறது’ என்பதையெல்லாம் கணக்கில்கொண்டுதான் மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கிவருகிறது. அந்தவகையில் ஒரு காலகட்டத்தில், தமிழ்நாட்டில் 20 சதவிகித தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன. இதற்குக் காரணம் அன்றைய எதிர்க்கட்சிகள் மக்களிடையே செய்த தவறான பிரசாரங்கள். இன்றைய சூழலில், தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது. ஆனால், எந்த மாவட்டத்தில் அதிக பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டமிடல் தமிழகத்தில் இல்லை.’’

“பிரதமர் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை!”

“ஆனால், ‘குஜராத்தைவிடவும் தமிழ்நாட்டுக்குக் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பது ஏன்?’ என்று மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றமே கேள்வி எழுப்பியிருக்கிறதே?’’

“நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, உத்தரவோ அல்லது தீர்ப்போ அல்ல. ‘குஜராத்தை விடவும் தமிழ்நாட்டுக்குத் தடுப்பூசிகள் குறைவாக வழங்கப்பட்டிருக்கின்றன’ என எதிர்த்தரப்பில் வாதம் வைக்கப்படும்போது, ‘ஏன் குறைவாகக் கொடுத்தீர்கள்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்புவது சகஜம்தான். இதற்கான பதிலை மத்திய அரசும் எடுத்துச் சொல்லும். அதனால், இதை ஒரு பிரச்னையாக ஊதிப் பெரிதாக்க வேண்டியதில்லை.’’

“மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தை கொரோனாவை ஒழிக்கும் மாமருந்து என பா.ஜ.க தலைவர்கள் சிலர் சொல்லிவருவதும் மக்களிடையே தடுப்பூசி மீதான விழிப்புணர்வை மழுங்கடிக்கிறதுதானே?’’

“பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர், ‘கோமியம் குடித்ததால்தான் நான் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிரோடு இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதிலென்ன தவறு? அது அவரது தனிப்பட்ட நம்பிக்கை. மற்றபடி, ‘எல்லோரும் மருந்து மாத்திரை சாப்பிடாதீர்கள்; மருத்துவமனைக்குப் போகாதீர்கள்’ என்று பிரசாரம் செய்யவில்லையே! எனவே, இதுகுறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது. மாறாக, மத்திய பா.ஜ.க அரசு, ‘மாட்டுச் சாணம் - கோமியம்’ குறித்து எங்கேனும் அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்கிறதா என்பதை மட்டும்தான் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடும் பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயங்குவது ஏன்?’’

“கொரோனா ஆரம்பக் காலகட்டத்தில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தெல்லாம் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்துதான் மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படியே தற்போதும் துறைரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறது. அப்படி இருக்கும்போது தினப்படி அமல்படுத்த வேண்டிய அரசாங்க செயல்பாடுகளுக்கெல்லாம் எதிர்க்கட்சிகளிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற தேவையும் இல்லை; அதற்கான சூழலும் இல்லை. அடுத்ததாக, ஓய்வுபெற்ற 116 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் மத்திய அரசுக்கு எதிராக கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆக, மீதமுள்ள ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். எனவே, எல்லோருடைய கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.’’

“பா.ஜ.க தலைவர்கள் சிலரே பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார் விவகாரம் ‘சாதி அரசியலாக திசை திருப்பப்படுகிறது’ என ஆதரவுக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனரே?’’

“பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் சாதி அரசியல் உள்ளது என அரசியல் தலைவர்கள் யாரும் கூறவில்லை. எங்கள் கட்சித் தலைவர் எல்.முருகன் எங்கேனும் அப்படியொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறாரா? இல்லை, எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரேனும் தெரிவித்திருக்கிறார்களா? யாரேனும் அப்படிக் கூறியிருந்தால் அதுகுறித்து நாமும் கருத்து தெரிவிக்கலாம். மற்றபடி சமூக ஊடகத்தில் சிலர் இதன் பின்னணியில் சாதி அரசியல் இருப்பதாகப் பேசுகிறார்கள் என்பதற்காக, நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.’’

“பிரதமர் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை!”

“இல்லையே... பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு மற்றும் மதுவந்தி ஆகியோர் ‘பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் சாதி அரசியல் உள்ளதாகச் சொல்கிறார்களே?’’

“குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும்’ என்றுதான் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மதுவந்தி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுவதால், அவர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதற்காக, மதுவந்தி சொல்வது சரி என்றோ... தவறு என்றோ நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அது ஒன்றும் பா.ஜ.க-வின் அதிகாரபூர்வக் கருத்து இல்லை!’’