Published:Updated:

`உள்ளாட்சியில் தனிவழி; ஜனவரி அஸ்திரம்!' - தமிழக பா.ஜ.க-வின் புதுத் திட்டம்

`உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்ட' என்ற பேச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக அ.தி.மு.க - பா.ஜ.க-வினரிடையே கருத்து மோதல்களாக நிலவத் தொடங்கியிருக்கிறது.

கமலாலயம்
கமலாலயம்

தமிழக பா.ஜ.க-வில் யார் தலைவர் என்ற போட்டி கடுமையாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க - பா.ஜ.க -வினரிடையே உரசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஜனவரி மாதத்திற்குள் நாங்கள் யார் என்று காட்டுவோம் என அ.தி.மு.க -வை மறைமுகமாக எச்சரித்திருக்கிறதாம் பா.ஜ.க மேலிடம். அப்படி என்னதான் நடக்கிறது... விசாரித்தோம்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

`உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்ட' என்ற பேச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக அ.தி.மு.க - பா.ஜ.க-வினரிடையே கருத்து மோதல்கள் நிலவத் தொடங்கியிருக்கிறது. இந்த வேளையில், தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, முதல் முறையாக ஜே.பி.நட்டா இன்று சென்னை வந்தார். உள்ளாட்சித் தேர்தல், தமிழக பா.ஜ.க-வுக்கு மாநிலத் தலைவரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்கிறார்.

``அந்த 100 பேருக்கு நன்றி... அந்த 20 பேருக்கு தேங்க்ஸ்!’’ - பா.ஜ.க-வில் இணைந்த ராதாரவி

அதேபோல, வருங்காலத்தில் பா.ஜ.க-வினரின் பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்குகிறார். அதோடு, தமிழகம் முக்கிய மாநிலம் மட்டுமல்ல சவாலான மாநிலமும் என்பதால், பா.ஜ.க மேலிடம் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க -வுக்கு 2 வாரத்துக்குள் தேர்தலை நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுப்போம் என்றிருக்கிறார்கள். `நம்மீது ஆளும் கட்சியினருக்கும் பயம் குறைந்துவிட்டது.

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

ஜனவரிக்குள் நாம் யார் என்று காட்டுவோம்' என பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் பேசியதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. டிசம்பர் 2-வது வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க-வில் தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பி.முருகானந்தம், ஹெச்.ராஜா ஆகியோருக்குள் கடுமையான போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதோடு, பதவியைப் பெற மத்திய அமைச்சர்களை நாடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

ஆனால், பா.ஜ.க மேலிடம் இன்னொரு கணக்கைப் போட்டுக்கொண்டிருக்கிறதாம் . முகம் தெரியாத ஒரு நபருக்கு பதவியைக் கொடுத்து கட்சியை வளர்க்க நினைக்கிறதாம். காரணம், கட்சியில் உழைத்தால் கண்டிப்பாகப் பதவி கிடைக்கும் என்கிற ஜெயலலிதாவின் ஸ்டைலைப் பின்பற்ற நினைக்கிறார்களாம். தி.மு.க-வில் வாரிசுகளுக்குத்தான் முக்கியப் பதவி என்கிற மனநிலையை மக்கள் மத்தியில் பதிய வைக்கவும், பா.ஜ.க மதிப்பை நிலைநிறுத்தவும் மேலிடம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இரு கட்சிகளுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். ``எடப்பாடிக்கு பா.ஜ.க மீதிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருப்பது, அவரது பேச்சிலிருந்து நன்கு தெரிகிறது. அதோடு, அ.தி.மு.க, பா.ஜ.க-வினரிடையே பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக எழத் தொடங்கியுள்ளது. காரணம், உள்ளாட்சித் தேர்தல்தான். தமிழகத்தில் மறைமுகத் தேர்தலை நடத்தக்கூடாது என்று தி.மு.க உட்பட பா.ஜ.க-வும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆளும் அ.தி.மு.க-வினர் கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதனால்தான் கடுப்பாகியிருக்கிறதாம் பா.ஜ.க மேலிடம்.

அதோடு, அ.தி.மு.க - பா.ஜ.க இரு கட்சிகளும் கணவன்-மனைவி போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று மேல்மட்டத் தலைவர்கள் பேசினாலும், முக்கிய அமைச்சர்கள் அதை ரசிக்க வில்லையாம். `கடந்த எம்.பி தேர்தலில், பா.ஜ.க கூட்டணி சேர்ந்ததால்தான் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெறமுடியவில்லை' என்று அ.தி.மு.க தரப்பில் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க-வும் உங்களால்தான் அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஒரு லட்சம் நிர்வாகிகளை நிறுத்துவதற்காக மறைமுகமாக பேசப்பட்டு வருகிறதாம். அதோடு, ஜனவரிக்குள் அ.தி.மு.க-வில் உள்ள நான்கைந்து அமைச்சர்களின் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளைக் கையில் எடுக்க இருக்கிறார்களாம். இது, எடப்பாடிக்கும் நன்கு தெரியும். எப்படி இருந்தாலும் உள்ளாட்சியில் கவனத்தைச் செலுத்துங்கள் என்று எடப்பாடி தரப்பு முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்களாம். உள்ளாட்சியில் வெற்றிபெற்றால்தான், எடப்பாடி தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதால், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்" என்கிறார்கள்.