`சட்டம், தன் கடமையைச் செய்யும்!’ - வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

வேல் யாத்திரை விவகாரத்தில், `சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஊட்டிக்கு வந்திருந்தார்.

ஊட்டியிலுள்ள அரசு விருந்தினர் இல்லமான தமிழகம் மாளிகையில் நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றன.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களின் ஒரு சில கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி,``அரசு நடவடிக்கை காரணமாக நீலகிரி மாவட்டம் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் நோய்ப் பரவல் கட்டுபாட்டில் உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவ தேவைக்காக ஹெலிகாப்டர் உதவியுடன் ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து 9-ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின்னரே முடிவு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத்தூள் பரிசோதனைக்கான பிரத்யேக ஆய்வகம் ஒன்று திறக்கப்படும். வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.