Published:Updated:

`தி.மு.க - காங்கிரஸ் மனக்கசப்பு உண்மைதான்!'- கூட்டணி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எஸ்.அழகிரி

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

`காங்கிரஸ் கட்சியினருக்கு செக் வைக்க வேண்டும் என்று தி.மு.க நினைத்தது. அதன் வெளிப்பாடாகத்தான் கே.என்.நேருவின் பேச்சு அமைந்தது.'

மனம் ஒன்று இருந்தால் அதில் கசப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் கசப்புகள் இருந்ததாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புக்கொண்ட விவகாரம் கூட்டணிக்குள் இருந்த விரிசல் தற்போது அடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. தி.மு.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குள் அப்படி என்னதான் மனக்கசப்பு நடந்திருக்கிறது என்று விசாரிக்கத்தொடங்கினோம். சென்னை, சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் முதல் கூட்டம், கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காங்கிரஸ் சொத்து மற்றும் மீட்புக் குழுவின் தலைவரும் பஞ்சாப் மாநில கல்வி அமைச்சருமான விஜய் இந்தர் சிங்கலா, அகில இந்தியக் காங்கிரஸ் இணைச் செயலர் நிதின் கும்பல்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பின்பு பத்திரிகையாளரிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``கூட்டத்தில், கட்சி சொத்துகளை மீட்பது தொடர்பாகப் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க தேர்தல் பணிக்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. சுமுகமாகத்தான் செல்கிறது. ராஜ்ய சபா எம்.பி விவகாரத்தில் உள்ளூர் காங்கிரஸாரின் விருப்பத்தை, ஸ்டாலினிடம் தெரிவித்தோம். பின், அவர், `இம்முறை வாய்ப்பில்லை' என, தொலைபேசி வாயிலாக என்னிடம் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல், ராஜ்ய சபா தேர்தல் விவகாரத்தில் மனக்கசப்புகள் இருந்தன. மனம் ஒன்று இருந்தால் அதில் கசப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அரசியல் கட்சிகளுக்குள் மனக்கசப்பு என்பது சாதாரணம்தான். அப்படி இருந்தாலும், அது நிச்சயம் பேசி சரி செய்யப்படும்" என்று பேசினார்.

காங்கிரஸார் வாட்டாரத்தில் பேசினோம். ``உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை தி.மு.க காப்பாற்றவில்லை என்று கே.எஸ்.அழகிரி பேசிய விவகாரம் பெரிய அளவில் தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கராத்தே தியாகராஜனும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லி பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டார். இதனால் காங்கிரஸ்காரர்கள் பேச்சுக்களை தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு காட்டத் தொடங்கினர் தி.மு.க-வினர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

ஒரு பொதுக்கூட்டத்தில் கே.என்.நேரு, `காங்கிரஸ் கட்சிக்கு இனி தி.மு.க பல்லக்கு தூக்கக் கூடாது. கூட்டணி என்ற பெயரில் நம்மோடு சேர்ந்துகொள்கிறார்கள். பிறகு, நம்மையே திட்டுகிறார்கள். இதுவரை நடந்தது போதும். இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது. இதுகுறித்து தலைமையிடம் வலியுறுத்த இருக்கிறேன்' என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் பேசினார். பதறிப்போன காங்கிரஸ், சர்ச்சைக்குக் காரணமான கராத்தே தியாகராஜனை சஸ்பெண்டு செய்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருக்கு செக் வைக்க வேண்டும் என்று தி.மு.க நினைத்தது. அதன் வெளிப்பாடுதான் கே.என்.நேருவின் பேச்சு அமைந்தது. அத்தோடு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உள்ள கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிகளை அழைத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்தியது. அதில் தி.மு.க கலந்துகொள்ளவில்லை.

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

என்ன காரணம் என்று டெல்லி காங்கிரஸ் தலைமை தி.மு.க-வினரிடம் விசாரித்தபோதுதான் நடந்தவற்றை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு, காங்கிரஸ் தலைமை கே.எஸ்.அழகிரியை தி.மு.க-வினருடன் ஒத்துப்போகச் சொல்லியிருக்கிறது. அதன் பிறகு அமைதியாக இருந்த அழகிரி, ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று தலைமை சார்பில் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் வேட்பாளர்களை அறிவித்தது தி.மு.க. இதனால், மீண்டும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி நடந்தவற்றை மனதில் வைத்துக்கொண்டு, எங்களுக்குள் கூட்டணி மனக்கசப்பு இருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த மனகசப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்'' என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு