Published:Updated:

திருவாரூர்: காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதிப்பதா? போலீஸுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

திருவாரூர் டிராக்டர் பேரணி
திருவாரூர் டிராக்டர் பேரணி

`நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு கொரடாச்சேரியிலுள்ள எஸ்.எம்.பி.துரைவேலன் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, காவல்துறையினர் அவரது வீட்டுக் கதவைத் தட்டி, கைதுசெய்ய முயன்றிருக்கிறார்கள்’ - கே.எஸ்.அழகிரி.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் டிராக்டர் பேரணி நேற்று நடைபெற்றது. திருவாரூரில் காவல்துறையினரின் தடுப்புகளைத் தகர்த்து, 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் நகருக்குள் பேரணி நடைபெற்றது. இந்தநிலையில், திருவாரூர் தி.மு.க மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் உள்ளிட்ட 10 பேர்மீது திருவாரூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைதுசெய்வதற்காகத் தேடிவருகிறார்கள். இதற்கு தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

எஸ்.எம்.பி.துரைவேலன்
எஸ்.எம்.பி.துரைவேலன்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்தச் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். நேற்று டெல்லி செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இதனால், டெல்லியின் ஒரு சில பகுதிகளில் வன்முறையும் ஏற்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு, தடியடி, மோதல் ஏற்பட்ட நிலையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டெல்லி:`திசைமாறிவிட்டது; நாங்கள் இதற்கு வரவில்லை!’ - போராட்டத்தை முடித்துக்கொண்ட 2 விவசாய சங்கங்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரியிலிருந்து தி.மு.க மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி துரைவேலன் உள்ளிட்டவர்கள் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியாகப் புறப்பட்டார்கள். திருவாரூர் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். தடுப்புகளைத் தகர்த்து நகருக்குள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. பூண்டி கலைவாணனே டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

திருவாரூர் டிராக்டர் பேரணி
திருவாரூர் டிராக்டர் பேரணி

இந்தநிலையில்தான் பூண்டி கலைவாணன், எஸ்.எம்.பி துரைவேலன் உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``நேற்று இரவு 1:30 மணிக்கு கொரடாச்சேரியிலுள்ள எஸ்.எம்.பி.துரைவேலன் வீட்டுச் சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் அவரது வீட்டுக் கதவைத் தட்டி, கைதுசெய்ய முற்பட்டனர். `இரவு நேரத்தில் நான் வெளியே வர முடியாது. காலையில் காவல் நிலையத்துக்கு வருகிறேன்' என்று அவர் கூறிய பிறகு, காவல்துறையினர் அங்கிருந்து சென்றார்கள்.

காவல்துறையினர் தடையை மீறி, டிராக்டர் பேரணி நடத்தியதாகக் கூறி பூண்டி கலைவாணன், எஸ்.எம்.பி.துரைவேலன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மீதி ஏழு பேரை காவல்துறையினர் கைதுசெய்வதற்காகத் தேடிவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, ஜனநாயகவழியில் அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள்மீது கொலை முயற்சி வழக்கு போட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது’’ என தெரிவித்திருக்கிறார். தி.மு.க தலைவர் மு,க.ஸ்டாலினும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு