Published:Updated:

சுயமரியாதை உள்ளவர்கள் பா.ஜ.க-விடம் சரணடைய மாட்டார்கள்...

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

போட்டுத் தாக்குகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சுயமரியாதை உள்ளவர்கள் பா.ஜ.க-விடம் சரணடைய மாட்டார்கள்...

போட்டுத் தாக்குகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published:Updated:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

“ரொம்ப நாள் ஆச்சுங்க... பேட்டி எல்லாம் கொடுத்து. வயசு காரணமா கொஞ்ச ஓய்வெடுக்க வேண்டியதா இருக்கு. நாட்டுல பா.ஜ.க அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகுது... அதை ஒழிக்க நானும் ஏதாவது செய்யணும்கிற வேகத்துலதான் மறுபடியும் தீவிரமா இறங்கியிருக்கேன்” என்று நம்மை வரவேற்றபடியே பேசத் தொடங்கினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சென்னையில் அவரது வீட்டில் நடந்த சந்திப்பின்போது நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

“தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பஞ்சாயத்து காரணமாக பா.ஜ.க-வின் கை ஓங்குவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தமிழ்நாட்டில் தாங்கள் வளர்வதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. அதற்காகப் பணத்தை ஆறாகக் கொட்டுகிறார்கள். சமூக விரோதிகள், ரௌடிகளை யெல்லாம்கூட, ‘வழக்குகள் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கட்சியில் சேர்க்கிறார்கள். அப்படிச் சேர்ந்தவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகிறார்கள். அவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், டெல்லியில் அமைச்சர் முருகன் அலுவலகத்திலிருந்து போன் செய்து அந்த ரௌடிகளை தப்பிக்கவைக்கிறார்கள். அகில இந்தியாவையும் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாவட்டக் கட்சியாக பா.ஜ.க சுருங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.”

“எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் பக்கம் சாயப்போகிறார் என்கிறார்கள். வருங்காலத்தில் அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?”

“அ.தி.மு.க என்பது விபத்தில் பிறந்த கட்சி. எம்.ஜி.ஆர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, ‘ஜெயலலிதாவோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அவரைக் கட்சியிலிருந்து நீக்கப் போகிறேன்’ என்று அ.தி.மு.க-வில் இருக்கிற முக்கியமான மந்திரிகள், தலைவர்களிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க-வில் இருந்த பழைய தலைவர்களிடம் கேட்டால் உண்மை தெரியும். இப்படி விபத்தில் பிறந்த கட்சி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று சுக்குநூறாகப் போய்க்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வை திராவிட இயக்கங்களில் ஒன்றாகவே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள். அப்படி இருக்கும்போது அவர்களை எப்படி மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்க்க முடியும்?”

“காவல்துறை, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி சொல்கிறார். முதல்வரின் துறையே அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிறீர்களா?”

“காவல்துறையினர் பா.ஜ.க பக்கம் சாய்ந்து நிற்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்குமே ஏற்பட்டிருக்கிறது. ஈரோட்டையே எடுத்துக் கொள்வோம். இந்த மாதத் தொடக்கத்தில், அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு மட்டும் காவல் துறையிடம் அனுமதிபெற்ற பா.ஜ.க., கூட்டத்துக்கு முன்பு ஓர் ஊர்வலத்தை எந்த அனுமதியுமின்றி நடத்தியிருக் கிறது. அதைக் காவல்துறையினரும் வேடிக்கை பார்த்தார்கள். அதேநேரத்தில், ‘நாங்கள் பாத யாத்திரை செல்ல வேண்டும்’ என்று அதே ஈரோடு காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்ட போது, ‘முடியாது...’ என்று மறுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் பல இடங்களில் இது போன்றுதான் நடக்கிறது. காவல்துறை சரியில்லை. ஸ்டாலின் அறிவுரையை, கட்டளையை அவர்கள் கேட்டு நடப்பதில்லை. எனவே, ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து, காவல்துறையில் இருக்கும் கறுப்பு ஆடுகளை நீக்க வேண்டும்.”

“தமிழ்நாடு காங்கிரஸிடம் பழைய வேகம் இல்லையே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஏற்பட்டிருந்த சுணக்கம் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியின் வேலைப் பாடுகள் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எல்லா ஊர்களுக்கும் சென்று காங்கிரஸ் தொண்டர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் தலைமையிலான கட்சி உற்சாகத்தில்தான் இருக்கிறது.”

சுயமரியாதை உள்ளவர்கள் பா.ஜ.க-விடம் சரணடைய மாட்டார்கள்...

“தி.மு.க-வின் ‘திராவிட மாடல்’ போன்று, சமீபத்தில் காங்கிரஸிலும் ‘காமராஜர் மாடல்’ முன்வைக்கப்பட்டதே?”

“காமராஜரும், ‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்று செயல்பட்டவர். சமூகநீதியில் அக்கறைகொண்டவர். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தபோது, பெரியார் சொன்ன கருத்துகளை நேருவிடம் சொல்லி முதன்முறையாக அரசியல் சாசனத்தையே திருத்தியவர் காமராஜர். ஆகவே, காமராஜர் மாடலும், திராவிட மாடலும் ஒன்றுதான்.”

“சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக அரசு கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில் நேரு படம் இல்லை என்று விமர்சித்தீர்களே... தமிழ்நாடு அரசு விளம்பரத்திலேயே நேரு படம் இல்லையே?”

“தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க உள்ளிட்ட எல்லாக் கட்சியினரும் நேருவுக்கு மரியாதை செலுத்துகின்றனர். பிரச்னை அதுமட்டுமல்ல. கர்நாடக அரசு விளம்பரத்தில் சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்ததுதான் சர்ச்சையாகியிருக்கிறது.”

“அவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்கிறதே பா.ஜ.க?”

“ ‘இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்க வேண்டும். மற்ற மதத்தினர் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இரண்டாம் குடிமக்களாகத்தான் இங்கே இருக்க முடியும்’ என விஷத்தைக் கக்கியவர் சாவர்க்கர். சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தால் ஏன் அந்தமான் சிறையில் அடைத்தபோது, ஆறு மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக்கொடுத்தார்... மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல வருடங்கள் சிறையில் இருந்தும், இப்படி மன்னிப்புக் கேட்டு வெளியே வரவில்லையே... கோட்சேவின் தலைவர், போலி தேசியவாதி, இந்துத்துவ வெறியர்தான் சாவர்க்கர்.”

“அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை, பா.ஜ.க தன் அரசியலுக்காகப் பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் நீட்சிதான் என்கிறார்களே?”

“உண்மையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் கள்மீது அன்றைக்கு காங்கிரஸ் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இன்று பா.ஜ.க முழுக்க முழுக்கத் தனக்கு எதிரணியில் இருப்பவர்களை பயமுறுத்த வேண்டும், மிரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அமலாக்கத்துறையையும், புலனாய்வு அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பயந்த சுபாவம் கொண்டவர்கள், உண்மையிலேயே குற்றவாளிகளாக இருப்பவர்கள் பா.ஜ.க காலடியில் விழலாமே தவிர, சுயமரியாதை உள்ளவர்களும், குற்றமற்றவர்களும் பா.ஜ.க-விடம் சரணடைய மாட்டார்கள்!”