அரசியல்
அலசல்
Published:Updated:

“கே.எஸ்.அழகிரியை மாற்றுங்கள்...” - காங்கிரஸ் கடமுடா

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரியோ, மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட எல்லா பதவிகளையும் தனக்கு நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், தமிழ்நாடு மாநிலத் தலைவரை மாற்றச் சொல்லிக் கிளம்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள் சிலர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், “மூத்த தலைவர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் மாநிலப் பொதுக்குழுவை நடத்தியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அவர் மட்டுமே கட்சி என்று நினைக்கிறார். செயல்படாத தலைவரான அவர், தன்னுடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் அதிருப்தியில் இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகள் பதவி முடிந்து அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டபோதே, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அவரையே நியமித்தார்கள். `கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி சத்தியமூர்த்தி பவனை முற்றுகை யிடவும் முடிவுசெய்திருக்கிறோம்” என்றார்.

“கே.எஸ்.அழகிரியை மாற்றுங்கள்...” - காங்கிரஸ் கடமுடா

கடலூர் மாவட்ட முன்னாள் தலைவரான விஜயசுந்தரம், “மாநில துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், பொதுச்செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு கடந்த வருடம் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. உழைப்பவர்களை ஓரங்கட்டுவதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கே.எஸ்.அழகிரியை உடனடியாக மாற்ற வேண்டும். தகுதியான ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்” என்றார்.

மாநில சேவாதளப் பிரிவுச் செயலாளர் கார்த்திக் ராஜாவோ, “எங்கள் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தி ஆகியோர் பதவியே வேண்டாம் என்கிறார்கள். ஆனால், கே.எஸ்.அழகிரியோ, மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட எல்லா பதவிகளையும் தனக்கு நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில்கூட அவரால் உறுதியான நிலைப்பாடு எடுக்கவோ, குரல் கொடுக்கவோ முடியவில்லை. பொதுக்குழுவின்போது கையில் அகப்பட்டவர் களையெல்லாம் அழைத்துச் சென்றுவிட்டு, அவர்களைப் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்திருக்கிறார்கள். கூடவே, உறுப்பினர் அட்டைக்கு தலா 500 ரூபாயும் வசூலித்திருக்கிறார்கள். காங்கிரஸ் வரலாற்றிலேயே இதுபோல் நடந்தது இல்லை” என்றார் ஆதங்கத்துடன்.

ஆர்.எஸ்.ராஜன், கார்த்திக் ராஜா, விஜயசுந்தரம், கோபண்ணா
ஆர்.எஸ்.ராஜன், கார்த்திக் ராஜா, விஜயசுந்தரம், கோபண்ணா

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் விளக்கம் கேட்டோம். “தலைவரை மாற்றச் சொல்லி உங்களிடம் பேசியதாகச் சொல்லும் மூவரும் ஏற்கெனவே கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள். அவர்கள் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிப்பது கட்சியில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விஷயம்தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் இப்படி குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.

கட்சிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கே காங்கிரஸில் புதிய கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும்போல!