Published:Updated:

தி.மு.க-வை நாங்கள் பாதுகாப்போம்... அது எங்கள் கடமையும்கூட! - அக்கறைப்படும் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

நாங்கள் தோழமைக் கட்சியாக தி.மு.க-வைத் தாங்கிப்பிடிக்கவேண்டிய அரசியல் சூழல் இருக்கிறது.

தி.மு.க-வை நாங்கள் பாதுகாப்போம்... அது எங்கள் கடமையும்கூட! - அக்கறைப்படும் கே.எஸ்.அழகிரி

நாங்கள் தோழமைக் கட்சியாக தி.மு.க-வைத் தாங்கிப்பிடிக்கவேண்டிய அரசியல் சூழல் இருக்கிறது.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்ப்பது தொடர்பாக, மாமல்லபுரத்தில் இரண்டு நாள்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தும், காங்கிரஸ் கட்சி மீதான பா.ஜ.க-வினரின் விமர்சனம், தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்…

“சமீபத்தில், காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே?”

“அண்ணாமலை ஒரு தேசியக் கட்சியின் தலைவர், மேடையில் நாகரிகமாகப் பேச வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அடிப்படை அறிவே இல்லாமல், அருவருக்கத்தக்க வகையில் அவர் நடந்துகொள்வது தவறானது. தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணியில் இருப்பதைவைத்து அவர் அப்படிப் பேசியிருக்க வேண்டும். பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியை ஒப்பிடும்போது தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும், தி.மு.க-வை ஏற்காதவர்களே ‘இந்த ஆட்சி சிறப்பாக இருக்கிறது’ எனப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள்மீது வழக்குகள் தொடர்ந்ததோடு, தலைமைச் செயலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பா.ஜ.க அரசு. ஆனாலும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கிறார்களே... பா.ஜ.க-வுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”

“ ‘தி.மு.க குற்றம் செய்தால் சுட்டிக்காட்டுவோம்’ என்கிறீர்கள். அப்படி ஏதும் இதுவரை சுட்டிக்காட்டியதாகத் தெரியவில்லையே?”

“சொத்து வரியை உயர்த்தியபோது முதலில் சுட்டிக்காட்டியது நாங்கள்தான். இப்படிக் கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் குற்றங்களுக்காக தி.மு.க-வை விமர்சிக்க நாங்கள் என்றுமே தயங்கியதில்லை. ஆவின் உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் ஏதாவது ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால், அண்ணாமலை விளம்பரத்துக்காகச் செய்து கொண்டிருக்கிறார். நாம் ஒரு குற்றச்சாட்டு வைத்தால் அதை நிரூபிக்க வேண்டும். நான்கூட தி.மு.க மீது குற்றச்சாட்டு சொல்லலாம். அது இன்னும் கூடுதல் கவனம் பெறும். ஆனால், அதில் உண்மை இருக்க வேண்டுமல்லவா... அண்ணாமலைக்கு யாரோ தவறாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவருக்கு இருக்கும் அறிவை வைத்துக்கொண்டு அதை அப்படியே பேசிவிடுகிறார். ஆனால், அது நல்லதல்ல.”

தி.மு.க-வை நாங்கள் பாதுகாப்போம்... அது எங்கள் கடமையும்கூட! - அக்கறைப்படும் கே.எஸ்.அழகிரி

“ ‘அ.தி.மு.க – பா.ஜ.க-தான் எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தில் இருக்கிறார்கள்’ என்ற உங்களின் கருத்தின் அடிப்படை என்ன?”

“நாங்கள் தோழமைக் கட்சியாக தி.மு.க-வைத் தாங்கிப்பிடிக்கவேண்டிய அரசியல் சூழல் இருக்கிறது. மதச்சார்பின்மை என்ற உயரிய கருத்தை வெறும் மேடைக்காகப் பேசுபவர் இல்லை முதல்வர் ஸ்டாலின். கொள்கைரீதியாகவும் அதைச் செயல்படுத்துகிறார். பா.ஜ.க-வுக்கு எதிராக வலிமையான கூட்டணி தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ‘தி.மு.க-வின் குறைகளை நாங்கள்தான் சுட்டிக்காட்டுகிறோம். காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள் சரியாகச் செயல்படவில்லை எனச் சொல்லி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதச்சார்பின்மைக்குத் தமிழ்நாடு ஓர் உதாரணமாக இருக்கிறது. எனவே, அதைச் சிதைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அரசு தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டி, சரியான பாதையில் அழைத்துச்செல்லும் தேரோட்டியாக காங்கிரஸ் இருக்கும். அதே நேரத்தில், இந்த அரசை மதவாதச் சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் செய்வோம். அது எங்களின் கடமையும்கூட. இந்தப் பொருளில்தான் அப்படிப் பேசினேன்.”

“ஆனால், தி.மு.க-தான் உங்களைக் காப்பாற்றுகிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?”

“தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசியல் கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி வைத்தும்கூட தேர்தலில் தோல்வியைச் சந்திக்கிறார்கள். பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றபோது, கூவிக் கூவி அழைத்துத்தான் வேட்பாளர்களையே நிறுத்தினார்கள். அதுதான் தமிழ்நாட்டில் அவர்களுக்கான இடம். யதார்த்தத்தில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணி தேவை.”

“மாநிலங்களவைப் பதவி கேட்டுத்தான் சோனியாவை நீங்கள் சந்தித்தீர்களா?”

“பொறுப்பு கேட்டு இதுவரை நான் தலைமையை அணுகியதே இல்லை. தற்போது சோனியா காந்தியைச் சந்திக்கச் சென்றபோது, அவரே நான் மாநிலங்களவைப் பதவியை எதிர்பார்த்துத்தான் வந்திருக்கிறேன் என நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ‘தமிழ்நாட்டில் நமக்கு ஓரிடம் ஒதுக்கியிருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும்?’ என்றுதான் கேட்டேன். அவர்கள் சொன்ன ஆலோசனைப்படி நடந்துகொண்டேன். அதேநேரம், தலைவர் சிதம்பரத்தை வேறு மாநிலத்தில் போட்டியிடவைத்து, எனக்குத் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன்.”

தி.மு.க-வை நாங்கள் பாதுகாப்போம்... அது எங்கள் கடமையும்கூட! - அக்கறைப்படும் கே.எஸ்.அழகிரி

“தமிழ்நாட்டில் நடக்கும் மதம் சார்ந்த சர்ச்சைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?”

“தி.மு.க இந்து மதத்துக்கு எதிராக இருக்கிறது என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருகாலத்தில் தி.மு.க-வினர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அந்தக் கட்சியிலிருக்கும் பல முக்கியத் தலைவர்களே இறை வழிபாட்டில் ஈடுபாடு காட்டுகிறார்கள். தி.மு.க., ஆத்திகத்துக்கு எதிரானதல்ல. சமுதாயத்திலிருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான, சீர்திருத்தத்தைப் பேசும் கட்சி.”

“ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை ஆதீனம், பல்லக்குத் தடை எனத் தொடர் சர்ச்சைகள் எழுகின்றனவே?”

``சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் பல நூறு ஆண்டுகளாக தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். எனவே, அந்தக் கோயிலில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்திருக்கிறது. ஆனால், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதற்காகவே அத்துமீறக் கூடாது. நந்தனாரை உள்ளே விட மறுத்ததைப்போல, கனக சபை மீது ஏறி யாரும் இறைவனை வழிபடக் கூடாது என தீட்சிதர்கள் சொல்லியிருக்கக் கூடாது. இந்து சமய அறநிலையத்துறையும் எதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் செல்கிறோம் என விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரங்கள் அனைத்துப் பக்கங்களும் கூர்மையாக இருக்கும் கத்தி போன்றது. எனவே, முதல்வர் இதை கவனமாகக் கையாள வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism