Published:Updated:

“எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்தாலும், எழாத கட்சிதான் பா.ஜ.க!” - கே.எஸ்.அழகிரி சுளீர்

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

“ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் `அகண்ட பாரதம்’ என்ற கொள்கையைத்தான் பா.ஜ.க., ‘ஒரே இந்தியா’ என்று கொண்டுவர நினைக்கிறது. அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடம்.

“எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்தாலும், எழாத கட்சிதான் பா.ஜ.க!” - கே.எஸ்.அழகிரி சுளீர்

“ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் `அகண்ட பாரதம்’ என்ற கொள்கையைத்தான் பா.ஜ.க., ‘ஒரே இந்தியா’ என்று கொண்டுவர நினைக்கிறது. அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடம்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

செப்டம்பர் 7-ம் தேதி முதல் ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் சென்னை நந்தனத்திலுள்ள தனது வீட்டில் தீவிர ஆலோசனை மேற்கொண்டிருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“ராகுல் காந்தியின் நடைப்பயண ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன?”

“தமிழகம் இதுவரை கண்டிராத அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்துவருகிறோம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ மேற்கொள்ளும் ராகுல், கையில் தேசியக்கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். அந்த தேசியக்கொடியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராகுலிடம் கொடுத்து பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்.”

“பயணத்தில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனவே?”

“வெளிமாநிலப் பயணத் திட்டங்கள் குறித்து எனக்குத் தெரியாது. தற்போதைய திட்டத்தின்படியே 150 நாள்கள் நடக்கிறார். வேண்டுமென்றால் வடகிழக்கு மாகாணங்களுக்குத் தனியாக ஒரு பயணத்தை ஏற்பாடு செய்துவிடலாம் என்று தலைமை நினைத்திருக்கலாம்.”

“பா.ஜ.க முன்வைக்கும் `ஒரே இந்தியா’வுக்கும், காங்கிரஸின் `இந்திய ஒற்றுமைப் பயண’த்துக்கும் என்ன வேறுபாடு?”

“ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் `அகண்ட பாரதம்’ என்ற கொள்கையைத்தான் பா.ஜ.க., ‘ஒரே இந்தியா’ என்று கொண்டுவர நினைக்கிறது. அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடம். ஆனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித் மக்களும் வாழும் நாட்டில், ‘ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே வழிபாடு’ என்பது சாத்தியமில்லை. ஒருவரை இனம், மொழி, மதம், சாதி மூலம் அடையாளம் காட்டி, பொதுச் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கும் செயலை பா.ஜ.க தீவிரமாகச் செய்துவருகிறது. `நாட்டில் வாழும் அனைவரும் இந்தியர்கள்’ என்பதுதான் காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை’ கோஷம். பா.ஜ.க இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறது... நாங்கள் ஒன்றுபடுத்துகிறோம். அதுதான் வேறுபாடு.”

“எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்தாலும், எழாத கட்சிதான் பா.ஜ.க!” - கே.எஸ்.அழகிரி சுளீர்

“ஆனால், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களையே ராகுலால் இணைக்க முடியவில்லையே?”

“காங்கிரஸில் இது ஒன்றும் புதுமை இல்லை. சுதந்திரத்துக்கு முன்பாக காந்திக்கு இணையான தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், காங்கிரஸிலிருந்து விலகினார். அதேபோல, சுதந்திரத்துக்குப் பின்பாக நேருவுக்கு இணையான ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜாஜி போன்ற பல தலைவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குலாம் நபி ஆசாத் ஒன்றும் அவ்வளவு பெரிய தலைவர் இல்லை. அவர் பக்கம் தொண்டர்கள் யாரும் செல்லவும் இல்லை.”

“ `பதவி வேண்டாம்’ என்று விலகிய ராகுல் மீது தலைவர் பதவியைத் திணிக்கிறீர்களே... இது முரணாக இல்லையா?”

“இதற்குப் பெயர் திணிப்பு இல்லை. கட்சியின் வளர்ச்சிக்கான தேவை... அவர் தலைவராக இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். தொண்டர்கள் விரும்பாதவர்கள் தலைவராக வந்தால், கட்சி செயலற்றுப்போகும்.”

“ `தமிழகத்தில் தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனில்தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே?”

“ஆமாம், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள்தான் தோழமைக் கட்சிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கின்றன. நாங்கள் கொஞ்சம் ஆரோக்கியமாக இருப்பதால், தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜன் எங்களுக்குப் பொருந்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களில் 72 சதவிகிதம் வெற்றிபெற்றிருக்கிறோம். ஆனால், பண பலம், அ.தி.மு.க கூட்டணி என ‘டபுள் ஆக்சிஜன் சிலிண்டர்’களோடு தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு வெறும் நான்கு இடங்களே கிடைத்தன. எவ்வளவு ஆக்சிஜன் கொடுத்தாலும், ஏற்றுக்கொள்ளாத, எழுந்து நிற்காத, வீக்கான கட்சிதான் பா.ஜ.க என்பது நிரூபணம் ஆகிவிட்டதே?”

“அ.தி.மு.க ஆட்சியின்போது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து எண்ணற்ற போராட்டங்களில் பங்கேற்ற நீங்கள், இப்போது சைலன்ட்டாக இருப்பது ஏன்... அந்தப் பிரச்னைகளெல்லாம் சரியாகிவிட்டனவா?”

“தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்றக் காரணமாக இருக்கும் அ.தி.மு.க-வை அப்புறப்படுத்த வேண்டியது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கடமை. அதற்காக அ.தி.மு.க ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால், தி.மு.க எங்கள் தோழன். தி.மு.க இல்லையென்றால் அந்த இடத்துக்கு வேறு தீயசக்தி வந்துவிடும். எனவே, தி.மு.க அரசைக் காப்பாற்றவேண்டியது எங்கள் கடமை. அதே சமயம் அரசு செய்யும் தவறுகளையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நாங்கள் நேரடியாக முதல்வரிடமே சுட்டிக்காட்டுகிறோம். அவரும் அதற்கு செவிகொடுத்து நடவடிக்கை எடுக்கிறார்.”

“எத்தனை நாள்கள்தான் கூட்டணியிலேயே இருந்துகொண்டு தலைமையைக் காப்பாற்றுவீர்கள்... தமிழ்நாட்டை ஆள காங்கிரஸுக்கு ஆசை இல்லையா?”

“தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் எங்கள் கனவு. அதை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறோம். கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்து கட்சியை வலிமையாக்குகிறோம்.”

“உங்களுக்கு வலுவான கட்டமைப்பு இருந்தும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-தானே ஸ்கோர் செய்துவருகிறது?”

“ஆளுங்கட்சிமீது வாய்க்கு வந்த குற்றச் சாட்டைச் சொல்வதோடு இடத்தை காலி செய்துவிடுகிறது தமிழக பா.ஜ.க. போகிற போக்கில் ஒரு வெடியை வீசுகிறார்கள். அது ஊசி வெடிபோல் ‘டொப்’ என்று ஒரு சிறு சத்தத்தை ஏற்படுத்துகிறது. உடனே அணுகுண்டு வெடித்ததுபோல் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். அன்றோடு அது முடிந்துவிடும். பிறகு அடுத்த ஊசி வெடி. இதைத்தான் தொடர்ந்து செய்து விளம்பரம் தேடுகிறார்கள். அவர்களைப்போல எங்களுக்கு வீண் விளம்பரம் தேவையில்லை.”