Election bannerElection banner
Published:Updated:

ஏழு அமைச்சர்களுக்கு சிக்கல் முதல் குஷியில் விஜயபாஸ்கர் வரை கழுகார் அப்டேட்ஸ்...!

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

``தே.மு.தி.க கட்சியினரை ஃபாலோ செய்துவருகிறேன். தகவல்களை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்” - சுருக்கமாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் கழுகார்...

வன்னியர் உள் இட ஒதுக்கீடு
ஏழு அமைச்சர்களுக்கு சிக்கல்!

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரம், தென்மாவட்டங்களில் பன்னீர்செல்வம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன், கடம்பூர் ராஜூ ஆகிய ஏழு அமைச்சர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.வி.கதிரவன் உள் ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்துவருகிறார். முக்குலத்தோர் அமைப்பின் தலைவர் கணேசத்தேவர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

டாக்டர் சேதுராமன்
டாக்டர் சேதுராமன்

இந்த அதிருப்திகளை சமாளிக்கத்தான் டாக்டர் சேதுராமன் கட்சியையும், சில லெட்டர் பேடு அமைப்புகளையும் வளைக்க அ.தி.மு.க காய்நகர்த்துகிறது. ஆனாலும், அந்த அமைப்பினர் ஆதரவுக் கடிதம் கொடுத்ததோடு நின்றுவிடுவார்கள்; வாக்கு கேட்டு சமுதாய மக்களை சந்திக்கச் செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகளும் தென் மாவட்டங்கள் முழுவதும் அ.தி.மு.க-வைக் கண்டித்து கறுப்புக்கொடி ஏற்றுவது, ‘அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று பிரசாரம் செய்வது என்று தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தவிர, அந்த அமைப்புகள் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, வாக்குகளைச் சிதறடிக்கவும் தயாராகிவருகின்றன.

பத்தரையால ஏழு பேருக்கு ஏழரை!

ஜமாத்தை சரிகட்டும் வேலுமணி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை அறுவடை செய்துவிட வேண்டும் என்று தி.மு.க சிறப்பு வியூகங்களை வகுத்துவருகிறது. அதேபோல மக்கள் நீதி மய்யமும் கொங்கு மண்டலத்தில் சலங்கைகட்டி ஆடாத குறையாக சுற்றிச் சுழன்றுவருகிறது. இதனால், தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பதற்றத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் கொங்கு மண்டல அமைச்சர்கள்.

வேலுமணி
வேலுமணி

தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வைவிட அதிக வாக்குகள் பெற்றது தி.மு.க. தற்போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்கள் இந்தக் கூட்டணிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இதனால், பதற்றமான அமைச்சர் வேலுமணி தரப்பினர் இந்தச் சேதாரத்தை சரிகட்டுவதற்காக கோவை ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆனால், ஜமாத் தரப்பில் அசைந்து கொடுக்கவில்லையாம்.

கோல் அடிப்பாரா வேலுமணி?!

புதுக்கோட்டையில் இணைந்த கைகள்
குஷியில் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன், வழக்கறிஞரணி மாவட்டத் துணைத் தலைவர் நெவளிநாதன் ஆகியோர் பன்னீரின் ஆதரவாளர்கள். எடப்பாடி - பன்னீர் இணைப்புக்குப் பிறகும் இவர்களுக்கு அ.தி.மு.க-வில் புதிய பொறுப்புகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இவர்கள் மூவரும் அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் மோதல் போக்கைக் கடைபிடித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கோஷ்டிப் பூசல் கலங்கடித்தது. இந்தநிலையில்தான், சமீபத்தில் கார்த்திக் தொண்டைமானை அழைத்துப் பேசிய விஜயபாஸ்கர், அவரைச் சமாதானப்படுத்தி கரம் கோத்தார். இதைத் தொடர்ந்து, நெவளிநாதன், ராஜசேகரன் ஆகியோரும் அமைச்சருடன் கைகோத்திருக்கிறார்களாம். பகை மறந்து கரம் வலுப்பெற்றதால் அமைச்சர் தரப்பு குஷி என்கிறார்கள்.

நல்லா இருந்த புதுக்கோட்டையும் நாலு அரசியல்வாதியும்!

வலத்தெரு நீக்கம்... தலத்தெரு சேர்ப்பு!
காரைக்கால் காங்கிரஸ் லகலக...

சுமார் பத்து ஆண்டுகளாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கோலோச்சிவந்தவர் வலத்தெரு.பாஸ்கரன். இவரை மாற்ற வேண்டும் என்று எதிரணியினர் தலைகீழாக நின்றும் பப்பு வேகவில்லை. இந்தநிலையில்தான், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி, மகளிரணி, தொழிற்சங்கங்கள் எனப் பல்வேறு அமைப்புகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைமைக்கு அனுப்பிய புகாரில், ‘காரைக்கால் மாவட்டத் தலைவராக தலத்தெரு.சந்திரமோகனை நியமிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் கூண்டோடு என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்துவிடுவோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து பதறிப்போன காங்கிரஸ் தலைமை, மார்ச் 7-ம் தேதி அவசர அவசரமாக வலத்தெரு.பாஸ்கரனை நீக்கிவிட்டு தலத்தெரு.சந்திரமோகனை காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமித்திருக்கிறது. அந்த பயம் இருக்கட்டும்!

‘‘உண்மையான சாதியை மறைத்துவிட்டார்!’’
டாக்டர் கிருஷ்ணசாமி மீது மீண்டும் புகார்

புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, தனது உண்மையான சாதியை மறைத்ததாக இரண்டாண்டுகளுக்கு முன்பே சர்ச்சை கிளம்பியிருந்தது. இந்தநிலையில், மீண்டும் அந்த விவகாரத்தைச் சிலர் தூசுதட்டி எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு தரப்பினர் கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், எஸ்.பி-க்களிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அதில், ‘டாக்டர் கிருஷ்ணசாமி தன் சாதியை மறைத்து பொய்யாகச் சான்றிதழ் பெற்றிருக்கிறார். அவர்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த விவகாரம் மீண்டும் கிளப்பப்படுவது தென்மாவட்ட அரசியலில் அனலை அதிகப்படுத்தியிருக்கிறது.

சாமி... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!

திருத்தணி கோயில்
திரும்பி வந்த அதிகாரி!

திருத்தணி முருகன் கோயிலில் தங்க கோபுரம் அமைக்கும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக அப்போதைய சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, 2009-ம் ஆண்டு இங்கு பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களில் சிலர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரங்கள் காரணமாக ‘வெளிச்ச’மான ஒரு அதிகாரி தென்மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சமீபத்தில், அந்த அதிகாரி மீண்டும் திருத்தணி கோயிலுக்கே வந்துவிட்டார். இதில் பெரும் தொகை ஒன்று இந்து சமய அறநிலையத்துறையின் மேலிட அதிகாரிகளுக்கு கைமாறியிருக்கிறதாம். இதுதவிர, மேற்கண்ட வெளிச்சமான அதிகாரிக்கு வழங்கப்பட்ட அரசு காரை சென்னையிலிருக்கும் இன்னோர் உயரதிகாரியின் குடும்பத்தினர் சென்னைக்கும் பெங்களூருக்கும் ரூட் அடித்துவருகின்றனர். அது தொடர்பாக தலைமைச் செயலகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டிருக்கிறதாம். முருகனுக்கே வெளிச்சம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு