Published:Updated:

``முதல்வரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா... இல்லை குடும்பச் சுற்றுலாவா?" - எடப்பாடி காட்டம்

எடப்பாடி பழனிசாமி

`அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். அதனால், சசிகலா இனி புதுசா குட்டைய குழப்ப நெனச்சாலும் முடியாது.' - எடப்பாடி பழனிசாமி

``முதல்வரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா... இல்லை குடும்பச் சுற்றுலாவா?" - எடப்பாடி காட்டம்

`அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். அதனால், சசிகலா இனி புதுசா குட்டைய குழப்ப நெனச்சாலும் முடியாது.' - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்துக்கு அடுத்த மாதம் சசிகலா சுற்றுப்பயணம் வருவதை முன்னிட்டு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்குப் பலமான வரவேற்பு கொடுக்க அணிதிரண்டு தயாராகிவருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க அமைப்புத் தேர்தலை பார்வையிட்ட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதலமைச்சரின் துபாய் பயணம் வேடிக்கையாக இருந்துவருகிறது. அரசியல் ரீதியாகச் செல்பவர் உடன் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்துச் செல்வது சரி. இவர் குடும்பத்தையும் சேர்த்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

மக்களே இவர் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீட்டைப் பெருக்கச் சென்றிருக்கின்றாரா... அல்லது குடும்பத்திற்கு புதிய தொழிலைத் தொடங்க சென்றிருக்கின்றாரா என்று நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர். இதே போன்றுதான் சென்ற ஆட்சியில் நான் லண்டன் சென்றபோது உடன் அமைச்சர்களை அழைத்துச் சென்றேன். அங்கு ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம். அதிநவீன மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்தும் பார்வையிட்டோம். அப்போது அமைச்சர்களுடன் சுற்றுலா சென்றதாக அவதூறு கூறிய ஸ்டாலின் இப்போது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாங்கள் வெளிநாடு சென்று புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி அடிக்கல் நாட்டிய பிறகு, அதைத் தான் செய்ததாக மீண்டும் அடிக்கல் நாட்டுகிறார். தற்போதைய சர்வதேச கண்காட்சியில் கூட அ.தி.மு.க அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. அ.தி.மு.க திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தி.மு.க ஆட்சியில்தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். நாங்கள் இதுபோன்று குரல் கொடுக்க ஆரம்பித்தாலே தி.மு.க-வினர் பொள்ளாச்சி சம்பவத்தில் எங்கள் மீது பலியைச் சுமத்துகின்றனர். அதில் உள்ள குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன்தான் முதலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகாரளித்தார். அவர் மீதே அவதூறு பரப்புகிறார்கள்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சசிகலா
சசிகலா

தொடர்ந்து அவரிடம், `சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பிருக்கிறதா' எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ``தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தலைமைக்கழக நிர்வாகிகளும் இணைந்து அவரைக் கட்சியை விட்டு நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணைந்து அறிவித்துவிட்டோம். அதனால், சசிகலா இனி புதுசா குட்டைய குழப்ப நெனச்சாலும் முடியாது.

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை தி.மு.க அரசு `எக்ஸ்பிரஸ் வே' என்று பெயர் மாற்றிக்கொண்டு வர முயன்று வருகிறது. அந்தத் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism