Published:Updated:

பா.ஜ.க-வின் `பி’ டீமா அ.தி.மு.க?- என்ன சொல்கிறார் ஜெயக்குமார்

ராம் பிரசாத்

பா.ஜ.க `பி’ டீமாக அ.தி.மு.க செயல்பட அவசியமில்லை என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

`நான் இறந்தால், இந்த அவையில் எனக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்’ என்று நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை கண்ணீர் மல்க பேசினார் மைத்ரேயன். டெல்லியிலிருந்து சென்னை வந்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர் அ.தி.மு.க தலைமை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

மைத்ரேயனுக்கு பா.ஜ.க-வில் நல்ல நட்பு வட்டம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது முதலில் ஆதரவுக் குரல் கொடுத்தது மைத்ரேயன்தான். தற்போது ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத் குமார் எம்.பி-யாகிவிட்டார். மைத்ரேயனுக்கு தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க தலைமை சீட்டு வழங்கவில்லை. ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் தனது அதிருப்தியை பொதுவெளியில் பேசியுள்ளார்.

அ.தி.மு.க-வின் கோட்டை என கருதப்பட்டு வந்த கொங்கு மண்டலத்தை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கைப்பற்றியது. அ.ம.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்ததும் கரூரில் காட்சி மாறியது. அவரது வருகை தி.மு.க-வுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் நடவடிக்கை பிடிக்காமல் தினகரனுடன் இணைந்தார். தினகரனுடன் மனக்கசப்பு ஏற்படவே அ.ம.மு.க-வில் இருந்து சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தேனியில் சமீபத்தில்தான் பிரமாண்டமாக நடந்தது. தற்போது மைத்ரேயன் தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா சமாதிக்கு சென்ற மைத்ரேயனுடன் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவினால் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் அதிகமானோர் சென்றனர்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பதவி வழங்கவில்லை என்ற காரணத்துக்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. முந்தைய காலங்களில் எனக்கும்தான் சீட்டு மறுக்கப்பட்டது. நான் என்ன அதற்காக அழுதேனா. நான் முடங்கிவிடாமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் வாய்ப்பு மறுத்தாலும் என்னுடைய உழைப்பைக் கண்டு ஜெயலலிதா எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினார். நாங்கள் பா.ஜ.க-வின் `பி’ டீமாக செயல்படவேண்டிய அவசியம் இல்லை. சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் இடமில்லை” என்றார்.