Published:Updated:

கோலத்தில் பிரச்னை இல்லை; ஆனால்.. அமைச்சர் பாண்டியராஜன் சொல்வது என்ன?

கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெசன்ட் நகர் பகுதியில் வீட்டின் முன்பு கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்த 5 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். கோலத்தில் `நோ டு என்.ஆர்.சி, நோ டு என்.பி.ஆர்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் காவல்துறையால் விடுவிக்கப்பட்டனர்.

கோலம்
கோலம்
Twitter/ @lonelyredcurl

கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தென்னக பன்பாட்டு மையம் சார்பில் தேசிய கிராமிய கலை விழாவின் நிறைவு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “தேசத்துக்கு விரோதமான கருத்துகளை கோலம் மூலம் சொன்னாலும் தவறு தான். கோலத்துக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. கோலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. கோலத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் அலங்கோலமாக இருந்ததால் காவல்துறையினர் தங்களது கடமையை செய்ததாக” கூறினார்.