Published:Updated:

`கருத்துரிமையை வாழவிடுங்கள்!'- விகடன் நிருபர்கள் மீதான வழக்குப்பதிவுக்குத் தலைவர்கள் கண்டனம்

விகடன்
விகடன்

ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பாகச் செய்தி சேகரித்த விகடன் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். கனிமொழி, சீமான், தமிமுன் அன்சாரி, வைரமுத்து எனப் பலரும் ஆளும் கட்சியின் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் சங்கமும் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

விகடன்
விகடன்

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இதுதொடர்பாக கூறுகையில், ``தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதற்காக ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் குமரி மாவட்டம் , மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை அகதிகளிடம் ஜூனியர் விகடன் கருத்துக் கேட்பு... விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? இரட்டைக் குடியுரிமை தேவையா? அல்லது இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பமா? என்ற 3 கேள்விகளுடன் அம்மக்களைச் செய்தியாளர்கள் சந்தித்து கருத்துக் கேட்டதைத் தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்குகளைப் பாய்ச்சியுள்ளது.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

அந்த மக்களின் பிரச்னைகள் மைய்ய நீரோட்டத்திற்கு வந்திருக்கும் போது, இது குறித்து அவர்களிடம் கருத்துக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. அதுதான் ஜனநாயகமாகும். உண்மையான நிலவரம் வெளி உலகிற்குத் தெரியக்கூடாது என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இது பத்திரிகையாளர்களின் நியாயமான சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். தமிழக அரசு , இவ்விரு பத்திரிகையாளர்களின் மீது போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று, இதழியல் ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

`விகடன் நிருபர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுங்கள்!‍' -கொந்தளிக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்

தி.மு.க எம்.பி கனிமொழி, ``ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாகுமரியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில், ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். உடனடியாக ஊடகத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ``குமரி அகதிகள் முகாமில் குடியுரிமைச்சட்டம் தொடர்பாக ஈழ உறவுகளின் கருத்தறியச்சென்ற விகடன் செய்தியாளர்கள் மீது பிணையில் வர இயலா பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது கருத்துரிமையை மறுக்கும் கொடுஞ்செயல். ஊடகத்துறையின் மீதான இத்தாக்குதலைக் கைவிட்டு வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

`முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்!' -விகடன் நிருபர்கள் மீதான வழக்கு குறித்து கடம்பூர் ராஜு

``விகடன் நிருபர்கள் மீது வழக்குத் தொடுத்திருப்பது பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரானது. கனத்த மனத்தோடு கண்டிக்கிறேன். வழக்கைத் திரும்பப் பெறுங்கள்; கருத்துரிமையை வாழவிடுங்கள்" என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்

ஊடகத்தைக் கண்ணாடியாகப் பார்த்து தனது முகத்தைச் சரிசெய்து கொள்வதுதான் ஆளுமைக்கு அழகு. குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு அதை ஜனநாயக ரீதியாகப் பதிவு செய்வதுதான் ஊடகத்தினரின் கடமையும், பணியும் ஆகும்.

சீமான்
சீமான்

இதில் வரும் விமர்சனங்களுக்கு உரிய பதிலையும் சகிப்புத்தன்மையையும் கையாள்வதுதான் ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கியமான செயல். அதை விடுத்து யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக ஊடகத்தினரின் குரல்வளையை நெரித்து உலைவைக்கும் தமிழக அரசின் நிலைப்பாடு மிகவும் வேதனைக்குரியது என்று நிருபர்கள் மீதான வழக்கப் பதிவுக்கு எதிராக சமூக ஆர்வலர்களும், அரசியல்கட்சியினரும் கடுமையாக தங்களது எதிர்ப்பை இணையதளங்களங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு