Published:Updated:

வேலூர்: `யாரைக் கொல்ல பேனர் வைக்கிறீர்கள்!’- கேள்வியெழுப்பிய தமிழ்நாடு இளைஞர் கட்சி

தமிழ்நாடு இளைஞர் கட்சியினர்
தமிழ்நாடு இளைஞர் கட்சியினர்

`தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது, தமிழ்நாடு இளைஞர் கட்சி. இதன் முன்னோட்டமாக, வேலூர் உட்பட பல்வேறு தொகுதிகளில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் செல்வாக்குகளைத் தெரிந்துகொள்வதற்காக மக்களைச் சந்தித்து `சர்வே’ எடுத்துவருகிறார்கள் அக்கட்சியின் இளைஞர்கள். அதேசமயம், மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழல்களையும் அம்பலப்படுத்திவருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாகச் செயல்பட்டு தங்களின் கொள்கைகளை கிராமப்புற இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க முயல்கிறார்கள்.

பேனரை அகற்றக் கோரிய இளைஞர்
பேனரை அகற்றக் கோரிய இளைஞர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று வேலூருக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று வி.சி.க நிர்வாகிகள் மாநகரின் பல இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர். முக்கிய வழித்தடமான கிரீன் சர்க்கிள் வளைவிலும் விபத்து ஏற்படும் வகையில் பேனர் வைத்திருந்தனர். மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையறிந்து அங்கு சென்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வடக்கு மண்டலத் தலைவர் நரேஷ்குமார் ராஜேந்திரன் தலைமையிலான இளைஞர்கள் அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரிடம் பேனரை அகற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள். போலீஸாரோ, ``அது, வி.சி.க பேனர். தொட்டால் தேவையில்லாத பிரச்னைகள் வரும். போங்க தம்பிகளா’’ என்று பதில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

வேலூர்: `இதயம் துடிக்கும் வரை நற்பணி தொடரும்!’ - ரஜினிக்காகக் கண்கலங்கிய மன்ற நிர்வாகி

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் பிறந்த நாளையொட்டி தி.மு.க-வினரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் நெடுதூரம் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். `இதுவும் குற்றம்’ என்று கூறி, போஸ்டர்களைக் கிழித்தெறியுறுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை போனில் தொடர்புகொண்டு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். நீண்ட நேரமாகியும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வராத காரணத்தால் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

``திருமாவளவன் பேனராக இருந்தாலும் சரி. வேறு எந்த தலைவரின் பேனராக இருந்தாலும் சரி... ரொம்ப ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறார்கள். காற்றடிக்கும்போது, வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை நாம் ஏற்கெனவே இழந்திருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறிச் செயல்படுகிறார்கள்.

கிழித்தெறியப்பட்ட சுவரொட்டிகள்
கிழித்தெறியப்பட்ட சுவரொட்டிகள்

யாரைக் கொல்ல பேனர் வைக்கிறீர்கள்... இன்னொரு சுபஸ்ரீயை இழக்க நாங்கள் தயாராக இல்லை. `தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தவோர் அரசியல் கட்சியும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இந்த வழியாக கலெக்டர் தினந்தோறும் பயணிக்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பேனரை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவுசெய்தனர். அந்தப் பதிவுகள் வைரலான நிலையில், வேலூர் எஸ்.பி செல்வகுமாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் தலையிட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் கூறினார். உடனடியாக, கிரீன் சர்க்கிளிலிருந்து வி.சி.க பேனர் அகற்றப்பட்டது. எம்.பி கதிர் ஆனந்தை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் இரவோடு இரவாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கிழித்து அகற்றினர்.

அடுத்த கட்டுரைக்கு