Published:Updated:

மின்வாரிய கேங்மேன் பணி: தேர்ச்சிபெற்றும் பணியில்லை... காத்திருக்கும் 5,336 பேர்!

மின்சாரம்
மின்சாரம்

கேங்மேன் பணிக்குத் தேர்வெழுதியவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பணி கிடைத்துவிட்டது. அதிக மதிப்பெண் பெற்றும் ஏறக்குறைய 5,000 பேருக்குப் பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்கள்.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சி முடியும் தறுவாயில் தமிழகம் முழுவதும் அதிகாரபூர்வமாகவே மின்வெட்டு அமலில் இருந்தது. தி.மு.க 2011 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க மின்வெட்டும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறைதான் முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், மின்வாரிய கேங்மேன் பணிக்குத் தேர்வான 5,336 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கேங்மேன் பணிக்குத் தேர்வான சிலரிடம் பேசினோம். ``மின்சார வாரியத்தில் ஏராளமான பணிகள் இருந்தபோதிலும், கேங்மேன் பணிதான் முக்கியப் பணி. மின் இணைப்புக் கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பைக் கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்துக்கொடுப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கடியில் மின்சார வயர்கள் செல்வதால், மின்பணிக்காகப் பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்ட பிறகு தோண்டிய பள்ளத்தை மூடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களைப் பழுதுபார்ப்பது எனப் பலவகையான பணிகளை கேங்மேன் வேலையாட்கள்தான் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்
Representational Image

கேங்மேன் வேலைக்கான அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வெளியானது. சுமார் 90,000 பேர் அதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். முதலில் பிசிக்கல் டெஸ்ட் எனப்படும் உடற்தகுதித் தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சியாகி, எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற்ற 14,949 பேர் கேங்மேன் பணிக்குத் தேர்வாகியிருந்தோம். 2019-ம் ஆண்டிலேயே தேர்வானபோதும் அவர்களில் 9,613 பேருக்கு மட்டும் முதலில் போஸ்டிங் போட்டுவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இதுவரை பணிக்குச் சேராத எங்களைவிட குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள். மின்வாரியத்தில் தெரிந்த நபர்களைவைத்தும், வைட்டமின் ‘ப’ -வை தாராளமாக இறக்கியும் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர். செலவு செய்ய முடியாத நாங்கள் 5,336 பேருக்கு மட்டும் இன்னமும் பணி நியமன ஆணை வழங்கப்படவேயில்லை.

உதயநிதியைச் சந்தித்து மனு கொடுத்த கேங்மேன் பணிக்குத் தேர்வானவர்கள்.
உதயநிதியைச் சந்தித்து மனு கொடுத்த கேங்மேன் பணிக்குத் தேர்வானவர்கள்.

கடந்த இரண்டாண்டுகளாக வேலை கேட்டுப் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம். தற்போது புதிதாக தி.மு.க அரசு பொறுப்பேற்றுள்ளதால், எங்களது நிலையை எடுத்துக் கூறும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு, மின்சாரத்துறை அமைச்சர் அலுவலகம், மின்வாரிய சேர்மன், முதல்வர் அலுவலகம் என எல்லாவற்றுக்கும் மனு கொடுத்துள்ளோம். முதல்வரை நேரில் சந்திக்க முடியாத காரணத்தால், அவரது மகனும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். எங்களுடைய வேலையை நம்பித்தான் எங்களது குடும்பமே காத்திருப்பதால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு எங்களை உடனடியாக பணிக்கு அமர்த்த வேண்டும்” என்றனர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) தலைவர் ஜெய்சங்கர், ``மின்வாரிய கேங்மேன் பணிக்குத் தேர்வானவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு மட்டும் இன்னும் வேலை கொடுக்காதது அபத்தமானது. தி.மு.க அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால், அவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான், எங்கள் சங்கம் மூலம் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம். உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திக்கவைத்து மனு கொடுக்கவைத்தோம், அவரும் கண்டிப்பாக முதல்வரிடமும் அமைச்சரிடமும் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். சுமார் 5,000 பேரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு