Published:Updated:

அதிர வைத்த அரசியல் படுகொலை... லீலாவதி உயிர்விட்ட தினம் இன்று! #OnThisDay

லீலாவதி
லீலாவதி

23 ஆண்டுகளுக்கு முன்பு லீலாவதி உயிர்விட்ட நாள் இன்று. தமிழகத்தைப் பதற வைத்த அந்த அரசியல் படுகொலை ஏன் நடந்தது. குற்றவாளிகள் அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்பட்டது எதற்காக? அலசுகிறது கட்டுரை!

1997 ஏப்ரல் 23-ம் தேதி. புதன்கிழமை. மதுரை வில்லாபுரம்!

எண்ணெய் வாங்குவதற்காகப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடைக்குப் போய்க்கொண்டிருந்தார் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி. தொழிலாளர் தினத்துக்கு ஒரு வாரம்தான் இருந்ததால், அதை எப்படிக் கொண்டாடுவது எனக் கட்சித் தோழர்களுடன் அருகில் பேசிக்கொண்டிருந்தார் லீலாவதியின் கணவர் குப்புசாமி. திடீரென அலறல் சத்தம். 'ஒரு பொம்பளையை ரவுடிங்க வெட்டுறாங்க'' எனக் கதறியபடியே எல்லோரும் அலறி ஓடுகிறார்கள். பதற்றத்தோடு குப்புசாமியும் ஓடி வருகிறார். ரத்த வெள்ளத்தில் துள்ளத் துடிக்க ரோட்டில் கிடக்கிறார் லீலாவதி. அவரது கழுத்தைக் குறி பார்த்திருந்தது அரிவாள். மருத்துவமனைக்குச் சென்று லீலாவதி உயிர் பிழைத்துவிடக் கூடாது என்கிற நோக்கம் வெட்டியவர்களிடம் வெளிப்பட்டிருந்தது.

லீலாவதி படுகொலை
லீலாவதி படுகொலை

அந்தப் படுகொலை நடப்பதற்கு முன்பு வரையில் லீலாவதி யார்? என்பதைத் தமிழகம் அறிந்திருக்கவில்லை. தமிழகத்தில் நடந்த முக்கியமான அரசியல் படுகொலை லீலாவதி மரணம். யார் இந்த லீலாவதி?

லீலாவதி
லீலாவதி

கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த குப்புசாமி 1977-ம் ஆண்டு லீலாவதியைக் கரம்பிடிக்கிறார். வீட்டில் நெசவு வேலை செய்துகொண்டிருந்த லீலாவதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினராகச் சேர்த்தார் குப்புசாமி.

மண வாழ்க்கைக்கு வந்த லீலாவதி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். வறுமையில் வளர்ந்த பின்னணி என்பதால் இயல்பாகவே ஏழைகள் மீது லீலாவதிக்குக் கரிசனம் இருந்தது. அவர்களின் உரிமைகள் தட்டிப்பறித்த போதெல்லாம் லீலாவதிக்குக் கோபம் வந்தது. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் லீலாவதியைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆக்கியது. வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கிறார்.

கூட்டம் ஒன்றில் லீலாவதி
கூட்டம் ஒன்றில் லீலாவதி

வட்டிக்குப் பணம் வசூல், ரேஷன் பொருள்கள் கடத்தல், அரசு குடி தண்ணீரை விலைக்கு விற்பது, ரௌடியிசம் ஆகியவை 1990-களில் மதுரை வில்லாபுரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. குடிநீர் விற்பனை... ரேஷன் கடை முறைகேடு, ரௌடியிசம் இந்த மூன்றும்தான் வில்லாபுரம் பகுதியின் பிரதான பிரச்னைகள். அப்படியான சூழலில் 1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.

உள்ளாட்சி இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. வில்லாபுரம் 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு லீலாவதியை நிறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அதுவரை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை மார்க்சிஸ்ட் கட்சி கைப்பற்றியது. அதற்குக் காரணம் லீலாவதிக்கு அங்கே இருந்த தனிப்பட்ட செல்வாக்கு.

லீலாவதி போராட்டம்
லீலாவதி போராட்டம்

அன்றைக்கு வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் எல்லாம் இல்லை. மாநகராட்சி மூலம்தான் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள் அரசியல் பின்புலம் கொண்ட ரெளடிகள். கவுன்சிலரான லீலாவதி அதை எதிர்த்து குரல் கொடுத்தார். வில்லாபுரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு குடம் தண்ணீர் 2 ரூபாய் வரை விலை வைக்கப்பட்டது. 1997-ல் இரண்டு ரூபாய் என்பது ஏழைகளுக்குப் பெரிய தொகை. மக்களுக்குப் போக வேண்டிய தண்ணீர் ஹோட்டல்காரர்களுக்கு சப்ளை ஆனது. லாரித் தண்ணீரைப் பிடிக்க மக்கள் கூட்டம் முண்டியடிக்க... அதை வைத்து கல்லா கட்டினார்கள். வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைக்காமல் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டார்கள்.

ரத்த வெள்ளத்தில் லீலாவதி
ரத்த வெள்ளத்தில் லீலாவதி

'வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும் தண்ணீர்த் தொட்டியும் அமைக்க வேண்டும்' எனக் கவுன்சிலர் லீலாவதி மதுரை மேயருக்கு மனுக்கொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார். மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பினார். இதனால், வில்லாபுரம் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. மாநகராட்சி குழாய் மூலம் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிந்தது.

கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளைத் தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் லீலாவதி. அப்பகுதியில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் கோபத்தில் இருந்த வியாபாரிகள் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைத்தது. லீலாவதியின் எதிர்ப்பு அரசியல் ரெளடிகளின் வருமானத்துக்கு வேட்டு வைத்தது.

ஜூவி கவர் ஸ்டோரி
ஜூவி கவர் ஸ்டோரி

இப்படியான சூழலில்தான் 1997 ஏப்ரல் 23-ம் தேதி லீலாவதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். லீலாவதி கவுன்சிலர் ஆவதற்கு முன்பு வரையில், வில்லாபுரத்தில் தன் அரசியல் சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்தார் தி.மு.க-வை சேர்ந்த முத்துராமலிங்கம். உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு தன் தம்பி மனைவியை வேட்பாளர் ஆக்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லீலாவதியைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்தத் தேர்தல் தோல்வி, கவுன்சிலராக லீலாவதியின் செயல்பாடுகள் எல்லாம் முத்துராமலிங்கத்தை அரசியல் ரீதியாப் பாதித்தது. அது லீலாவதி கொலையில் வந்து முடிந்தது.

ஜூவி கட்டுரை
ஜூவி கட்டுரை

லீலாவதி கொலை வழக்கில் முத்துராமலிங்கம் கருமலையன், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மதுரை கீழ் நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றனர். 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளின்போது குற்றவாளிகள் அத்தனை பேரையும் விடுதலை செய்தது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

மனித உரிமை ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர் கடும் எதிர்ப்புகளைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை அன்றைய தி.மு.க ஆட்சி. ''அழகிரியின் செல்வாக்கால்தான் அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது'' என்கிற குமுறல் இன்றைக்கும் வில்லாபுரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

கதவடைப்பு
கதவடைப்பு

வில்லாபுரத்தில் இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு அரசியல் மறுமலர்ச்சியை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் லீலாவதி. வில்லாபுரம் பகுதிக்குக் குடிநீர்க் குழாய்களில் முதன்முறையாகத் தண்ணீர் வந்தபோது, அதைக் குடங்களில் பிடித்துக்கொண்டு போன மக்கள் வீட்டுக்குக் கொண்டு போகாமல் லீலாவதி உயிர்விட்ட இடத்தில் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

வில்லாபுரத்தில் குடிநீர் குழாயும் தரமான சாலையும்
வில்லாபுரத்தில் குடிநீர் குழாயும் தரமான சாலையும்

லீலாவதி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. லீலாவதி கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடந்தன. பொது மக்களிடம் அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமல் போயிருந்தால் லீலாவதி வழக்கை இழுத்து மூடியிருப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு