Published:Updated:

ஒரு டோக்கனுக்குள் இத்தனை `கை'களா?! - ஆர்.கே.நகரை விஞ்சிய புதுவை காங்கிரஸின் புது டெக்னிக்

காமராஜர் நகர் தொகுதி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டோக்கன்களை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

டோக்கன்
டோக்கன்

தமிழகம் புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் இடைத்தேர்தல்களின் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்

புதுச்சேரியில் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரசும், என்.ஆர்.காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கெனவே இரு தரப்பும் வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை, “தேர்தல் விதிமுறைகளை மீறி காங்கிரஸ் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வந்ததாகவும், தீபாவளி கழித்து அந்த டோக்கன்களைக் கொடுத்து ரூ.5000 வாங்கிக் கொள்ளலாம்” என்று காங்கிரஸ் தரப்பினர் கூறிவருகின்றனர் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பி.ஜே.பி உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரி மன்சூரிடம் புகார் அளித்ததோடு, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் கலந்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டோக்கன்
டோக்கன்

அதனடிப்படையில் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் முடிதிருத்தும் நிலையத்தில் காவல்துறையினருடன் அதிரடியாக ஆய்வு நடத்திய அதிகாரிகள், கட்டுக் கட்டாக சாய்பாபா படம் போட்ட டோக்கன்களைப் பறிமுதல் செய்ததோடு அதை விநியோகித்துக் கொண்டிருந்த மூன்று பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சாய்பாபா படத்தில், முடியாது என்பது மூடநம்பிக்`கை’; முடியுமா என்பது அவநம்பிக்`கை’; முடியும் என்பது தன்னம்பிக்`கை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.