Published:Updated:

சித்து: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல் - ``அவர் நிலையான நபர் இல்லை" அமரீந்தர் சிங் ட்வீட்

கேப்டன் அமரீந்தர் சிங், சித்துவுக்கு இடையில் ஏற்கெனவே தகராறு இருந்தது. எந்த நிலையிலும் சித்துவை பஞ்சாப் முதல்வராக விட மாட்டேன் என அமரீந்தர் நேரடியாகவே கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் அவர் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றது முதல் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கு தொடர்ந்தது. அமரீந்தர் சிங் கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை விலக்கிவிட்ட பிறகு சரண்ஜித் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தொடர்ந்து அமரீந்தர் பாஜக-வில் சேர வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து
மகாராஷ்டிரா எம்.பி பதவி: காங்கிரஸ் கோரிக்கை; வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற பாஜக!

தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியதுடன் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட நவ்ஜோத் சிங், ``சமரசங்களுக்கு ஒப்புக்கொள்ளும்போது ஒரு மனிதனின் குணங்கள் சரியத் தொடங்குகின்றன. பஞ்சாபின் வளர்ச்சியிலும் நலனிலும் எவ்வித சமரசங்களும் செய்துகொள்ள முடியாது. எனவே நான் வகித்துவரும் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸுக்கு என் சேவைகள் தொடரும்" எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். புதிய முதல்வர் சரண்ஜித்தின் அமைச்சரவையில் இலாகாக்கள் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் நவ்ஜோத் சிங் பதவி விலகியிருக்கிறார்.

கேப்டன் அமரீந்தர் சிங் - சித்துவுக்கு இடையில் ஏற்கெனவே தகராறு இருந்தது. `எந்த நிலையிலும் சித்துவை பஞ்சாப் முதல்வராக விட மாட்டேன்’ என அமரீந்தர் நேரடியாகவே கூறியிருந்தார். தற்போது டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அமரீந்தர் சிங் அங்கு அமித் ஷாவைச் சந்தித்து பாஜக-வில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. அமரீந்தர் பதவி விலகிய பின்னர் பாஜக-வைச் சேர்ந்த ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் ஆகியோர் அமரீந்தரை பாஜக-வுடன் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

கடந்த ஜூலையில் நவ்ஜோத் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதை அமரீந்தர் சிங் விரும்பவில்லை. இருவருக்கும் மோதல் போக்கு தொடர, ஆகஸ்ட் மாதம் சில எம்எல்ஏ-க்களும் அமரீந்தருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளால் ``நான் அவமானப்பட்டதாக உணர்கிறேன்" எனக் கூறி அமரீந்தர் சிங் பதவி விலகினார். தற்போது சித்துவின் பதவி விலகலைச் சாடி, ``நான் உங்களிடம் கூறினேன்... அவர் ஒரு நிலையான ஆள் இல்லை; பஞ்சாப் மாநில எல்லைகளுக்குப் பொருந்தாதவர்" என ட்வீட் செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு