Published:Updated:

டெல்லி விசிட் : 4 எம்.எல்.ஏ; 20 பேர் பட்டியல்; மோடியுடனான சந்திப்பில் சாதிப்பாரா எல்.முருகன்?!

மோடி
மோடி

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுடன், நான்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் நாளை (ஜூலை 3-ம் தேதி) பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளனர். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இவர்களின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2021, தமிழக சட்டமன்றத் தேர்தலோடு, அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-க்களாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க -வினரை பிரதமர் மோடியும், கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவும் சந்தித்துவருகின்றனர். சமீபத்தில், புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வரிசையில், நாளை (ஜூலை 3-ம் தேதி) காலை பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரும் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் உடனிருப்பார் என்கிறது கட்சி வட்டாரம். வானதி சீனிவாசன் ஏற்கெனவே டெல்லி சென்றுவிட்ட நிலையில், மீதமுள்ள எம்.எல்.ஏ-க்களும் எல்.முருகனும் இன்று (ஜூலை 2-ம் தேதி) மாலை டெல்லி செல்கிறார்கள்.

கமலாலயம்
கமலாலயம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த பா.ஜ.க தீவிரமாகியிருக்கிறது. அதற்கான முதல்படிதான், பிரதமருடனான இந்தச் சந்திப்பு என்கிறார்கள். பிரதமர் மோடியுடனான எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு குறித்து பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தோம். ``தமிழகத்தில் வெறும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பா.ஜ.க-வுக்கு கிடைத்திருப்பது கட்சித் தலைமைக்கு அப்செட்டை ஏற்படுத்தியிருந்தாலும், சட்டசபையில் புதுக்கணக்கை தொடங்கியிருப்பதால் ஓரளவுக்கு பாசிட்டிவாக இதை தலைமை பார்க்கிறது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு சட்டமன்றத்தில் தி.மு.க-வுக்கு உண்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ.க-தான் இருக்க வேண்டுமென்பதை டெல்லி தீர்மானமாகச் சொல்லியிருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலை அதள பாதாளத்துக்குச் சென்றதற்கு காரணமாக அ.தி.மு.க ஆட்சியையும், மத்திய அரசையும் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவ்வப்போது குற்றம்சாட்டுகிறார். இதே குற்றச்சாட்டு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் சட்டமன்றத்தில் ஒலிக்கலாம். அப்போது, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆதாரபூர்வமாக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி விவரங்களையும், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் சட்டமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உத்தரவிட்டிருக்கிறது. அதற்கான தரவுகளைத் திரட்டவும், ஆலோசனைகளைப் பெறவும்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் இந்த டெல்லி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இது குறித்தெல்லாம் தீவிரமாகப் பேசவிருக்கிறார்கள்” என்றனர்.

ஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம்! - எல். முருகன் அதிரடி

இந்தப் பயணம் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், மற்றொருபுறம் மத்திய அமைச்சரவை விரிவாக்கமும் பரபரப்பை எகிறவைத்திருக்கிறது. தேனி நாடாளுமன்ற எம்.பி-யும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் நீண்டகாலமாக மத்திய அமைச்சர் பொறுப்புக்கு காய்நகர்த்திவருகிறார். அதேபோல, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் தன் பங்குக்கு முயல்கிறார். பா.ஜ.க-விலுள்ள ஒருவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு அளித்தால்தான் கட்சி வளரும் என கமலாலயத்திலிருந்து குரல்கள் ஒலிக்கின்றன. இந்தச் சூழலில், ``யாருக்குத்தான் கிடைக்கப்போகிறது பதவி?” என பா.ஜ.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

ஓ.பி.ரவீந்திரநாத்
ஓ.பி.ரவீந்திரநாத்

``ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடமில்லை என்று டெல்லி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. அவரை அமைச்சராக்குவதால், தமிழக பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதே காரணமும்தான் ஜி.கே.வாசனுக்கும் பதிலாகக் கிடைத்திருக்கிறது. மார்ச் 2020-ல் தமிழகத்திலிருந்து மூன்று எம்.பி-க்களை மாநிலங்களவைக்கு அ.தி.மு.க அனுப்பியது. அந்தப் பட்டியலில் பா.ஜ.க சிபாரிசில் ஜி.கே.வாசனும் இடம்பிடித்திருந்தார். அந்த உதவியே அவருக்குப் போதும் என டெல்லி தற்போது முடிவெடுத்துவிட்டதால், அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர் பெயர் இடம்பெறவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மீது கட்சியின் சீனியர்கள் சிலர் மனக்கசப்பில் இருந்தாலும், நான்கு பேரை வெற்றிகரமாக ஜெயிக்கவைத்து சட்டமன்றத்துக்குள் அனுப்பியதால், அவரை மத்திய அமைச்சராக்கலாம் என டெல்லியிலுள்ள சீனியர் தலைவர்கள் சிலர் ஜே.பி.நட்டாவிடம் பரிந்துரைத்துள்ளனர். எந்தவிதமான எம்.பி பொறுப்பிலும் தற்போது எல்.முருகன் இல்லை. அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்றால், அடுத்த ஆறு மாதத்துக்குள் மாநிலங்களவை வழியாகத்தான் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகளையும் டெல்லி ஆராய்ந்துவருகிறது.

சசிகலா விவகாரம்: ஓ.பி.எஸ் அணுகும் விதமும், எடப்பாடியின் திட்டமும்!

ஒருவேளை எல்.முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்டால், திருநெல்வேலி பா.ஜ.க எம்.எல்.ஏ-வான நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வரப்படலாம். அல்லது துணைத் தலைவரான அண்ணாமலையிடம் மாநிலத் தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம். இவை எல்லாமே, ஜே.பி.நட்டாவுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் முடிவு தெரியும்” என்றனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

டெல்லி செல்லும் எல்.முருகன் 20 பெயர் கொண்ட பட்டியலையும் உடன் எடுத்துச் செல்கிறாராம். பட்டியலில் இருப்பவர்களில் ஆறேழு பேருக்காவது மத்திய அரசின் வாரியங்கள், கமிஷன்களில் உறுப்பினர் பொறுப்பு வாங்கிவிட்டுத்தான் டெல்லியிருந்து அவர் சென்னை திரும்பவிருக்கிறார் என்கிறது கமலாலயம். அவர் வந்தவுடன், மாவட்டத் தலைவர்கள் மாற்றமும் இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு