லாக்டௌனில் உதவிய டாப் 10 எம்.பிக்கள்-பா.ஜ.க எம்.பி முதலிடம்; ராகுல், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு இடம்

லாக்டௌன் காலத்தில் உதவிய டாப் 10 எம்.பி-க்கள் பட்டியலில் உஜ்ஜயினி பா.ஜ.க எம்.பி அணில் ஃபிரோஜியா முதலிடம் பிடித்திருக்கிறார். ராகுல், 3-வது இடமும், தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் 9-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், ஜூலை மாதத்துக்குப் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. லாக்டௌன் காலத்தில் தங்களது தொகுதி மக்களுக்கு அதிகபட்ச உதவிகள் செய்த எம்.பி-க்கள் குறித்து டெல்லியைச் சேர்ந்த GovernEye Systems என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் மக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் 25 எம்.பி-க்கள் பட்டியலிடப்பட்டனர். அதன் பின்னர் 25 எம்.பி-க்களின் தொகுதிகளில் நேரடியாகக் கள ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியிருக்கிறது. மேலும், கள ஆய்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அந்த நிறுவனம் டாப் 10 எம்.பி-க்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
டாப் 10 எம்.பி-க்கள்:
அணில் ஃபிரோஜியா (உஜ்ஜயினி, மத்தியப்பிரதேசம்) - பா.ஜ.க.
அடல பிரபாகர ரெட்டி (நெல்லூர், ஆந்திரா) - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.
ராகுல் காந்தி (வயநாடு, கேரளா) - காங்கிரஸ்.
மஹூவா மொய்த்ரா (கிருஷ்ணா நகர், மேற்குவங்கம்) - திரிணாமுல் காங்கிரஸ்.

எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா (பெங்களூரு தெற்கு, கர்நாடகா) - பா.ஜ.க.
ஹேமந்த் துக்காராம் கோட்சே (நாசிக், மகாராஷ்டிரா) - சிவசேனா.
சுக்பீர்சிங் பாதல் (ஃபிரோஸ்பூர், பஞ்சாப்) - சிரோன்மணி அகாலி தளம்.
சங்கர் லால்வாணி (இந்தூர், மத்தியப்பிரதேசம்) - பா.ஜ.க.
தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை, தமிழ்நாடு) - தி.மு.க.
நிதின் கட்கரி (நாக்பூர், மகாராஷ்டிரா) - பா.ஜ.க.
இது தொடர்பாக GovernEye Systems வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆய்வு தொடங்கப்பட்ட அக்டோபர் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில், 512 மக்களவை எம்.பி-க்களுக்கு 33,82,560 பரிந்துரைகள் மக்களிடமிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு நடத்திய குழுவின் நிர்வாகி மஞ்சுநாத் கேரி, ``கொரோனா லாக்டௌன் காலத்தில் நமது எம்.பி-க்கள் மக்களுக்கு உதவுவதற்காகத் துணிச்சலாக எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த முடிவுகளில் குறிப்பிடவில்லை.

களத்தில் மக்களோடு உரையாடியதன் மூலம், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து எம்.பி-க்கள் பலர் மக்களிடம் நேரடியாகச் சென்று உதவியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. எம்.பி-க்கள் குறித்து பல தவறான கருத்துகள் பரவிவரும் சூழலில், மக்களுக்கு உதவுவதற்காகத் தங்களது உடல்நிலை பாதிக்கப்படுமே என்பதையெல்லாம் தாண்டி கடினமான சூழல்களில் களமிறங்கியிருக்கிறார்கள்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.