Published:Updated:

தஞ்சாவூர்:தி.மு.க நிர்வாகியின் சிபாரிசு; மறுத்த போலீஸ் அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றம்?!-நடந்தது என்ன?

போக்குவரத்து போலீஸ் மோகன்
போக்குவரத்து போலீஸ் மோகன் ( ம.அரவிந்த் )

கலெக்டர் கார் எனத் தெரிந்தும் அந்த காரை நிறுத்தி, ``சாரி சார், இது ஒரு வழிப்பாதை இப்படிப் போகாதீங்க!’’ எனக் கூறி போலீஸ் மோகன் மாற்றுவழியில் போகவைத்தார்.

கொரோனா தடுப்பு பணியிலிருந்தபோது தி.மு.க நிர்வாகி செய்த சிபாரிசைச் செய்யாமல் நேர்மையாக நடந்துகொண்ட போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ உயரதிகாரிகளால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பது சக காவலர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. மேலும் 'நேர்மைக்கான பரிசு இதுதானா' என்றும் புலம்பிவருகின்றனர்.

தி.மு.க நிர்வாகி நீலகண்டனுடன் மோகன்
தி.மு.க நிர்வாகி நீலகண்டனுடன் மோகன்

இது குறித்து போக்குவரத்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ``போலீஸ் எஸ்.எஸ்.ஐ மோகன் நேர்மையானவர். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் பணிக்கு வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன. யாரிடமும் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்க மாட்டார். விரைவில் எஸ்.ஐ-யாகப் பதவி உயர்வு பெறவிருக்கிறார். அன்னிக்கு கொரோனா தடுப்புப் பணியிலிருந்தபோது விதிமுறையை மீறி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி ரூ.200 அபராதம் வசூலிக்கும் பணியை மேற்கொண்டார். உடனே அந்த டிரைவர் தஞ்சாவூர் எம்.எல்.ஏ பேசுறாங்கன்னு சொல்லி தன் செல்போனைக் கொடுத்தார். அதை மோகன் வாங்கவில்லை. பின்னர் இன்னொருவர் சிபாரிசு செய்து வந்து வாக்குவாதம் செய்தார். அதையும் கண்டுகொள்ளாமல் அபராதம் வசூலித்தார்.

மூன்றாவதாகத்தான் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரான தி.மு.க-வின் தஞ்சை மாநகர துணைச் செயலாளரான நீலகண்டன் சிபாரிசுக்காக வந்து, 'சொன்னா செய்ய மாட்டீங்களா' எனக் கேட்டார். அதற்குத்தான், ``எங்க ஏரியாவுல தண்ணி வரலை. அதெல்லாம் செய்ய மாட்டீங்க. இதுக்கு மட்டும் வந்துடுறீங்க’’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் மீடியாவிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. எங்கிருந்து அழுத்தம் வந்ததோ தெரியவில்லை அன்று இரவே மோகன் ஆயுத்தப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயர் போலீஸ் அதிகாரிகள் இதை யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. நேர்மையாகப் பணிசெய்த போலீஸ் ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது போலீஸ் வட்டாரத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து போலீஸ்
போக்குவரத்து போலீஸ்

மோகன், உயர் போலீஸ் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பணி செய்யவிடாமல் தடுத்த தி.மு.க நிர்வாகியின் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நேர்மைமிக்க போலீஸ் தரப்பை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தன்னைத் தற்காத்துக்கொள்ள நீலகண்டன், மோகன் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசியதாகவும் புகார் கொடுத்தார். அதன் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட மோகன், தற்போது கிழக்கு காவல் நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எந்தப் பணியையும் ஒதுக்காமல் வெறுமனே உட்கார வைத்துள்ளனர்’’ என்றனர்.

`என்ன நடந்தாலும் நேர்மையாகத்தான் இருப்பேன். என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். இது தொடரும்’ என மோகன் சக போலீஸிடம் கூறியுள்ளார். இதைப் பற்றிக் கூறிய அவர்கள், ``ஒரு முறை இதற்கு முன் பணியிலிருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஒருவர், தன்னுடைய காரில் தெற்கு வீதி பகுதியில் ஒருவழிப் பாதையில் ராங் ரூட்டில் வந்தார்.

தி.மு.க நிர்வாகி நீலகண்டன்
தி.மு.க நிர்வாகி நீலகண்டன்

கலெக்டர் கார் எனத் தெரிந்தும், அந்த காரை நிறுத்தி, ``சாரி சார், இது ஒரு வழிப்பாதை. இப்படிப் போகாதீங்க!’’ எனக் கூறி மாற்றுவழியில் போகவைத்தார். இவரின் நேர்மைக்காகவும், பணிக்காகவும் சில வருடங்களுக்கு முன் தஞ்சை நீதிமன்றத்தில் பணியிலிருந்த நீதிபதி ஒருவர் வேறு மாவட்டத்துக்கு மாற்றலாகிச் செல்லும்போது மோகனை அழைத்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். அப்போது எந்தச் சூழ்நிலையிலும் இதேபோல் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்படுங்க என அறிவுரை கூறிவிட்டுச் சென்றார். இப்படி மோகனின் நேர்மைக்குப் பல நிகழ்வுகளை உதாரணம் சொல்ல முடியும்.

கடமையை சமரசம் செய்துகொள்ளாமல் செய்வதால் பலர் `அதிகப் பிரசிங்கி' என அவரை விமர்சனம் செய்வதும் உண்டு. இப்போது நேர்மையாகத் தன் பணியை செய்ததற்காக மோகன் இன்று தனித்துவிடப்பட்டிருக்கிறார். கடும் மன உளைச்சலிலும் தவித்துவருகிறார். ஒருகட்டத்தில் விஆர்எஸ் கொடுத்துவிட்டு வேலையை விட்டுச் சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். அவர் பக்கம் இருந்த நியாயத்தால் மீடியா, மோகன் பக்கம் இருந்தது. இல்லையென்றால், இன்னும் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டிருப்பார். மீண்டும் அவர் போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணி செய்ய வேண்டும். இதுவே எங்கள் விருப்பம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு