Published:Updated:

இளைஞனிடம் அண்ணா காட்டிய பெருங்கருணை... ஒரு வாசகரின் நேரடி அனுபவம்! அண்ணா நினைவு நாள் பகிர்வு

அண்ணா
அண்ணா

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு தினம். நமது வாசகரும், வணிக வரித்துறையில் உதவி ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவருமான மதுரை சிவ. சுதந்திரநாதன் அவரது அடிமனதில் ஆழப்பதிந்த ஒரு நிகழ்வினை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

அப்பொழுது எனக்கு பத்தொன்பது வயது. 5.8.1966-ல் மாநிலத் தேர்வணைக்குழு மூலமாக, வருவாய்த்துறையில் எனது சொந்த மாவட்டமான அன்றைய பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டத்திலேயே இளநிலை உதவியாளராக பணி கிடைத்த மகிழ்வில் இருந்தேன். 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது நான் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அண்ணா
அண்ணா

அங்கு கடலாடி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படும் பகுதியில் நான் உதவியாளராக இருக்க நேரிட்டது. அப்போது நான் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. அத்தொகுதியின் பல வாக்குச் சாவடிகளில் பதிவான அனைத்து வாக்குகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பதிவாகியிருந்தன. ஒரு வாக்கு கூட பிறருக்கு இல்லை! அப்பொழுதே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை அமைக்கும் என்பது புரிந்துவிட்டது.

என்னைப் போன்ற பலர் மகிழ, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர பேரறிஞர் அண்ணா அவர்கள் மார்ச் 1967-ல் முதல்வராக பதவியேற்றார். அப்பொழுது அரசால் கொண்டு வரப்பட்ட சில நிர்வாகச் சீர்திருத்த முறைகளால் வருவாய்த் துறையிலிருந்து வந்த கடன் பிரிவு, அம்மாவட்டத்தில் விலக்கப்பட நான் உட்பட நிரந்தரப் பணியென நினைத்துக்கொண்டிருந்த 67 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். என்ன செய்வதென்றே தெரியாத நிலை.

அண்ணா
அண்ணா

அப்பொழுது வெற்றியைக் கொண்டாடவும் மக்களுக்கு நன்றி கூறவும் அத்துடன் சேலம் உருக்காலை பிரச்னையையும் இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல மாவட்டங்களில் 1967 ஜூலை 23 -ம் தேதி எழுச்சி நாள் ஒன்றை நடத்தினர். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் நடந்த எழுச்சி நாள் கூட்டங்களில் ஒவ்வொரு அமைச்சர்கள் கலந்துகொள்ள என் சொந்த ஊரான சிவகங்கையில் நடந்த எழுச்சிநாள் கூட்டம் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், நான் பயின்ற ராஜா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அதில் பார்வையாளராக கலந்துகொண்ட எனக்கு நமது பணி நீக்கம் குறித்து அண்ணா அவர்களிடம் முறையிட்டால் என்ன என்ற நினைப்பு எழுந்தது. கூட்டம் முடிவுற்றதும் சிவகங்கையிலேயே இருந்த என் போன்று பணியிழந்த சில நண்பர்களை இரவே தொடர்புகொண்டு என் ஆலோசனையைக் கூறினேன். எல்லோரும் சரி என்றனர். ஆனால், மறுநாள் காலை நான் சொன்னது போன்று ஒருவரும் என் இல்லத்துக்கு வரவில்லை.

எனவே, நான் மட்டும் தனியாக ஒரு வெள்ளைத் தாளில் கையால் எழுதப்பட்ட ஒரு விண்ணப்பத்துடன் அண்ணா அவர்கள் தங்கியிருந்த சிவகங்கை பயணியர் விடுதிக்குச் சென்றேன். நுழைவு வாயிலில் இருந்த இரு காவலர்கள் என்னைத் தடுக்கவேயில்லை. ``ஐயா ஓய்வில்தான் இருக்கிறார். நீ போ தம்பி" என்று என்னை உள்ளே அனுமதித்தனர்.

அங்கே ஒரு ஆலமரத்தின் கீழே ஒரு சாதாரண ஓய்வு நாற்காலியில் அண்ணா அவர்கள் ஏதோ நாளிதழைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் தயங்கி நிற்க என் வருகையை உணர்ந்த அண்ணா தலையை உயர்த்தி ``வா தம்பி ஏன் தயக்கம்? அருகில் வா. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினார்.

அண்ணா
அண்ணா

அப்பொழுதெல்லாம் தூய தமிழில் பேசப் பழகிடவில்லை. நான் அவரிடம் ``எம்.பி.எஸ்.சி மூலம் கிடைத்த வேலைதான் எங்களுக்கு நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், தங்களது கவர்மென்டில் எங்களைப் பணி நீக்கம் செய்துவிட்டார்கள். எப்படியாவது எங்களுக்கு வேறு டிபார்ட்மென்டிலாவது வேறு மாவட்டத்திலாவது பணி தர வேண்டும்" எனத் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்து எனது விண்ணப்பித்தை அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி அதன் மார்ஜின் பகுதியில் எதோ எழுதி தனது உதவியாளரை அழைத்து அவரிடம் கொடுத்தார். பின் என்னிடம் ``போய் வா தம்பி. கவலைப்பட வேண்டாம் ஆவன செய்கிறேன்" என்றார். நான் நன்றி கூறித் திரும்பினேன்.

"ஊக்கம்தான் வெற்றியின் முதல் படிக்கட்டு!" - அறிஞர் அண்ணா பொன்மொழிகள் 20 #HBDAnna

சரியாக ஒரு வாரத்தில் தேர்வாணைக் கழகத்திடமிருந்து எங்கள் 67 நபர்களுக்கும் கடிதங்கள் வந்தன. ``இன்னென்ன துறைகளில் இன்னென்ன மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கே பணிபுரிய விருப்பமா?" என அதில் கேட்டிருந்தனர். அதன்படி நான் வணிகவரித்துறையில் அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்துக்கு இசைவை தெரிவித்து கடிதம் அனுப்ப சில மாதங்களில் தேர்வாணையக் கழகம் என்னை வணிக வரித்துறைக்கு மாற்றி நிரந்தரப் பணியாணையை வழங்கிட 11.1.1968-ல் திருக்கோயிலூர் வணிக வரி அலுவலகத்தில் பணியேற்றினேன்.

அண்ணா
அண்ணா

வணிகத்துறையில் சற்று ஏறக்குறைய நாற்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில் இன்றும், பேரறிஞர் அண்ணா அவர்கள் பத்தொன்பது வயது இளைஞனிடம் காட்டிய பரிவையும் எனது கோரிக்கையை கனிவுடன் கவனித்து பணி இழந்த நபர்களுக்கும் நிரந்தர மாற்றுப் பணி வழங்கிய அன்பான விரைவான நடவடிக்கையையும் நான் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னை யாரென்று தெரியாது, எந்த சிபாரிசுக் கடிதத்துடனும் செல்லவில்லை. யாரையும் உடன் அழைத்துச் செல்லவுமில்லை. நேர்மையான ஒரு கோரிக்கைக்கு எந்த அரசியலும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த அறிஞர் அண்ணாவை ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு.

இப்பொழுதும் அண்ணா அவர்கள் இறந்த அன்று (3.2.1969) இரவோடு இரவாக லாரியில் திருக்கோயிலூரில் இருந்து சென்னை சென்று ராஜாஜி ஹாலில் அழுது புரண்டது நினைவுக்கு வந்து கண்கள் பனிக்கின்றன.

- சிவ. சுதந்திரநாதன், உதவி ஆணையர் (வவ) ஓய்வு.

அடுத்த கட்டுரைக்கு