Election bannerElection banner
Published:Updated:

`திருச்சி கிழக்குக்கு நான்தான் வேட்பாளர்!’ - இனிகோ இருதயராஜ்-க்கு எதிராகக் கொதிக்கும் தி.மு.க-வினர்

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

கிழக்கு தொகுதியில் சமூக வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும் கணிசமாக இருப்பதால் சுலபமாக வெற்றிபெறலாம் எனக் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார் இனிகோ இருதயராஜ்.

சட்டமன்றத் தேர்தலில் தலைமை வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், `திருச்சி கிழக்கு தொகுதியில் நான்தான் வேட்பாளர்’ என்றும், விரைவில் தி.மு.க தலைமை அதை அறிவிக்கவிருக்கிறது என்றும் கூறிக்கொண்டு கடுமையாக வேலை பார்த்துவருகிறார் இனிகோ இருதயராஜ். இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் தொகுதியில் கிளம்பியிருக்கின்றன. கிழக்கு தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் முனைப்புக் காட்டிவரும் சூழலில் இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கக் கூடாது. தி.மு.க-வினருக்குக் கொடுக்க வேண்டும் என்கிற கலகக்குரலும் எழத் தொடங்கியிருக்கிறது. ஏன் இவருக்கு இவ்வளவு எதிர்ப்புகள் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

ஆதரவாளர்களுடன்  இனிகோ இருதயராஜ்
ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலில் களமிறங்க தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்கள் தலைமைக் கழகத்திடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், திருச்சி கிழக்கு தொகுதியைக் குறிவைத்து தி.மு.க முக்கிய நிர்வாகிகளான அன்பில் மகேஷ், அன்பில் பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி-யின் மகன் சூர்யா சிவா, மலைக்கோட்டைப் பகுதிச்செயலாளர் மதிவாணன் ஆகியோர் முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் தேர்தலில் போட்டியிட மூவ் செய்துகொண்டிருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் சமூக வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும் கணிசமாக இருப்பதால் சுலபமாக வெற்றி பெறலாம் எனக் கணக்க போட்டுக்கொண்டிருக்கிறார் இனிகோ இருதயராஜ்.

ஸ்டாலின்’ -
ஸ்டாலின்’ -

ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசியிருக்கிறாராம். அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததால், தொகுதியில் மிகக் கடுமையாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார். இதில்தான் தி.மு.க-வினர் கொந்தளிக்கிறார்கள். இவரை எதிர்க்கக் காரணம் என்ன என்று தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.``தளபதியைச் சந்தித்து ஆதரவு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா... தொகுதியில் நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டாமா? கையில் பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க நிர்வாகிகளைப் புறந்தள்ளி, அவருடைய சமூகத்தினரை மட்டுமே சந்தித்து ஆதரவு கேட்டுவருகிறார்.

அத்தோடு இவரது முகத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக போஸ்டர்கள், தினசரிப் பத்திரிகைகள், ஐடி டீம் எனப் பல கோடிகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார். இது தவறல்லவா... இவருக்காக உழைக்கக்கூடிய தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலில் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். தளபதியிடம் நெருக்கமாக இருப்பதால் எல்லோரும் பயந்துகொண்டு வேலைபார்ப்பார்கள் என்று நினைக்கிறார். இவர் சென்னையில்தான் தொழில் செய்துவருகிறார்.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

இவருக்காகத் தேர்தலில் வேலைபார்த்து வெற்றிபெற வைத்த பிறகு சென்னைக்குச் சென்றுவிடுவார். அதன் பிறகு கட்சியினரோ, பொதுமக்களோ அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் சென்னைக்கா செல்ல முடியும்...” என்று ஆவேசப்படுகிறார்கள். இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் தி.மு.க-வினருக்கு ஒதுக்குங்கள் என்கிற கலகக்குரல் எழத் தொடங்கியிருக்கிறது.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

இது குறித்து இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம்.``எங்க அண்ணனைத் தொகுதியில் வேலை பார்க்கச் சொல்லி தளபதிதான் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதன்படி அவரும் வேலை பார்த்துவருகிறார்.வேட்பாளர் பட்டியல் அறிவித்தவுடன் முறையாகச் சந்திப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு