பிறப்பும் பின்னணியும்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 1963-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் நாள் விவேகானந்தன்-வணிதாமணி தம்பதியினரின் மூன்று மகன்களில் மூத்த மகனாகப் பிறந்தவர் டி.டி.வி.தினகரன். இவரின் தாயார் வணிதாமணி, வி.கே. சசிகலாவின் உடன்பிறந்த சகோதரியாவார். இவருக்கு பாஸ்கரன், சுதாகரன் என்ற இரு இளைய சகோதரர்கள் உள்ளனர். இதில் சுதாகரன் என்பவர் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வளர்ப்புமகனாக 1990-களில் வலம் வந்தவர். தனது சொந்த மாமா சுந்தரவனத்தின் மகள் அனுராதாவைத் திருமணம் செய்துகொண்ட தினகரனுக்கு ஜெயஹரினி என்று ஒரு மகள் உள்ளார்.
கல்வித் தகுதி:
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1980-ம் ஆண்டு, மன்னார்குடியிலுள்ள ஃபின்லே மேல்நிலைப் பள்ளியில் தனது மேல்நிலை வகுப்பை நிறைவு செய்தார் தினகரன். அதன் பின்னர் கர்நாடகா மாநிலம், மைசூர் பல்கலைக்கழகத்தின் சிக்மகளூர் ஏ.ஐ.டி. கல்லூரியில் பி.இ.சிவில் இன்ஜினியரிங் பயின்ற தினகரன் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்.

அந்நிய செலாவணி வழக்கும் அரசியல் வருகையும்:
1991-1995 இடைப்பட்ட காலங்களில், ``சூப்பர் டூப்பர் டிவி”(Super Duper Tv Private Limited) என்ற நிறுவனத்தை தனது சகோதரர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார் தினகரன். அதனைத்தொடர்ந்து 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பண முதலீடு, சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்தது என டி.டி.வி.தினகரன் மீது ஃபெரா சட்டத்தின் (Foreign Exchange Regulation Act - FERA) கீழ் இந்திய அமலாக்கத் துறையினரால் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டு தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வி.கே.சசிகலாவின் மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆன தினகரன் பின்னர் ஜெ-வின் நம்பிக்கைக்குரியவராக போயஸ்கார்டனில் வலம் வந்தார்.
வெற்றியும் தோல்வியும்: நாடாளுமன்ற உறுப்பினராக…
1998-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தினகரனுக்கு தேனி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் தினகரன்.

2004-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரன் தோல்வியடைந்தார். இருந்தபோதும் தினகரன் மீது ஜெயலலிதா கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார் தினகரன்.
தொடர்ந்து 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தினகரன் பாதுகாப்புக்குழு உறுப்பினர், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் மனிதவள மேம்பாட்டுக்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் அங்கம் வகித்தார். மேலும் கட்சியில், அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராகவும், பின்னர் கழகப் பொருளாராகவும் இருந்தார். இந்த சூழலில் 2011-ம் ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவும், தினகரன் மறுவருகையும்:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. அதுவரை நேரடி அரசியலிலிருந்து விலகி இருந்த தினகரனை கட்சிக்குள் மீண்டும் இணைத்ததோடு, துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் தினகரனுக்குக் கொடுத்தார் சசிகலா.
அதன்பின்னர், தமிழக முதல்வாராகும் முயற்சியில் சசிகலா இறங்க, தனியாகச் சென்று தர்மயுத்தத்தை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். இந்தநிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் முதல்வராக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த பல்வேறு குளறுபடிகளுக்குப் பிறகு சசிகலா மற்றும் தினகரனிடமிருந்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சி அதிகாரம் கைமாறியது. சசிகலா, தினகரன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதிய வெற்றியும், புதிய கட்சியும்:
2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். அ.தி.மு.க தரப்பில் மீட்டெடுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிட, திமுக மற்றும் 59 சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், ஆளும் அ.தி.மு.க வேட்பாளரை விட சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் 89,063 வாக்குககள் பெற்று அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் டி.டி.வி.தினகரன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2018-ம் ஆண்டு, மார்ச் 15-ல் ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்" என்னும் புதிய கட்சியை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள்., எம்.பி., மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து தொடங்கினார். மீண்டும் அ.தி.மு.க-வும், இரட்டை இலைச் சின்னமும் மீட்டெடுக்கப்படும் வரை அ.ம.மு.க தங்களுக்கு ஒரு தனி அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார்.

2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க முதல்முறையாகப் போட்டியிட்டது. தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படாத காரணத்தினால், கேட்ட குக்கர் சின்னத்துக்குப் பதிலாகப் பரிசுப்பெட்டி பொதுச்சின்னமாக ஒதுக்கப்பட்டு, அ.ம.மு.க-வின் அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளும் தோல்வி. இருப்பினும் 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், கணிசமான அளவு வாக்குகளையும் பெற்று 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியை உறுதிசெய்தது அமமுக.
இதனிடையே, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.ம.மு.க-வைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிட்டது. 27 மாவட்டங்களுக்கு நடந்த தேர்தலில், 95 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் வெற்றிபெற்று (கூட்டணிகளைத் தவிர்த்து) மூன்றாவது பெரிய கட்சியாக தினகரனின் அ.ம.மு.க உருவெடுத்தது.
2021-ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் டி.டி.வி தினகரன், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ மற்றும் சில அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதனைகளும் விமர்சனங்களும்:
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் இல்லாமல் தனியாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அவரின் சாதனையாகப் பார்க்கப்பட்டது. அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துநின்று மூன்றாவது இடம் பெற்று தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு தனது கட்சியின் துணை அமைப்பாக ``சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு" அணியை உருவாக்கியது போன்றவையும் டி.டி.வி தினகரனின் சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது.

அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பண முதலீடு, சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை, குடும்ப அரசியல், ஊழல் முறைகேடுகள் என டி.டி.வி.தினகரன் மீது ஏராளமான விமர்சனங்கள் உண்டு.