Published:Updated:

அ.ம.மு.க. பட்டியல் வெளியீடு... சிறையில் சசியைச் சந்தித்தாரா, தினகரன்?

நமது நிருபர்

எங்களைப் பொறுத்தவரையில், மாநில அளவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றவர்கள், ஏற்கெனவே அவர்கள் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவிகளை ராஜினமா செய்யவேண்டும்.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்துப் பேசினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கான மாநில, மாவட்ட அளவிலான அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியலை அவரிடம் அளித்தார். மத்திய தேர்தல் கமிஷனுக்கும் முறைப்படி இந்த விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

யார் யார்? நிர்வாகிகள் என்கிற பெயர்கள் அடங்கிய ஃபைலை தினகரனிடம் இருந்து வாங்கிப் படித்துப் பார்த்த சசிகலா, சில கேள்விகளைக் கேட்டாராம். அதற்கு தினகரன் விளக்கம் சொன்னதும், பட்டியலை வெளியிட ஓ.கே. சொன்னாராம் சசிகலா. அதையடுத்து, தற்போது நான்கு பதவிகளுக்கு பெயர்களை அறிவித்திருக்கிறார் தினகரன்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இரட்டை இலை வழக்கைக் காரணம் காட்டி, அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவுக்குப் பதில் தன்னை அறிவித்துக்கொண்டார், தினகரன். அவர் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு தற்போது இரண்டு பேர்களை நியமித்திருக்கிறார், தினகரன்.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

அதாவது, துணைப் பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், தஞ்சாவூர் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கவுண்டர் சமூகத்துக்கு பழனியப்பனும், முக்குலத்தோர் சமூகத்திற்கு ரெங்கசாமியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பொருளாளர் பதவியில் இருந்த ரெங்கசாமி, தற்போது வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டுவிட்டதால், காலியான பொருளாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பழனியப்பன் வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு, திருச்சி மனோகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.-வுக்குத் தாவியதால், அந்தப் பதவிக்கு சி.ஆர்..சரஸ்வதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தினகரன்
தினகரன்

இதுபற்றி கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறும்போது, "அடுத்த சில நாள்களில் மற்ற பதவிகளுக்கான நியமன அறிவிப்புகளைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவிக்கப்போகிறார். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், மாநில அளவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றவர்கள், ஏற்கெனவே அவர்கள் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவிகளை ராஜினமா செய்யவேண்டும். எங்களுடைய கேள்வி இதுதான், 'ஐ.ஜி. பதவியை அடைந்தபிறகு எஸ்.பி. பதவி எதற்கு?' பழனியப்பன், ரெங்கசாமி, மனோகரன், வெற்றிவேல்.. ஆகியோரை மாற்றி புது மாவட்டச் செயலாளர்களை தினகரன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அ.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகளோ, "சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்தார் என்பதே நம்பும்படியாக இல்லை. தினகரனைச் சந்திக்க சசிகலா விரும்பவில்லை என்பதே உண்மை. தன்னுடைய விருப்பப் பட்டியலை சசிகலா பெயரைச் சொல்லி வெளியிட்டுவிட்டார்" என்று கொளுத்திப் போட்டனர்.