Published:Updated:

சசிகலா வரவேற்புக்கு ரூ.192 கோடி செலவழித்தோமா? - தஞ்சை திருமண நிகழ்ச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

திருமண நிகழ்ச்சியில் தினகரன்
திருமண நிகழ்ச்சியில் தினகரன் ( ம.அரவிந்த் )

`ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொல் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார்’’ என்றார் தினகரன்.

`வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காகச் சில சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆட்சியாளர்களின் அதிகாரம் 15 நாள்களில் முடிவுக்கு வந்து விடும்’ என ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தினகரன்
தினகரன்

அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் மா.சேகர். இவரின் மகள் சுருதிக்கும்,டாக்டர் முருகேசனுக்கும் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மா.சேகர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஏற்பாடுகளைச் செய்துவந்தார்.

தஞ்சாவூரிலிருந்து ஒரத்தநாடு வரை தினகரனை வரவேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட அலங்கார வளைவுகளை அமைத்திருந்தனர். சசிகலா விடுதலையான பிறகு தினகரன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், மாநாட்டுக்குப் பந்தல் அமைப்பதுபோல் திருமணப் பந்தலை அமைத்திருந்தனர்.

திருமண நிகழ்ச்சியில்...
திருமண நிகழ்ச்சியில்...

நெற்கதிர்களைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்த நுழைவுவாயில் அனைவரையும் கவர்ந்தது. அத்துடன் விழாப் பந்தல் வரை இருபுறமும் வாழை மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட தினகரனுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினகரன் வந்த வாகனத்துக்குப் பின்னால் பத்துக்கும் மேற்பட்ட கார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களில் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். திருமண மேடைக்கு வந்த தினகரனுக்குச் சிறிய அளவினான வெண்கலத்தில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை, வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டன.

தினகரன் உடன் மா.சேகர்
தினகரன் உடன் மா.சேகர்

பின்னர் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைத்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``இன்றைக்கு அரசியலில் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருப்பதை, அரசியலில் பெரிதும் விழிப்போடு உள்ள ஒரத்தநாடு பகுதி பெருமக்கள் கவனித்துவருகிறீர்கள் என்பதை அறிகிறேன்.

சசிகலா விடுதலை அடைந்தவுடன், தமிழகத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. சசிகலா வருகையின்போது பெங்களூரிலிருந்து சென்னை வரை தமிழக மக்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு
வரவேற்பு

சசிகலா எதற்காக தண்டிக்கப்பட்டார், என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மன்றத்தில் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சசிகலா சதியின் காரணமாகத்தான் சிறைக்குச் சென்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொற்கள் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார். அத்தனையும் சதி. இது உண்மையான தியாகத்துக்குக் கிடைத்த பரிசு.

திருமண நிகழ்ச்சியில் தினகரன்
திருமண நிகழ்ச்சியில் தினகரன்

அ.ம.மு.க ஆரம்பித்தபோது, `எதற்கு இந்தக் கட்சி?’ எனக் கேட்டனர். அது புரியாத சில கோமாளிகளுக்குச் சொல்கிறேன்... ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து, சின்னம் பெற்று தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தானே அ.தி.மு.க-வை மீட்க முடியும்...

இந்த ஆட்சி அதிகாரம் நாங்கள் கொடுத்தது. இந்த நான்காண்டு காலம் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும். கல்லாகட்டி, பர்சன்டேஜ் வாங்கியவர்கள்,`100 சதவிகிதம் சகிகலாவைச் சேர்க்க மாட்டோம். டி.டி.வி.தினகரன் தனிமரம்’ எனக் கூறுகின்றனர்.

ரகசிய சந்திப்பு... தூதுவிட்டாரா சசிகலா?! - சைலன்ட் மோடு வைத்திலிங்கம்; பரபரப்பில் தஞ்சை அ.தி.மு.க

இந்தத் தனிமரத்துக்கு எத்தனை ஆணிவேர் இருக்கின்றன என பெங்களூரிலிருந்து சென்னை வரை பார்த்தீர்களா? உங்களிடம் நாங்கள் வருகிறோம் என யாராவது சொன்னோமா... ஊடகத்தினர் கேட்டால் அவர்களிடம் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு தாவிக் குதிச்சு ஓடுகிறீர்கள். உங்களின் நடவடிக்கையைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருக்கிறவர், அந்தக் கட்சி கொடியைத்தான் கட்டிக்கொண்டு வர முடியும். கொடி தொடர்பாக முடிவு செய்வதெல்லாம் நீதிமன்றமே. சசிகலா வரவேற்புக்கு 192 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறுகிறார்கள். என்னமோ அந்தத் தொகையை இவர்கள் கொண்டுவந்து கொடுத்ததுபோலவே பேசுகின்றனர். வந்திருந்த அனைவரும் சொந்தச் செலவில் குடும்பத்தோடு சின்னம்மாவை வரவேற்க வந்தனர்.

தினகரன்
தினகரன்

இந்த அதிகாரமெல்லாம், இன்னும் 15 தினங்களில் மாறிவிடும். மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவித்தால் தெரிந்துவிடும். மந்திரிகள் என்ற பெயரில் சில மந்திகள் பேசிக்கொண்டு திரிகிறார்கள். என்ன பேசணும் எனத் தெரிந்து பேச வேண்டும். இப்படிப் பேசுபவர்களையெல்லாம் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டும். நம்மோட இலக்கு வேற, தப்பித் தவறி தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், நாமெல்லாம் ஜாலியாக இங்கேயே பேசிக்கிட்டு இங்கிருப்போம். ஆனால், அவர்கள் எங்கிருப்பார்கள் என உங்களுக்குத் தெரியும்.

அ.ம.மு.க ஆரம்பிக்கப்படதே, அ.தி.மு.க-வை மீட்கத்தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, ஜனநாயக வழியில் அந்த இயக்கம் மீட்டெடுக்கப்படும்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``பிரதமர் மோடி தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். அதனால், அவர் தமிழகத்துக்கு வருவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.

வீரவாள் பரிசு
வீரவாள் பரிசு

அ.தி.மு.க-வினர் பேசும் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அம்மாவின் தொண்டர்கள் அ.ம.மு.க-வில்தான் இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும்தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை. டி.டி.வி.தினகரன் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது. எங்களது இலக்கு என்பது அம்மாவுடைய ஆட்சியைக் கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதுதான்.

நமக்கு ஊத்தி கொடுப்பது என்ன குலத் தொழிலா, யாரோ உளறுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கொள்ளைக் கூட்டத்தினர், கொள்ளையர்கள் அடுத்தவர்களைக் கொள்ளையர்கள் என்றுதான் கூறுவார்கள். ஊத்திக் கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊத்திக் கொடுப்பவர் என்றுதான் சொல்லுவார்கள். `இனிமேல் நான் அடிமையாக இருக்க மாட்டேன்’ எனக் கூறுகிறார்கலென்றால் அவர்கள் ஏற்கெனவே அடிமையாக இருந்திருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். சேற்றிலே கல்லைப் போட்டு தனக்குத் தானே அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சியில்
திருமண நிகழ்ச்சியில்

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலம் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தருவார்கள். அ.ம.மு.க-வின் எதிர்காலம் என்பது பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகின்றன. சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ அது கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படியே நடக்கிறது.

டார்கெட் `தினகரன்’.. எடப்பாடி பழனிசாமி சசிகலாவைத்  தவிர்ப்பதன் பின்னணி என்ன? #TNElection2021

சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டரீதியாக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு