Published:Updated:

``2021 தேர்தலில் வியூகம் என்ன?’’ – திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன்

எங்களைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளான எங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அரசியலில் இருந்து தோற்கடித்து, அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதுதான் எங்கள் முதல் நோக்கம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெமினா திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 72-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் பகுதியில் குவிந்தனர்.

அமமுக கூட்டம்
அமமுக கூட்டம்

முன்னதாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த தினகரன், ``தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசிக்கும் கூட்டம் இது. உண்மையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தயாராக இல்லை. யாராவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்று எதிர்பார்த்து, அதற்கு ஆட்களைத் தயார் செய்கிறார்கள் என்கிற தகவல்களும் வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாக சின்னம் பெற்று போட்டியிடுவோம். ஒருவேளை, சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சையாகப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

``உள்ளாட்சித் தேர்தல் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சின்னம் கிடைத்துவிட்டால், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதனால்தான் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் கூட போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வியடைந்துவிட்டதாலே, கட்சி இல்லை என முடிவு செய்துவிட முடியாது. இந்தக் கூட்டத்துக்கு  72 மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார்கள்.

``2021 தேர்தலில் வியூகம் என்ன?’’ – திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன்

தேர்தலை நிறுத்த மாட்டோம் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்படித்தான் வெளியிலே சொல்லுவார். முன்பு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் பின்னாலேயே, தமிழகத் தலைமைச் செயலாளரை விட்டு, தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார்கள். இவர்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுவார்கள் என எல்லோருக்கும் தெரியும்.

என்னைப் பொறுத்தவரை தேர்தல் நடத்துவதற்கு இவர்களுக்கு ஈடுபாடு இல்லை என்பதுதான் உண்மை. ஜனநாயக நாட்டில் அனைவரும் கட்சி ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் ரஜினியும் கமல்ஹாசனும் அரசியலில் கனவு காண்கிறார்கள்'' என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியைப் பலப்படுத்துவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னென்ன என தினகரன் கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகள் பேசுவதைக் கவனமாகக் குறிப்பு எடுத்தார்.

அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகள் இணைவதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூதுவிட்டதாக கூறப்படுகிறது. தூது வந்தது யார், அவர்களிடம் பேசியது என்னவென்பதை அந்தக் கூட்டத்துக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அ.ம.மு.க கூட்டம்
அ.ம.மு.க கூட்டம்

``யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள்தான் எங்கள் எதிரிகள்... துரோகிகள். அவர்களை அரசியலில் இருந்து தோற்கடித்து, ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதுதான் எங்கள் முதல் நோக்கம். அதற்காக முழுமூச்சுடன் செயல்படுவோம். வரும் தேர்தலில் மக்கள் எங்களை முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் காணாமல் போகும். அப்போது தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

``2021 தேர்தலில் வியூகம் என்ன?’’ – திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் எங்களுக்குப் போட்டி அல்ல. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது அதிசயம் என ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார்... இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன். கடந்த  2016 மற்றும் 2017 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்பது அவருக்கே தெரியாது. எப்படி அவர் தவழ்ந்து வந்து பதவியைப் பெற்றார் என்பது அனைவரும் அறிவர். அடுத்த தேர்தலில் மாற்றம் நிச்சயம் வரும். அதைத்தான் நண்பர் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.’’ என்றார்.

Vikatan