
`சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது’ - டி.டி.வி.தினகரன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் வரும் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தச்சூழலில், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒரு வாரமாக அவர் காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நிலையில், நேற்று திடீரென அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவருடைய உறவினர்களுக்கு சிறைத்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. பரப்பன அக்ரஹாராவிலிருந்து பெங்களூரு சிவாஜி நகரிலிருக்கும் பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸிலிருந்து வீல் சேரில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின. இது சசிகலா உறவுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read
தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!
பவ்ரிங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஆக்சிஜன் அளவிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், கர்நாடக உள்துறை அனுமதித்தால் வேறு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படுவார் என்கிறார்கள். சசிகலா சிகிச்சை பெற்றுவரும் பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு விவேக், ஜெயானந்த் உள்ளிட்டோர் சென்றனர்.

மேலும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பெங்களூரு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் நலமாக இருக்கிறார்; அச்சம்கொள்ளத் தேவையில்லை. தேவைப்பட்டால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். சிறைத்துறை மூலம் இது குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வமாகத் தகவல் அளிக்கப்பட்டது. சசிகலாவை நேரில் சந்திப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.