Published:Updated:

யாரையும் நம்பாத தினகரன் முதல் நெல்லையிலிருந்து உதயநிதிக்கு ஓலை வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

``செய்திகள் வாசிப்பது கழுகார்... டொன் டொன் டொயிங்...” என்றபடி உற்சாகமாக என்ட்ரி கொடுத்த கழுகார், ரெடியாகவைத்திருந்த ஸ்கிரிப்ட்டை நீட்டினார்!

``யாரையும் நம்ப முடியவில்லை!”
ரகசியப் பயணம் மேற்கொள்ளும் டி.டி.வி.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீப நாள்களாக `எங்கு செல்கிறேன்... யாரைச் சந்திக்கிறேன்’ என்ற விவரங்களைத் தனக்கு நெருக்கமானவர்களிடம்கூட சொல்வதில்லையாம். சில நாள்களுக்கு முன்னர் அவர் டெல்லி சென்ற விவரமே, அவர் டெல்லி சென்ற பிறகுதான் கசிந்திருக்கிறது. `யாரையும் நம்ப முடியவில்லை. அதனால், நானே அனைத்தையும் முன்னின்று செய்கிறேன்’ என்று இதற்குக் காரணமும் சொல்கிறாராம் தினகரன்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

கடந்த சில நாள்களாக அவரின் செல்போனையும் தொடர்புகொள்ள முடியவில்லை. சாதாரண பட்டன் போன் வைத்துக்கொள்ளும் டி.டி.வி. தினகரன், தான் எங்கிருக்கிறோம் என்று தெரியக் கூடாது என்பதற்காக ஆண்ட்ராய்டு போன்களைத் தவிர்த்துவிடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே விரைவில் மீண்டும் அவர் டெல்லி கிளம்புகிறார். அவர் எங்கிருந்து கிளம்புகிறார், சென்னை டு டெல்லியா, பெங்களூரு டு டெல்லியா என்பதையெல்லாம் வாட்ச் செய்வதற்காக உளவுப்பிரிவில் தனி டீமே உருவாக்கி கவனித்துவருகிறதாம் எடப்பாடி தரப்பு.

சி.சி.டி.வி-யிலகூட சிக்க மாட்டாரு டி.டி.வி!

அழுத்தம் தரும் டெல்லி
பதறும் தி.மு.க காட்சி ஊடகம்

தி.மு.க தரப்பு காட்சி ஊடகத்தினர் இப்போதே பதற்றத்தில் இருக்கிறார்கள். காரணம், 2ஜி வழக்கு விவகாரம். அந்த வழக்கு விவகாரம் ஏற்கெனவே உயிர்பெற்றிருக்கும் நிலையில், டெல்லியிலிருந்து வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறதாம். இதனால், எப்போது வேண்டுமானாலும் தி.மு.க-வின் காட்சி ஊடகத்துக்கு சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.

Representational Image
Representational Image

இதையடுத்து, இப்போதே மூன்றெழுத்தில் மற்றொரு பெயரில் ஊடக நிறுவனத்தை உருவாக்கி, `லைஃப் போட்’ கணக்காக ரிசர்வ் செய்துவைத்திருக்கிறதாம் தி.மு.க ஊடகத் தரப்பு.

கட்டுமரம் ரெடின்னு சொல்லுங்க!

எழுவர் விடுதலை...
கொந்தளித்த வேலுச்சாமி!

எழுவர் விடுதலையை ஆதரித்து, திருச்சி வேலுச்சாமி தொடர்ச்சியாகப் பேசிவருவதால், `அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. இந்தநிலையில், அவருக்குக் கொடுப்பதாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவைச் சந்தித்து சில நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்களாம்.

வேலுச்சாமி
வேலுச்சாமி

இது குறித்து வேலுச்சாமியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார். அப்போது, `எழுவர் விடுதலையை ஆதரிக்கும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால், விடுதலைக்கு ஆதரவாக நான் பேசக் கூடாதா? அப்படித்தான் பேசுவேன்’ என்று முகத்துக்கு நேராகக் கொந்தளித்துவிட்டாராம் வேலுச்சாமி.

கொள்கைச்சாமி!

சிக்கலில் சத்யா...
வெடிக்கத் தயாராகும் குளறுபடி!

ஏற்கெனவே, சென்னை மாநகராட்சியின் இறகுப்பந்து மைதானம் கட்டியதில் பணத்தை அடித்துவிட்டார் என்று தி.நகர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான சத்யா மீது புகார் எழுந்திருக்கும் நிலையில், இப்போது இன்னொரு புகார்... கொரோனா பாதிப்பு காலத்தில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. இந்தப் பணியை சத்யா தரப்புக்கு நெருக்கமான நிறுவனத்தின் பெயரிலும், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரின் மகன் பெயரிலும் எடுத்தார்களாம். உணவுத் தொழிலுக்குச் சம்பந்தமே இல்லாத சத்யா தரப்பின் நிறுவனம், இந்த ஆர்டரை எடுத்து வேறு சில உணவு நிறுவனங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கான பில் தொகை உடனுக்குடன் ரிலீஸ் செய்யப்பட்டதாம். இதில் பெரிய அளவில் குளறுபடி நடந்திருப்பதாக தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம் என்கிறது அறிவாலயம் தரப்பு.

`சத்ய’ சோதனை!

``தீர விசாரிக்காமல் யாரையும் சேர்க்காதீங்க...’’
நெல்லையிலிருந்து உதயநிதிக்கு ஓலை!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் திடீரெனப் புகுந்து பொங்கல் விழாவைத் தடபுடலாகக் கொண்டாடியிருக்கிறார் மன்னரின் பெயரைக்கொண்ட நபர் ஒருவர். இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க நடத்தியபோது, அந்தக் கட்சியில் உறுப்பினரான அவர், அம்பாசமுத்திரம் தொகுதியைக் குறிவைத்து செலவழிக்க ஆரம்பித்திருக்கிறாராம். தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதியுடன் நெருக்கமாக இருப்பதுபோல இவர் காட்டிக்கொள்வதால், மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பன் தரப்பு கொந்தளிப்பில் இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Twitter

இதையடுத்து உதயநிதியின் கவனத்துக்கு, `இவர் யாரென்றே தெரியவில்லை. இவர்மீது ஏற்கெனவே மோசடிப் புகார்கள் இருக்கின்றன. விசாரிக்காமல் யாரையும் அண்ட விடாதீர்கள். உங்கள் பெயரைப் பயன்படுத்தி எங்களையே மிரட்டத் துணிகிறார்’ என்று திருநெல்வேலியிலிருந்து ஓலை போயிருக்கிறதாம். மன்னர் நபரை நோட்டம்விட ஆரம்பித்திருக்கின்றன திருநெல்வேலி தி.மு.க கழுகுகள்.

ஒரே ஒரு `மன்னர்’ வர்றார்... வழி விடாதீங்கோன்னு ஓலை போயிருக்குமோ!

அயோத்தி வசூல்!
பா.ஜ.க-வின் பலே கணக்கு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணியைப் பிரசார இயக்கமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க முடிவு செய்திருக்கின்றனவாம். இதற்காக 10, 100, 1,000 ரூபாய்களில் ரசீது அச்சிட்டு, வசூலில் இறங்க முடிவெடுத்திருக்கிறார்களாம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களிடமும் குறைந்தபட்சம் 10 ரூபாயாவது பெற்று, அதன் மூலம் மக்களிடம் எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்

``கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க ஒரு ரூபாய் வீதம் நாடு முழுவதும் வசூல் செய்தோம். இதன் மூலமாக இந்துக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. அதுபோல அயோத்தியில் ராமர் கோயிலுக்கும் வசூலித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்’’ என்று சூளுரைத்திருக்கிறதாம் ஆர்.எஸ்.எஸ். இதில் அரசியல் கணக்கு போடும் பா.ஜ.க-வோ, இதன் விற்பனைக் கணக்கைக் கூட்டணிக் கட்சிகளிடம் காட்டி, `எங்களுக்கு எவ்வளவு ஓட்டுவங்கி இருக்கிறது பாருங்கள்...’ என்று கணக்கு காட்டவும் தயாராகிறதாம்.

ஓட்டுக்குக் காசு கொடுக்குறதைப் பார்த்திருக்கோம்... காசு வாங்குறதை இப்போதான் பாக்குறோம்... நல்லா வருவீங்க ஜி!

மீண்டும் புகைச்சலில் மயிலாடுதுறை!

பூம்புகார் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பவுன்ராஜ். புதிதாக உருவான மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்குமென எதிர்பார்த்திருந்தார். ஆனால், மயிலாடுதுறை நகரச் செயலாளராக இருந்த செந்தில்நாதன், மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார். இதில் அதிருப்தியடைந்த பவுன்ராஜ், தான் ஒட்டும் சுவரொட்டிகளில் செந்தில்நாதன் படத்தைப் போடுவதில்லை.

துரை தயாநிதியின் சட்டப் போராட்டம் டு பார்த்திபனுக்கு விட்டுக்கொடுத்த சீமான் வரை - கழுகார் அப்டேட்ஸ்

இந்த விவகாரம் தலைமை வரை புகாராகச் சென்று பவுன்ராஜ் கண்டிக்கப்படவே, பூசல் தணிந்திருந்தது. தற்போது பொங்கலுக்காகத் தொகுதி மக்களுக்கு பவுன்ராஜ் அனுப்பிய வாழ்த்து கடிதத்திலும், காலண்டரிலும் செந்தில்நாதனின் படம் இல்லையாம். மயிலாடுதுறையில் மீண்டும் புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.

செந்தில்நாதன் கோஷ்டியினர் இப்போ `டௌன்’ ராஜ்... `டௌன்’ ராஜ்னு கோஷம் எழுப்புவாங்களோ!

``அமைச்சர்கள் என் கால்ல விழுந்தாங்க!’’
புலம்பிய திவாகரன்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனவரி 17-ம் தேதி மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து தனது அண்ணா திராவிடர் கழக அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். அப்போது அங்கிருந்த தன் ஆதரவாளர்களிடம், ``ஜெயலலிதா இறந்த பிறகு பன்னீரை முதல்வராக ஆக்கினேன்.

திவாகரன்
திவாகரன்

அப்போ அமைச்சர்கள் பலரும் என் கால்ல விழுந்தாங்க. ஆனா, அவங்களே இன்னிக்கு திவாகரன் யார்னு கேக்குறாங்க. அ.தி.மு.க பொதுச்செயலாளர் தொடர்பா உச்ச நீதிமன்றத்துல நடந்துவரும் வழக்குல, இன்னும் பத்து நாள்ல தீர்ப்பு வந்துடும். அது நமக்குச் சாதகமாகவே இருக்கும். திரும்பவும் எல்லோரும் நம்மகிட்டதான் வரப்போறாங்க’’ என்று பேசினாராம்.

விஷயம் எடப்பாடிக்கு தெரிஞ்சா... `தம்பி, கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க’ன்னு சொல்வாரில்ல!

அடுத்த கட்டுரைக்கு