Published:Updated:

சென்டிமென்ட் தினகரன்; உற்சாக சசிகலா! -`புதுப் பாய்ச்சலுக்குத் தயார்’ ஆரூடம் சொல்லும் உறவுகள்

தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷின் வீட்டில் பெண் மறு அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சசிகலா காலையிலேயே வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்றார். மிக முக்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சசிகலா, தினகரன்மேல் கோபமாக இருக்கிறார். இருவருக்கும் இடையே அரசியல்ரீதியாக பெரிய அளவிலான கருத்து வேறுபாடு நிலவிவருவதாக வெளியே தகவல்கள் பரவிய நிலையில், தன் மகள் திருமணத்தின் மூலம் அவை பொய் என நிரூபிக்கப்பட்டிருப்பதாக தினகரனும், பழையபடி உற்சாகமான சசிகலாவைப் பார்க்க முடிவதாகவும், நாம் எதிர்பார்த்த நல்ல நாள் சீக்கிரமே வரப்போவதாக சசிகலா கண்சிமிட்டிப் பேசியதாகவும் தஞ்சாவூரிலுள்ள அவரது குடும்ப உறவினர்கள் உற்சாகமாகக் கூறிவருகின்றனர்.

ஜெயலலிதா மடியில் குழந்தையாக ஜெயஹரிணியுடன் சசிகலா
ஜெயலலிதா மடியில் குழந்தையாக ஜெயஹரிணியுடன் சசிகலா

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த பாரம்பர்யமிக்க குடும்பங்களில் ஒன்றான, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி-யான மறைந்த துளசி அய்யா வாண்டையாரின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா வாண்டையாருக்கும் கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலையில் சசிகலா தலைமையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

தினகரனின் ஒரே செல்ல மகள் ஜெயஹரிணி. கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தின் வீட்டு விசேஷங்கள் என்றாலே பிரமாண்டமாத்துக்குத் துளியும் குறைவிருக்காது. இரண்டு குடும்பங்கள் இணையும்போது திருமண ஏற்பாடுகள் வேற லெவலில் இருக்க வேண்டும் என்று தேதி நிச்சயம் செய்யப்பட்ட நாளிலேயே இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால் கால சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காத நிலையில், எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தினகரன் ரொம்பவே ரிலாக்ஸாக இருக்கிறார். தனக்கும் சசிகலாவுக்கும் பெரிய அளவிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியே செய்திகள் பரவின. ஆனால், சசிகலா முழுமையாக கூடவே இருந்து திருமணத்தை நடத்திவைத்திருக்கிறார். அதேநேரத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற பெண் மறு வீடு அழைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருக்கிறார் சசிகலா.

திருமணத்தில் சசிகலா
திருமணத்தில் சசிகலா

``இது சசிகலா என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பாசமும் துளியும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. தேவையில்லாமல் எனக்கும் சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே பரப்பி, அதன் மூலம் குளிர்காய நினைத்தனர். அவர்களின் முயற்சியும் பொய்யாகியிருக்கிறது. இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என தினகரன் தனக்கு நெருக்கமான உறவினர்கள் சிலரிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருப்பதாக சசிகலா உறவுகள் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினகரன் மகள் திருமணம்:
கலந்துகொள்ளாத திவாகரன்;  மெளனம் காத்த சசிகலா!

இது குறித்து சசிகலா குடும்ப உறவுகள் வட்டாரத்தில் பேசினோம். ``சொந்தம் விட்டுப்போகக் கூடாதுனு எப்போதும் நினைப்பவர் சசிகலா. உறவுகளுக்கு அவர் கொடுக்கிற முக்கியத்துவம் மாதிரி யாராலும் கொடுக்க முடியாது. சொந்தங்கள் இணைந்திருக்க வேண்டும் என, தன் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை அக்கா வனிதாமணியின் மகனான தினகரனுக்கு திருமணம் செய்துவைத்தார். தினகரன், அனுராதா தம்பதிக்குச் சில ஆண்டுகள் குழந்தை இல்லை.

அனுராதா தினகரன்
அனுராதா தினகரன்

திருவண்ணாமலை கோயில் மீதும், அங்கிருந்த மறைந்த மூக்குப்பொடி சித்தர் மீதும் தனி பக்தி கொண்டிருந்தார் தினகரன். திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்ட பிறகுதான் செல்ல மகள் ஜெயஹரிணி பிறந்தார். திருவண்ணாமலை கோயில் சந்நிதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மடியில்வைத்தே ஜெயஹரிணிக்கு காதணி விழா நடந்தது. அந்த சென்டிமென்ட் காரணமாகவே திருமணத்தை திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்தார்.

கடந்த 15-ம் தேதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது திருவண்ணாமலையில் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது தினகரனை அழைத்த சசிகலா, `நல்ல சகுனம். உன் பொண்ணு நல்லாயிருப்பா’ என்று சொன்னார். தினகரனுக்கு அடுத்த நாள் என்னவாகுமோ என்கிற பயம். ஆனால் அடுத்த நாள் காலை சொட்டு மழையில்லை. திருமணமும் எளிமையாகவும் அதேநேரத்தில் விமர்சையாகவும் நடந்து முடிந்தது.

சசிகலா
சசிகலா

ஏகப்பட்ட கோயில்களிலிருந்து பூஜைகள் செய்யப்பட்ட மாலைகள் மணமக்களுக்கு அணிவிக்கப்பட்டன. மணமகள் ஜெயஹரிணியின் கழுத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாலைகள் போடப்பட்டிருந்தன. மாலை வெயிட் தாங்காமல் கழுத்துவலியால் ஜெயஹரிணியின் முகம் மாறுவதை கவனித்த, மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த சசிகலா, மேலே சென்று தானே அந்த மாலைகளை ஒவ்வொன்றாக எடுத்த பிறகு சடை உள்ளிட்டவற்றைச் சரிசெய்தார். 20 வருடங்களுக்கு முன்பு வீட்டு விஷேசம் என்றால் சசிகலா எப்படி இருப்பாரோ, அன்று அப்படி இருந்ததை எல்லோரும் பார்த்தோம். சசிகலா கிட்டத்தட்ட கால்மணி நேரத்துக்கு மேலாக தன் மகள் ஜெயஹரிணிக்கு உதவியதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரில் தினகரன் கலங்கினாராம்.

மணமக்கள் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் இருப்பதால் அன்று மாலையே தினகரன் உள்ளிட்டவர்கள் தஞ்சாவூர் புறப்பட்டனர். சசிகலாவிடம் சென்ற தினகரன், `தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் பெண் அழைப்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார். மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையாரும் அழைத்தார். `நிச்சயம் வருகிறேன்’ எனச் சொன்னவர், நிகழ்வுக்கு முந்தைய நாள் மாலை தஞ்சாவூர் வந்து கணவர் ம.நடராசனால் கட்டப்பட்ட தன் இல்லத்தில் தங்கினார் சசிகலா.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

பின்னர் நேற்று மதியம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷின் வீட்டில் பெண் மறு அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சசிகலா காலையிலேயே டாக்டர் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்றார். சசிகலா வந்திருப்பதால் மிக முக்கியமான உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எல்லோரிடத்திலும் சிரித்தப்படி சசிகலா சகஜமாகப் பேசியதைப் பார்த்துப் பலரும் வியந்தனர். கலகலவென்று இருப்பதுதான் அவருடைய சுபாவம். ஆனால் சூழ்நிலையால் அவை சில வருடங்களாக மிஸ் ஆகிவிட்டன. இப்போது பழைய சசிகலாவைப் பார்க்க முடிவதாக உறவினர்கள் உற்சாகமாகினர். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் ஓடிச்சென்று வரவேற்றார். மணமகனுக்குத் தன் கையால் உணவு வைத்தார். அப்போது `ஜெயா செல்லமா வளர்ந்தவள். அவளை நல்லா பார்த்துக்கணும்ப்பா’ என்று கூறினாராம்.

இந்தச் சம்பந்தம் முடிவானதுமே, அப்போது சிறையில் இருந்த சசிகலாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. `பாரம்பர்யமான குடும்பத்துல நம்ம பொண்ணைக் கொடுக்கிறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும். நல்ல சம்பந்தம். விட்டுறாதே’ என்று சசிகலாதான் தினகரனை ஆர்வப்படுத்தினார். அதேபோல், தேதி குறிக்கப்பட்டு சில சூழ்நிலைகளால் இரண்டு முறை திருமணம் தள்ளிப்போனதை எண்ணி தினகரன் கலங்கினார். அப்போதும் சசிகலா நல்லபடியா நடக்கும் என்று தெம்பூட்டினாராம்.

சசிகலா
சசிகலா

`மகள் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக முடிந்துவிட்டது. இதுக்காகத்தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இனி அரசியலில் முழு வேகத்துல இறங்கிப் பார்க்கணும்’ என தினகரன் கலகலப்பாகக் கூறியிருக்கிறார். `எதுவா இருந்தாலும் அவசரப்படாம செய்’ என்று சசிகலா கூறினார். கொரோனா முடிந்த பிறகு சுற்றுப்பயணம் செய்ய சசிகலா திட்டமிட்டிருந்தார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளிடம் போனில் பேசிவந்தார். எதுவும் கைகூடி வரவில்லை. இப்போது சத்தமில்லாமல் சில மூவ்கள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதனால்தான் சசிகலாவைப் பழையபடி உற்சாகமாகப் பார்க்க முடிகிறது.

சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்:  நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!

சசிகலா தஞ்சாவூரில் இரண்டு நாள் தங்கியிருந்தார். `இதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். என்னைப் பார்க்கவும் யாரையும் அனுமதிக்காதீர்கள்’ என்று வரும்போதே சொல்லியிருக்கிறார். தகவல் தெரிந்து பார்க்கச் சென்றவர்களையும் சந்திக்கவில்லையாம். `எல்லோரையும் நானே அழைச்சு பார்க்கக்கூடிய நாள் சீக்கிரமே வரப்போகுது’ என்று மட்டும் சொன்னாராம். மொத்தத்தில் சசிகலா சில வாரங்களாகவே ரொம்பவே உற்சாகமாகக் காணப்படுவதாகவும், புதுப் பாய்ச்சலுக்கு அவர் தயாராகி வருகிறார் என்றே தெரிவதாகவும் சொல்கிறார்கள் உறவினர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு