`ஓ.பி.எஸ் ராவணனிடம் சேர்ந்துவிட்டார்; இனிதான் பிரச்னை ஆரம்பம்!' - டி.டி.வி.தினகரன்

`எங்களுடைய ஒரே இலக்கு மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்பது மட்டும்தான். ஆட்சி சிறப்பாக நடத்தியிருந்தால் ஏன் தினம தோறும் விளம்பரம் கொடுக்க வேண்டும்?’ - தினகரன்.
``ஓ.பி.எஸ் தன்னை பரதன் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். ஓ.பி.எஸ்., ராவணனிடம் சென்று சேர்ந்துவிட்டார். அப்படிச் சேராமல் இருந்திருந்தால் மீண்டும் அவர் பிப்ரவரியில் பரதனாகியிருக்கலாம். அவர் சேர்ந்த இடம்தான் அவருக்குப் பிரச்னையை ஏற்படுத்தப்போகிறது. தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசாக இருக்கிறது. ஆட்சி சிறப்பாக நடத்தியிருந்தால் ஏன் தினம்தோறும் விளம்பரம் கொடுக்க வேண்டும்" என்று அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் டி.டி.வி.தினகரன்.

அ.ம.மு.க வின் மாநிலப் பொருளாளரும், தமிழக அரசின் முன்னாள் கொறடாவுமான மனோகரனின் தாயார் ராமலெட்சுமி அம்மாள், நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். திருச்சியிலுள்ள, மனோகரனின் வீட்டிலிருக்கும் அவரது தாயாரின் உருவப்படத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவரை பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். ஓ.பி.எஸ் ராவணனிடம் சென்று சேர்ந்துவிட்டார். அப்படிச் சேராமல் இருந்திருந்தால், மீண்டும் அவர் பிப்ரவரியில் பரதனாகியிருக்கலாம். அவர் ராவணனிடம் சேர்ந்ததுதான் பிரச்னையே. அந்த ராவணனால் அவருக்கும் பிரச்னை நாட்டுக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசு வெற்றிநடை போடவில்லை. இது தள்ளாடும் அரசு. இந்த அரசு செய்த எந்தத் திட்டமும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. அதனால்தான் விளம்பரம் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யாத அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுப்பார்களா? ஆட்சி சிறப்பாக நடத்தியிருந்தால் ஏன் தினம்தோறும் விளம்பரம் கொடுக்க வேண்டும்...

இந்த ஆட்சியில் எந்தத் திட்டத்தை உருப்படியாகச் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? மேலும், நாங்கள் எப்போதும் யாரையும் விமர்சிக்கத் தேவையில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வோம். அ.தி.மு.க-விலுள்ள அமைச்சர்கள் கூறும் எந்த விமர்சனத்துக்கும் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் எங்களுக்கில்லை..
மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும், நிறைய தீமைகளும் இருக்கின்றன. அதேபோல அ.தி.மு.க அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை அத்திப்பூத்தாற்போல் செய்திருக்கலாம். அது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களாக,110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவையாக இருக்கும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் 15 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததைப்போல நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. தப்பித் தவறி தி.மு.க ஆட்சிக்கு வந்தால்... வராது... அப்படி வந்தால்கூட எங்கள் அரசியல் பணி தொடரும். பா.ஜ.க-விடம் நாங்கள் கைகோத்து இருக்கவில்லை. தேவையான நேரத்தில் மட்டுமே நாங்கள் அவர்களையும் விமர்சனம் செய்வோம். சிலரைப்போலத் தேவையில்லாமல் யாரையும் விமர்சிக்க மாட்டோம்.

எங்களுடைய ஒரே இலக்கு மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்பது மட்டும்தான். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.க-வைக் கைப்பற்றும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்லீப்பர் செல் என்று சொல்லக்கூடியவர்கள் எம்.எல்.ஏ-வோ அமைச்சர்களோ அல்ல. அடிப்படையில் சாதாரணத் தொண்டர்கள்தான் எங்களுடைய ஸ்லீப்பர் செல் என்பவர்கள். அதை நீங்கள் சின்னம்மாவின் வருகையின்போது பார்த்திருப்பீர்கள்” என்றார்.