Published:Updated:

பிரமாண்ட ஏற்பாடுகள்... குறைந்த அளவு விருந்தினர்கள்! எளியமுறையில் நடந்த தினகரன் மகள் நிச்சயதார்த்தம்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

திருமணத் தேதியை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகு திருமணத் தேதி குறிக்கப்படும் என தினகரன் தரப்பில் தெரிவித்தனர்

`டி.டி.வி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பங்களில் ஒன்றான காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று இரவு கும்பகோணம் சுவாமிமலையிலுள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்த விழாவில்
நிச்சயதார்த்த விழாவில்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்வதற்காக இருதரப்பிலும் பேசி முடிவு செய்திருந்தனர்.

பொட்டு, பூ வைத்தல், மாப்பிள்ளை வீடு பார்ப்பது என வழக்கமான நடைமுறைகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது நிச்சயார்த்தம் நடத்துவதற்கான தேதி குறித்து தினகரன் மற்றும் கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்பில் பேசப்பட்டது.

தினகரன் தம்பி பாஸ்கரன்
தினகரன் தம்பி பாஸ்கரன்

அப்போது தினகரன், `எங்க குடும்பத்துக்கு எல்லாமே சின்னம்மா சசிகலாதான். அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் கைகூடிவருகின்றன. சசிகலா வந்த பிறகு, அவர் முன்னிலையில் நிச்சயதார்த்தை வைத்துக்கொள்ளலாம்' எனச் சொல்ல, மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், சசிகலா விடுதலை பல காரணங்களால் தடைப்பட்டு தள்ளிபோய்க்கொண்டேயிருந்தது. குறிப்பாக, ஜனவரி மாதம் 27-ம் தேதிதான் சசிகலா வெளியே வருவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தினகரன், `எளிய முறையில் நிச்சயதார்த்த விழாவை நடத்திவிடலாம். கல்யாணத்தை சசிகலா தலைமையில் பிரமாண்டமாக நடத்தலாம்’ என முடிவு செய்தார்.

மகள் நிச்சயதார்த்த விழாவில் தினகரன் தனது மனைவியுடன்
மகள் நிச்சயதார்த்த விழாவில் தினகரன் தனது மனைவியுடன்

அதன்படி, நவம்பர் 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்ததுடன், குறைந்த அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு மிகவும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன. சுவாமிமலை அருகேயுள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எளிய முறையில், அதே நேரத்தில் பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதற்காக ரிசார்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மின்னொளியில், அலங்கார நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. மயில் போன்ற வடிவில் விழா மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் டாக்டர் சிவக்குமார், அ.ம.மு.க-வின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரெங்கசாமி என மொத்தமே 60 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். சசிகலா தம்பி திவாகரன் இதில் கலந்துகொள்ளவில்லை.

சசிகலா தலைமையில் திருமணம்... மகள் நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டில் தினகரன்!

மாப்பிள்ளை வீட்டார் பிரமாண்ட முறையில் சீர்வரிசைத் தட்டு எடுத்து வந்தனர். தினகரன் மனைவி அனுராதா ஓடோடிச் சென்று அவர்களை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை தினகரனிடம் அறிமுகம் செய்துவைத்தார்.

நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே மேடையில் உட்காரவைத்து உறவினர்கள் அவர்களுக்குப் பொட்டுவைத்து வாழ்த்துவது தற்போதைய வழக்கம். ஆனால், பழைய வழக்கப்படியும், பாரம்பர்ய முறைப்படியும் பெண் மட்டுமே மேடையில் அமரவைக்கப்பட்டார். ஜெயஹரிணிக்கு உறவினர்கள் சந்தனம், பொட்டுவைத்து வாழ்த்தினர்.

சசிகலா
சசிகலா
எம். விஜயகுமார்

மேடைக்கு எதிரே மாப்பிள்ளைக்காக வைக்கப்பட்டிருந்த சேரில் அமர்ந்து அனைத்தையும் மாப்பிள்ளை ராமநாதன் துளசி அய்யா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வயதான பெண் ஒருவர் வீல்சேரில் நிகழ்ச்சி நடைபெற்ற ஹாலுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.

ஜெயஹரிணி ஓடிச் சென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டதும் அந்தப் பெண்மணி தலையில் கைவைத்து ஆசி வழங்கினார். சடங்குகள் முடிந்ததும், டாக்டர் சிவக்குமாரிடம் நீண்டநேரம் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டிருந்தனர். மகளுக்கு நல்லபடியாக நிச்சயதர்த்தம் நடந்து முடிந்த பூரிப்பு தினகரன் அனுராதா முகத்தில் தெரிந்தது. அ.ம.மு.க-வின் தஞ்சை மாநகரச் செயலாளரான ராஜேஸ்வரன், தினகரன் தர்ப்பில் அனைத்து வேலைகளையும் ஓடி ஓடிச் செய்துகொண்டிருந்தார்.

விழாவில்
விழாவில்

வரும் தை மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால், திருமணத் தேதியை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகே திருமண தேதி குறிக்கப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவரின் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் இருக்கிறார்.

`கழகங்களை பஞ்சராக்கும் தினகரன், சீமான், கமல் கட்சிகள்!’ - தேர்தல் நம்பர் கேம் #TNElection2021

இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் தினகரனின் ஒரே செல்லமகள் ஜெயஹரிணியை பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் அணுகினர்.

இதை தினகரன் சசிகலாவுக்குத் தெரியப்படுத்தினார். துளசி அய்யா வாண்டையார் மீது பெரும் மதிப்புகொண்ட சசிகலா, `கல்விச் சேவை புரிந்த பெரியவர். அவருக்கென தனி நற்பெயரே உண்டு. அவர்களிடத்தில் சம்மதம் வைத்துக்கொள்வது நமக்குப் பெருமை நல்ல இடமும்கூட’ எனக் கூறியதுடன் இந்த சம்மதத்துக்கு டபுள் ஓகே சொன்னார். அதன் பிறகே இதற்கான பணிகள் வேகமெடுத்தன’’ என்றனர்.

தினகரன் மகள் நிச்சயதார்த்த விழாவில்
தினகரன் மகள் நிச்சயதார்த்த விழாவில்

விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் `இந்த இடத்துல சசிகலா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்... அவர் வந்துவிடுவார் என ரொம்பவே எதிர்பார்த்தோம். ஆனால் நடக்காமல் போய்விட்ட’து என அவர் நினைவில் மூழ்கினர். அதேநேரத்தில் துளசி அய்யா வாண்டையாருக்கு இந்தச் சம்பந்தத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. பேசி முடிப்பதற்காக பாண்டிச்சேரியிலுள்ள தினகரன் பண்ணை வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார் சென்றபோதும் துளசி அய்யா வாண்டையார் செல்லவில்லை.

அப்போது நிச்சயதார்த்த விழாவில் துளசி அய்யா வாண்டையார் கலந்துகொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போதும் அவர் கலந்துகொள்ளாது பலரது கேள்வியாக இருந்ததுடன், பலரும் இதைப் பற்றியே பேசியபடியும் இருந்தனர்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்பில், `மாப்பிள்ளையான பேரன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் துளசி அய்யா வாண்டையார். வேறு சில காரணங்களால் அவரால் நிச்சயதார்த்தில் கலந்துகொள்ள முடியவில்லை. நிச்சயம் திருமணத்தில் கலந்துகொள்வார். துளசி அய்யா வாண்டையார் மற்றும் சசிகலா தலைமையில் பிரமாண்டமாக இந்தப் பெரிய இடத்து கல்யாணம் நடைபெறும்’ எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு