Published:Updated:

"விகடனுக்குப் பேசி நாளாச்சு..." - பேட்டிக்குத் தயாரான தா.பாண்டியனின் கடைசி உரையாடல்!

தா.பாண்டியன்
தா.பாண்டியன்

வியாழக்கிழமைதான் தா.பா வாழ்க்கையில் கடைசியாகப் பேசிய நாளுமாக அமைந்து விட்டது. கடைசியாக மருத்துவமனையில் செவிலியர்களிடம், "என் சிவப்புத் துண்டை என்கிட்டக் கொடுத்துடுங்கம்மா" எனக் கேட்டிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார்.

கடந்த 24.2.21 ஆனந்த விகடன் இதழில் தா.பாண்டியனின் பேத்தி ஹேனா டேனியலின் பேட்டி வெளியாகியிருந்தது. அந்த இதழ் வெளியான அன்று மதுரையில் கட்சியின் மாநாட்டில் இருந்தவர் ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்து விட்டுப் பேத்திக்குப் பேசினாராம்.

தோழர் தா.பாண்டியன்
தோழர் தா.பாண்டியன்
விகடன் TV: “ஸாரிங்க, நான் எந்த சாரியும் இல்லை!”

''பேட்டி நல்லா வந்திருக்குடா... தாத்தாவுடன் முரண்படுற விஷயத்தையெல்லாம் பேசியிருக்கீங்க, சபாஷ்'' என்றாராம்.

முன்னதாக ஹேனா டேனியலிடம் பேட்டிக்காகப் பேசியபோது, ”தாத்தா அரசியல் விஷயங்களைச் சொல்லித் தருவாரா?" எனக் கேட்டிருந்தோம்.

''அப்பப்ப பேசுவார். சமீபமா ராஜீவ்காந்தி கொலை வழக்குல தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விடுதலை குறித்தப் பேச்சு போயிட்டிருக்கிறதால அந்த நினைவுகள் பத்தி நிறையப் பேசுவார். ராஜீவ்காந்தியுடன் 1991, மே பொதுக்கூட்ட மேடையில் இருந்து, அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் அவரும் ஒருவர் எனச் சொல்லியிருந்தார்.

அப்போதே ஆனந்த விகடனுக்கு தா.பா-வின் பேட்டி கேட்டிருந்தோம். ஹேனாவும் தனது தாத்தாவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

தா.பாண்டியனுடன் ஹேனா டேனியல்
தா.பாண்டியனுடன் ஹேனா டேனியல்

"பேசலாமே... பேட்டிக்கு உட்கார்ந்தா உடலுக்கும் தெம்பு வரும். விகடனுக்குப் பேசியும் ரொம்ப நாளாச்சு. இந்த வார இறுதியில பேசலாம்னு சொல்லு" எனச் சொன்னவர், என்ன நினைத்தாரோ, வியாழக்கிழமை (25/2/21), "என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அவங்களை வரச் சொல்லுடா" என அப்போது ஹேனாவிடம் சொல்லியிருந்தாராம்.

அந்த வியாழக்கிழமைதான் தா.பா தன் வாழ்க்கையில் கடைசியாகப் பேசிய நாளுமாக அமைந்து விட்டது. ஆமாம், நேற்றுதான் கடைசியாக மருத்துவமனையில் செவிலியர்களிடம் ‘என் சிவப்புத் துண்டை என்கிட்டக் கொடுத்துடுங்கம்மா’ எனக் கேட்டிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசத் தயாராகயிருந்த தா.பாண்டியனை இயற்கை எடுத்துக்கொண்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு